Published : 08 Mar 2019 11:13 AM
Last Updated : 08 Mar 2019 11:13 AM
25 கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்த விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சென்ற வருட ஒப்பந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த முரளி விஜய் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் இந்த வருட ஒப்பந்தத்தில் எந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை.
2019 - 2020 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் முதன்மை ஏ+ பிரிவில் (7 கோடி சம்பளம்) விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த வருடம் இந்தப் பிரிவில் இடம்பெற்ற ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், இதற்கு அடுத்த ஏ பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த பட்டியலில் ஆச்சரியம் சுரேஷ் ரெய்னா (கடந்த வருடம் சி பிரிவு), முரளி விஜய் (கடந்த வருடம் ஏ பிரிவு) உள்ளிட்ட பிரபல வீரர்களின் பெயர்கள் எந்தப் பிரிவிலும் இடம் பெறாததுதான். மேலும், கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் இருந்த பார்த்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்ஷர் படேல், கருண் நாயர் ஆகியோருக்கும் இந்த வருடம் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.
பார்த்தீவ் படேல் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். கருண் நாயர் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.
இந்தப் பட்டியலில் அடுத்த ஆச்சரியம், ரிஷப் பந்த். வருடம் 5 கோடி சம்பளம் பெறும் ஏ பிரிவில் தோனி, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷமி, இஷான் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் ரிஷப் பந்தும் இடம்பெற்றுள்ளார். இதில் சர்மா, ஷமி, யாதவ் ஆகியோர் இந்தப் பட்டியலுக்கு புதுசு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அற்புதமாக ஆடி வெற்றிக்கு முக்கியக் காரணமாய் இருந்த புஜாரா இந்த வருடம் ஏ+ பிரிவில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்ற வருடம் போல ஏ பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். புஜாராவுக்கு ஐபிஎல் ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளை காயம் காரணமாக தவறவிட்ட அஸ்வின், தொடர்ந்து ஏ பிரிவு ஒப்பந்தத்தில் நீடிக்கிறார். இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஸ்வின் கடைசியாக ஆடியது கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்.
மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த ப்ரித்வி ஷாவும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 3 அரை சதங்கள் எடுத்து சிறப்பாக ஆடிய மயங் அகர்வாலும் எந்த ஒப்பந்தப் பிரிவிலும் இடம்பெறவில்லை.
பி பிரிவில் (ரூ. 3 கோடி) கே.எல்.ராஹுல், உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா ஆகியோரும், சி பிரிவில் (ரூ 1 கோடி) கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பாதி ராயுடு, ஹனுமா விஜாரி, கலீல் அகமது ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். சென்ற வருடம் ஏ பிரிவில் இருந்த விருத்தமான் சாஹா இந்த வருடம் சி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக அணியில் சரிவர இடம் பெறாத மனிஷ் பாண்டேவுக்கு சி பிரிவு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் முடிவு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தாலும், கூடவே எண்ணற்ற கேள்விகளையும் வழக்கம் போல எழுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT