Published : 26 Mar 2019 08:05 AM
Last Updated : 26 Mar 2019 08:05 AM

அஸ்வினின் மகா அசிங்கமான செயலால் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி: கிங்ஸ் லெவன் அழுகுணி வெற்றி

222

இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஜெய்பூரில் கிங்ஸ் லெவன் வென்றதேயில்லை, இது அஸ்வினுக்கு தெரிந்திருந்தது போலும் அதனால்தான் அபாரமாக ஆடிவந்த ஜோஸ் பட்லரை (69) மகா அசிங்கமாக, பந்து வீசும் முன்பே ரன்னர் முனையில் ரன் அவுட் செய்து தன் வெற்றி வெறியை தீர்த்துக் கொண்டார்.

 

பட்லரை இப்படி அசிங்கமாக ரன் அவுட் செய்ததால் 108/1 என்று இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ்  62 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வி கண்டது, ஆனால் இந்த வெற்றி அஸ்வினுக்குத் தோல்வி, ஐபிஎல்-க்குத் தோல்வி இந்திய கிரிக்கெட்டுக்குத் தோல்வி. ஐபிஎல் ஒரு நட்பு முறை கிரிக்கெட் வடிவம், பொழுதுபோக்கு கிரிக்கெட் வடிவம், இதில் போய் இப்படி ‘பொய்’ அவுட் செய்வது மிக அசிங்கமான செயல்.

 

டாஸ் வென்ற ரஹானே முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை பேட் செய்ய அழைத்தார், கிறிஸ் கெய்ல் என்ற ‘பாஸ்’-இன் அதிரடியுடன் 47 பந்துகளில் 79 ரன்கள் விளாச, சர்பராஸ் கான் அபாரமாக ஆடி 29 பந்துகளில் 46 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் 184/4 என்று முடிந்தது, உண்மையில் கெய்ல் நின்றிருந்தால் ஸ்கோர் எங்கு போயிருக்கும் என்று கூறுவது கடினம். அந்த வகையில் கடைசி ஸ்பெஷலிஸ்ட் பவுலராக பென் ஸ்டோக்ஸ் அந்தத் தருணத்தில் கிறிஸ் கெய்லை  எடுத்தது முக்கியத் திருப்பமாகும். இத்தனைக்கும் அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸை கிறிஸ் கெய்ல் புரட்டி எடுத்தார். ஆனாலும் மனம் தளராமல் கெய்லை வீழ்த்தும் அந்தப் பந்தை அவர் வீசினார்.

 

ஆனால் ஒன்று புரியவில்லை ஷ்ரேயஸ் கோபால் என்ற அருமையான லெக் ஸ்பின்னரை ரஹானே வீசவே அழைக்கவில்லை, கெய்லைக் கண்டு பயந்து அப்படிச் செய்திருப்பார் போல் தெரிகிறது, கோபாலை கெய்ல் அவுட் ஆன பிறகு கொண்டு வந்தார். ஒரு ஒவர்தான் அவர் வீசி 5 ரன்களைக் கொடுத்தார், இவரைப்போன்ற பவுலர்களை பயன்படுத்திப் பார்க்க வேண்டும், ஒரு சான்ஸ்தான் கெய்ல் ஆட்டமிழந்திருந்தால் ஒருவேளை அஸ்வின் ‘மன்கட்’ அவுட்டை இன்னும் பல முறை பயன்படுத்தியிருக்க வேண்டி வந்திருக்கலாம்!

கெய்ல் தொடக்கத்தில் நிதானித்தார் 18 பந்துகளில் 14 ரன்கள் என்று இருந்தார், ஆனால் அவர் நிற்க நிற்க அவரை வீழ்த்த வேண்டும் என்ற அவசர கதியில் முறையான பவுலர்களின் ஓவர்களை முடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ரஹானே தள்ளப்பட்டார். தவல் குல்கர்னி, இவர் கெய்லுக்கு எதிராக கொஞ்சம் வெற்றியைச் சுவைத்தவர், கவுதம் மற்றும் குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சரின் வேகமும் பிரமாதமான லெந்த்தும் கெய்லை தொடக்கத்தில் கட்டிப் போட்டது.

 

அதன் பிறகு கெய்லுக்கென்றே வந்து வாய்த்தார் ஜெய்தேவ் உனாட்கட் (ஐபிஎல் அதிக விலை வீரர்) அவர் வீசிய மட்டமான ஷார்ட் பிட்ச், ஃபுல் லெந்த் பந்து வீச்சில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் பறக்க விட்டு எழுச்சி பெற்றார் கெய்ல் அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. கெய்லுக்கு எப்படி வீசமென்று நேற்று ஒரு சிறுபாடம் கற்றுக் கொள்ளும் விதமாக அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினால் வெளுத்துக் கட்டினார், பிரதானமான ரன்கள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும் பந்துகளில்தான் அவருக்கு வந்தது. ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசினால் கெய்ல் நேராக ஆடுகிறார். 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் கெய்ல் 47 பந்துகளில் 79 விளாசினார்.

 

அப்போதுதான் முறையான பவுலர்கள் ஓவர்கள் முடியும் தறுவாயில் பென் ஸ்டோக்ஸ் வந்து கெய்லுக்கு வீசினார் ஸ்டோக்ஸையும் சிக்சர், பவுண்டரி என்று வெளுத்துக் கட்டினார் கெய்ல், ஆனால் அதே ஒவரில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடிய போது நேராக மிட்விக்கெட்டில் திரிபாதி கரெக்டாக எம்பி பிடித்தார்.

 

கெய்ல் ஆட்டமிழந்த பிறகு சர்பராஸ் கான் மிக பிரமாதமாக ரன் ரேட்டை சரிய விடாமல் எடுத்து சென்றார். அபாரமான ஸ்கூப் ஷாட், மிகப்பிரமாதமான ஒரு காபிபுக் கவர் டிரைவ் என்று சர்பராஸ் கான் 29 பந்துகளில் 46 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் 184/4 என்று முடிந்தது. கடைசியில் ஸ்டோக்ஸை அபார சிக்ஸும் அடித்தார் சர்பராஸ் கான். முன்னதாக ராகுல் (4) சோபிக்கவில்லை, மயங்க் அகர்வால் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நல்ல ஸ்டார்ட் செய்து கோட்டை விட்டார்.  ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்ட, ஸ்டோக்ஸ் 2 விக்கெட், குல்கர்னி 1 விக்கெட்.

 

 

பட்லரின் அதிரடியும் அஸ்வினின் அசிங்கமும்:

 

இலக்கை விரட்டக் களமிறங்கிய போது பட்லர், ரஹானே வெளுத்துக் கட்டினர்.  ரஹானே 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுக்க, பட்லர் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த போது பவர் பிளேயில் ராயல்ஸ் 64/0 என்று வெற்றிப்பாதையில் பயணித்தது.

 

ரஹானே எக்ஸ்டா கவரில் தூக்கி அடித்தார், நேராக தரையோடு தரையாக பவுண்டரிகளை அடிக்க ஜோஸ் பட்லர் ஒரு சிறு டிவில்லியர்ஸாக கண்ட இடங்களிலெல்லாம் அடிக்கத் தொடங்கியிருந்தார், ஸ்கூப் ஷாட்கள், இழுத்து மிட்விக்கெட்டில் அடித்தல் என்று இருவரும் சேர்ந்து 8 ஓவர்களில் 78 என்று ஆடி வந்த போது ரஹானே அஸ்வின் பந்தில் பவுல்டு ஆனார். அஸ்வின் நன்றாகவே வீசினர் 4 ஒவர்களில் 20 ரன்கள் 1 விக்கெட்.

 

அதன் பிறகுதான் அந்த அசிங்கம் நடந்தது. தன் பந்து வீச்சின் கடைசி பந்துக்கு முதல் பந்தை அஸ்வின் வீச வந்தார், பட்லர் கொஞ்சம் அதிகமாகவே கிரீசை விட்டு வெளியே சென்றார், ஆனால் அது ரன் ஓடுவதற்காக அல்ல, அவரை அறியாமல் கொஞ்சம் கூடுதலாகச் சென்று விட்டார், அஸ்வின் பந்து வீச வந்தவர் உடனே இதனை வாய்ப்பாக நினைத்து ரன்னர் ஸ்டம்ப் பெய்ல்களை தட்டி விட்டார் பட்லர் ரன் அவுட். வாக்குவாதம்.. அசிங்கம், பட்லர் கோபதாபத்துடன் வெளியேற வேண்டி வந்தது.

 

ஆட்டத்தின் விதிமுறைகளின்படி சரியென்றாலும் ஐபிஎல் கிரிக்கெட் ஒரு நட்பு முறை ஆட்டம், இதில் ஒருவிதமான சவால் உள்ளது, அதனை அதன் போக்கில் விட்டு ஆட வேண்டுமே தவிர வெற்றி  வெறி பிடித்து இத்தகைய கிரிக்கெட் ஆட்ட உணர்வு கொலையில் அஸ்வின் ஈடுபட்டிருக்கக் கூடாது, அதுவும் ஒரு அணியின் கேப்டனாக, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டுக்கும் இது தலைகுனிவாகிப் போனது.

 

ஸ்டீவன் ஸ்மித் இறங்கி சாம் கரன் வீசிய ஒரு பந்தை மிக அபாரமாக ஹை பிளிக் ஆடி டீப் ஸ்கொயர்லெக்கில் அடித்த சிக்ஸ் ஸ்மித்தின் வருகையை உறுதி செய்தது. ஆனால் இதே சாம் கரன் பந்தில் ஸ்மித், ராகுலின் அபாரமான டைவ் கேட்சுக்கு 20 ரன்களில் வெளியேறினார். சஞ்சு சாம்சன் 30 ரன்களுக்குச் சிறப்பாக ஆடினார், ஆனால் அவரும் சாம் கரன் பந்தில் அஸ்வினிடம் கேட்ச் ஆனார். ஸ்டோக்ஸ், திரிபாதியை ஆப்கான் லெக் ஸ்பின்னர் முஜிபுர் ரஹ்மான் காலி செய்ய 108/1 என்ற நிலையிலிருந்து 170/9 என்று சரிந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் அஸ்வின்... சீ.. சீ இல்லை இல்லை கிறிஸ் கெய்ல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x