Published : 11 Mar 2019 07:26 AM
Last Updated : 11 Mar 2019 07:26 AM
இந்திய அணியின் பொறுப்பில்லாத பீல்டிங், கட்டுக்கோப்பில்லாத பந்துவீச்சு ஆகியவற்றால், மிகப்பெரிய ஸ்கோர் எடுத்த நிலையிலும், மொஹாலியில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது
முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. 359ரன்கள் என்ற இலக்கை விரட்டிய, ஆஸ்திரேலிய அணி 13 பந்துகள் மீதிமிருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்று சமநிலையில் உள்ளனர்.
குறிப்பாக உஸ்மான் கவாஜாவின் 91 ரன்கள், ஹேண்ட்ஸ்கம்பின் முதல் சதம்(117), ஆஷ்டன் டர்னரின் 84 (43) காட்டடி ஆட்டம் ஆகியவை ஆஸி. அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆட்டநாயகனாக ஆஷ்டன் டர்னர் தேர்வு செய்யப்பட்டார்.
புவனேஷ்வர் குமார் 5 ஒவர்களில் 18 ரன்கள் என்று இருந்தவர் 9 ஓவர்கள் 67 ரன்களை வாரி வழங்கினார். பும்ரா 8.5 ஒவர்களில் 63/3 என்று சீரழிந்தார். அரைக்கை பவுலர் கேதார் ஜாதவெல்லாம் 2 ஓவர்கள் பார்க்க வேண்டும் பிறகு கட் செய்ய வேண்டும், இவரது லாலிபாப் பந்து வீச்சினால் 5 ஒவர்களில் 44 ரன்கள் வந்தது. அனைத்திற்கும் மேலாக சாஹல் 10 ஓவர்களில் 80 ரன்களையும் குல்தீப் யாதவ் 10 ஒவர்களில் 64 ரன்களையும் கொடுத்தனர். ஸ்பின்னர்கள் சேர்ந்து 25 ஓவர்களில் 188 ரன்கள் வாரி வழங்கினர். அடின்னா அடி அப்படி ஒரு சாத்துமுறை நடந்தது..
ரிஷப் பந்த் இன்னும் ஸ்டெம்பெங்கிலும், பேட்டிங்கிலும் முதிர்ச்சி அடையவில்லை என்பதை தெளிவாகக்காட்டிவிட்டார். முதிர்ச்சியில்லாத அவரை பிசிசிஐ தேர்வுக்குழு ஏன் தாங்குகிறார்கள்? உலகக்கோப்பைக்கு மாற்று விக்கெட் கீ்ப்பராக ஏன் தேர்வு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ரிஷப் பந்த்துக்கு பதிலாக அனுபவம் நிறைந்த தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யலாம். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய ஸ்டெம்பிங்கை டர்னருக்கு ரிஷப் பந்த் தோல்விக்கு கோட்டைவிட்டது முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். தவறான கணிப்பால் டிஆர்எஸ் வாய்ப்பும் வீணானது.
இந்த நேரத்தில்தான் அணியில் தோனி இல்லாத வெற்றிடம் தெரிய வருகிறது. இதுபோன்ற ஸ்டெம்பிங்கை தோனி மின்னல் வேகத்தில் செய்திருப்பார்.
அதுமட்டுமல்லாமல், கடைசி நேரத்தில் கைக்கு கிடைத்த கேட்சை டைவ் அடிக்கிறேன் எனக் கூறி நழுவவிட்ட கேதார் ஜாதவ், கையில் எண்ணெய் தடவிக்கொண்டு கேட்ச் பிடித்தமாதிரி கோட்டைவிட்ட ஷிகர் தவண் ஆகியோர் டர்னர் நிலைத்து பேட் செய்ய வாய்ப்புகளை வழங்கினார்கள். இவர்கள் 3 பேரும் தங்களின் பணியை ஒழுங்காகச் செய்திருந்தால், ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும்.
உலகக்கோப்பைப் போட்டிக்கு ஏறக்குறைய அணியத் தேர்வு செய்துவிட்டோம் என்று பிசிசிஐ தேர்வுக்குழு மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், வீரர்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய இக்கட்டான நேரத்தில் தேர்வுக்குழு இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் நல்ல ஸ்கோர் செய்யக்கூடிவை, அதில் இவ்வாறு மோசமான பந்துவீச்சையும், பீல்டிங்கையும் வெளிப்படுத்தினால், நிச்சயம் லீக் ஆட்டத்தைக் கூட இந்தியா தாண்டாது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து தொடரிலிருந்து தொடர்ச்சியாக வீரர்கள் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இந்த தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் போட்டிக்கு செல்கிறார்கள்.
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது பெரும் சலிப்பை ஏற்படுத்தி, பிரதானமான உலகக்கோப்பைப் போட்டியின்போது சோர்வை ஏற்படுத்திவிடக்கூடும். ஆதலால் வீரர்களுக்கு ஓய்வு அவசியம்.
வியாபார நோக்கத்தை மட்டுமே பிசிசிஐ பிரதானமாகக் கருதினால், உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியது இருக்கும். வீரர்களை மனச்சோர்வு அடையாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
358 ரன்கள் என்பது இந்தியா நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கு என்றால், அதை சேஸிங் செய்தது ஆஸி.யின் மிக்பபெரிய சாதனையாகும். இதற்கு முன் அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 334 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்திருந்தது. அதை இதன் மூலம் முறியடித்துவிட்டது. ஒட்டுமொத்தத்தில் 5-வது மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.
358 ரன்கள் எனும் இமாலய இலக்கை ஆஸ்திரேலிய அணி எவ்வாறு சேஸிங் செய்யப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர்களின் மோசமான பந்துவீச்சும் பீல்டிங்கும் அவர்களுக்கு வெற்றியை எளிதாக்கிவிட்டது.
குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திேரலிய அணி 98 ரன்களை அடித்து நொறுக்கியுள்ளது, அதில் ஆஷ்டன் டர்னர் மட்டும் 68 ரன்கள் அடித்துள்ளார்.
12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை நெருக்கடியில் தள்ளிய இந்திய அணி அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு கவாஜா, ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடியைப் பிரிக்க பெரும் சிரமப்பட்டனர். அதன்பின் மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ் கம்ப்பை ஆட்டமிழக்கச் செய்தபின் வெற்றி இந்தியாவின் பக்கமே இருந்தது.
26-வது ஓவரில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்படும் ரன்ரேட் 9 ரன்களுக்கு குறையாமல் இருந்ததால், அழுத்தத்துடனே விளைாயடினார்கள். 43-வது ஓவரின்போது வெற்றிக்கு ஓவருக்கு 10 ரன்கள் ஆஸி.க்கு தேவைப்பட்டது. இதனால், இந்தியாவின் பக்கம்தான் வெற்றி என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அனைத்தையும் கோட்டை விட்டனர் இந்திய வீரர்கள்.
குறிப்பாக ரிஷப் பந்த் கோட்டை விட்ட ஸ்டெம்பிங், கேதார் ஜாதவ், தவண் கேட்ச் பிடிக்கத் தவறியது போன்றவை ஒட்டுமொத்த நம்பிக்கையையும் குலைத்தது. புவனேஷ்குமார் வீசிய 45-வது ஓவரில் 20 ரன்கள் அடித்த டர்னர், பும்ரா வீசிய 46-வது ஓவரில் 16 ரன்களை சேர்த்தார். அதன்பின் 47-வது ஓவரில் 18 ரன்கள் விளாசி டர்னர் வெற்றியை எளிதாக்கினார். ஒட்டுமொத்தமாக ஆட்டம் முழுவதும் 45-வது ஓவரில் இருந்து தலைகீழாக மாறிப்போனது.
இந்திய அணியில் நேற்று அனைவரின் பந்துவீச்சையும் ஆஸி. பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கிய நிலையில், விஜய் சங்கர் பந்துவீச்சை மட்டும் அடிக்கவில்லை. ஆனால், 5 ஓவர்கள் மட்டுமே விஜய் சங்கர் வீச கோலி அனுமதித்தார். இது ஏன் எனத் தெரியவில்லை.
முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா, ஷிகர் தவண் கூட்டணி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ரோஹித் சர்மா 95 ரன்னிலும், ஷிகர் தவண் 143 ரன்களிலும்ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களான கோலி(7), ரிஷப் பந்த்(36), கேதார் ஜாதவ்(10), ராகுல்(26), விஜய் சங்கர்(26)ஆகியோர் குறைவான ஸ்கோரை அடித்தனர். கடைசி நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் பதற்றத்துடன் பேட் செய்யாமல் இருந்திருந்தால், ஸ்கோர் நிச்சயம் 380 ரன்களை தொட்டிருக்கும். நடுவரிசை வீரர்கள் அனைவரும் பெவிலியனில் ஏதோ முக்கியமான பணி இருப்பதைப் போல் வேகமாக வந்து, வேகமாக வெளியே சென்றனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ரிச்சார்ட்ஸன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
358 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரோன் பிஞ்ச்(0), மார்ஷ்(8) விக்கெட்டுகளை புவனேஷ், பும்ரா விரைவாக வீழ்த்தினர். ஆனால், அந்த உணர்ச்சிமிகு பந்துவீச்சை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை. 3-வது விக்கெட்டுக்கு கவாஜா, ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி 192 ரன்கள் சேர்த்தனர். கவாஜா 91 ரன்களில் வெளியேறினார்.
ஹேண்ட்ஸ்கம்ப் தனது ஒருநாள் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்தார். மேக்ஸ்வெல் 23 ரன்களில் வெளியேறினார். ஹேண்ட்ஸ்கம்ப் 117 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு டர்னர், கேரி ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள்.
காட்டடி அடித்த டர்னர் 33 பந்துகளில் அரைசதம்அடித்தார். இவரின் அதிரடியே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கேரே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். டர்னர் 43பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் கணக்கில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். 47.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி பெற்றது.
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT