Published : 25 Mar 2019 05:25 PM
Last Updated : 25 Mar 2019 05:25 PM
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் 181 ரன்கள் இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆந்த்ரே ரஸல் கடைசி ஓவர்களில் சன்ரைசர்ஸுக்குக் கொடுத்த அதிர்ச்சி மருத்துவ அதிரடி பேட்டிங்கினால் வென்றது.
கடைசி 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் எந்த அணியும் வென்றதில்லை. ஆனால் ஆந்த்ரே ரஸல் 19 பந்துகளில் 49 ரன்களையும் ஷுப்மன் கில் 10 பந்துகளில் 18 ரன்களையும் விளாச சன் ரைசர்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
மேலும் சன் ரைசர்ஸ் 180 ரன்களுக்கும் மேல் அடித்து இருமுறைதான் தோற்றுள்ளது. சிறந்த லெக்ஸ்பின்னரான ஆப்கானின் ரஷித் கான் 4 ஓவர்களில் 26 ரன் 1 விக்கெட் என்று அசத்தினார், இவரது கோட்டா 16வது ஓவருடன் முடிந்த நிலையில் கொல்கத்தா வெற்றி பெற்றால் அது ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான் உண்டு என்ற நிலை இருந்தது.
புவனேஷ்வர் குமார் ஓவரை அடிப்பது கடினம், அனுபவ பவுலர், இந்திய அணியே டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக அவரை நம்பியுள்ள போது அவரை அடித்து வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்தது, அதுவும் நேற்று அவர் முதல் 3 ஒவர்களில் 16 ரன்களையே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டியிருந்தார்.
ஆனால் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமார், 21 ரன்களைக் கொடுத்தார், முதல் பந்தே லெக் ஸ்டம்பில் விழ ஒரு காலை ஒதுக்கிக் கொண்டு ரஸல் பந்தை மாட்டடி அடித்து எல்லைக் கோட்டைக் கடந்து நான்குக்கு அனுப்பினார். அடுத்த பந்தும் அதே போல் புவனேஷ்வர் லெக் ஸ்டம்பில் புல்லாக வீச மீண்டும் ஒரு காலை விலக்கிக் கொண்டு அதே மிட்விக்கெட்டில் இம்முறை சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்து யார்க்கர் தவறியது லாங் ஆஃபில் பச் என்று அறைந்தார் ரஸல். அடுத்த பந்தை வைட் ஆஃப் ஸ்டம்பில் வீச ரஸலால் ஒன்றும் செய்ய முடியவில்லை, இது போன்ற பந்துகள்தான் முக்கியமானது. அடுத்த பந்தையும் வைடாகத்தான் வீசினார், ரஸல் அதை அடிக்கும் முயற்சியில் பேலன்ஸும் இழந்தார் ஆனாலும் பந்து ஆஃப் திசையில் சிக்சருக்குப் பறந்தது, அதிசய ஷாட், அதிசய சிக்ஸ் அது. 21 ரன்கள் வந்தது அந்த ஓவரில்.
புவனேஷ்வர் குமார் கடந்த இரு ஐபிஎல் தொடர்களில் டெத் ஓவர்களில் ஓவருக்கு 8.95 என்று கொடுத்து வந்தவர் அதன் பிறகு ஓவருக்கு 10.87 என்று ரன்களை விட்டுக் கொடுத்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நடந்து முடிந்த தொடர்களிலும் புவனேஷ்வர் குமார் சொல்லிக்கொள்ளும்படியாக வீசவில்லை, நேற்று ஆந்த்ரே ரஸலும் புவனேஷ்வர் குமாரை சாத்த முடியும் என்று காட்டியுள்ளார், இந்த ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார் சாத்துமுறை வாங்கினால் நிச்சயம் உலகக்கோப்பைப் போட்டிகளில் அது அவரது தன்னம்பிக்கையை கெடுத்து விடும். ஆகவே கோலி சொல்வது போல் அவர் கொஞ்சம் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் புவனேஷ்வர் குமார் கேட்பனாக இருக்கிறார். அவரால் இந்த ஐபிஎல் அதிரடி பேட்ஸ்மென்களுக்கு முன்னால் அதிக சேதமடையாமல் வருவாரா என்பது இப்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT