Published : 26 Mar 2019 06:38 AM
Last Updated : 26 Mar 2019 06:38 AM
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் கேப்டன் அஸ்வின் தன் பந்து வீச்சில் அபாரமாக ஆடிவந்த ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை எச்சரிக்காமல் ரன் அவுட் செய்த விதம் இந்திய கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் ஏன் அஸ்வினுக்குமே பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்று செய்த ஸ்மித், வார்னரின் பால் டேம்பரிங் செயலுக்கும் நேற்று அஸ்வின் செய்த செயலுக்கும் அதிக வேறுபாடில்லை.
ஜென்டில்மேன்ஸ் கேம் என்றுதான் கிரிக்கெட்டை அழைப்பதுண்டு. விளையாட்டும், பங்கேற்கும் வீரர்களின் மனநிலையும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதால் அழைத்தார்கள்.
பெரும்பாலான சர்வதேச போட்டிகளில் ஜென்டில்மேன்களாகத்தான் வீரர்கள் நடந்து வருகிறார்கள். ஆனால், 12-வது ஐபிஎல் சீசனில் ஜெய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் ராஜஸ்தான் வீரர் பட்லரை மன்கட் அவுட் செய்த செயல் சரியானதா அல்லது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை குலைக்கும் வகையில் செய்துவிட்டதா என்பது நேற்று இரவு முதல் பெரும் விவாதப்பொருளாக சமூக ஊடகங்களில் மாறிவிட்டது.
12.5 ஓவரை அஸ்வின் வீசிய போது, நான்-ஸ்ட்ரைக்கர் எல்லைக் கோட்டில் இருந்த ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர், க்ரீஸை விட்டு வெளியே இருந்ததால், அவரை “மன்கட் அவுட்”(ரன்அவுட்) செய்தார் அஸ்வின். இது மூன்றாவது நடுவருக்குச் சென்றபோது, சிலநிமிடங்கள் அஸ்வினுக்கும், பட்லருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அசிங்கமானது. இதில் பட்லர் ஆட்டமிழந்து வெளியேறினார். பட்லர் சென்ற பின் ஆட்டம் தலைகீழாகி ராஜஸ்தான் அணி தோற்றது. தான் ஆட்டமிழந்தவுடன் ஜோஸ் பட்லர் மிகுந்த கோபத்துடன் சத்தம்போட்டபடி வெளியேறினார்.
கிரிக்கெட் விதிமுறைப்படி பார்த்தால், ஐசிசி விதி41.16-ன்கீழ், பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கான செயலை(ஆக்ஸன்) செய்துவிட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்-ஸ்டிரைக்கர் தன்னுடைய இடம் அதாவது க்ரீஸில்(எல்லைக்கோடு)இருந்து வெளியே இருந்தால், பந்துவீச்சாளர் அந்த நான்-ஸ்டிரைக்கரை ஆட்டமிழக்கச் செய்யலாம் என்று இருக்கிறது.
ஆனால், நேற்று அஸ்வின் பந்துவீசும் தனது செயலை செய்யும் முன்பே, பட்லரை கோட்டை விட்டு வெளியே சென்றவுடன் ஆட்டமிழக்கச் செய்துவிட்டார். இங்குதான் விவாதப்பொருளாகி இருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டின் “ஸ்பிரிட்டை” உணர்த்த எண்ணற்ற நல்ல சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன. ஆனால், அஸ்வின் செய்ததது ஒரு வீரர், ஒரு கேப்டன் கிரிக்கெட்டை எப்படி விளையாடக்கூடாது, என்பதற்கான மோசமான உதாரணங்களில் ஒன்றாக மாறி, விளையாட்டின் ஆரோக்கியத்தை குலைத்துவிட்டது.
இதுபோன்று “மன்கட்” அவுட் செய்யும் முன், பந்துவீச்சாளர் பேட்ஸ்மேனிடம் எச்சரிக்கை செய்வார், க்ரீஸை விட்டு பந்துவீசும் முன் வெளியேவராதீர்கள் என்று நடுவர் முன்னிலையில் எச்சரிக்கை செய்து, அதன்பின் மீண்டும் அதே தவறைச் பேட்ஸ்மேன் செய்தால், அவுட் செய்யப்படுவார். இது கிரிக்கெட் உலகில் ‘மன்கடட்’ என்று கூறப்படும்.
ஆனால், 1987-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் மே.இ.தீவுகள் வீரர் வால்ஷ், கிறிஸ் கெயில் போன்ற உண்மையான, கிரிக்கெட்டை உணர்ந்த ஜென்டில்மேன்கள் “மனகட் அவுட்” செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாமல் பேட்ஸ்மைனை எச்சரிக்கையுடன் விட்டுச்சென்றனர். அவர்களின் நோக்கம் ஒருபேட்ஸ்மேனை இவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது என்பது நேர்மையற்றத் தனம் என்று நினைத்தார்கள். 1992-93 தென் ஆப்பிரிக்கத் தொடரில் போர்ட் எலிசபெத் மைதானத்தில் 40 வயது பீட்டர் கர்ஸ்டன், இளம் காளை ஜாண்ட்டி ரோட்ஸுக்கு சமமாக ரன் ஓடியதைப் பார்த்த கபில் தேவ் கிரீஸை விட்டு பந்து போடுவதற்கு முன்னால் வருகிறீர்கள், இது முறையற்ற செயல் என்று இருமுறை எச்சரித்து விட்டு கர்ஸ்டன் கேட்காததால் ஸ்டம்பைப் பெயர்த்து ரன் அவுட் செய்தார்.
ஜோஸ் பட்லர் க்ரீஸை விட்டு வெளியே செல்வதைப் பார்த்தவுடன் எச்சரிக்கை செய்துவிட்டு, மீண்டும் அந்தத் தவறை பட்லர் செய்து அஸ்வின் அப்போது மான்காட் அவுட் செய்திருந்தால், விவாதத்துக்கு இடமில்லை. ஆனால், அதைவிடுத்து வெற்றி வெறி பிடித்து அஸ்வின் செய்தது கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த நட்புணர்வு தாத்பரியத்தை குலைக்கும் வகையில் இருந்தது.
2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இதேபோல் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றபோது, இலங்கை பந்துவீச்சாளர் சேனநாயகே முதல் முறை எச்சரி்க்கை செய்து, 2-வது முறையாக பட்லர் வெளியே சென்றபோதுதான் மான்காட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது இது விவாதிக்கப்படவில்லை.
இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அஸ்வின் செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் ஐசிசியால் அங்கீகரிக்கப்படுவதும் இல்லை, ஒருவீரரின் சாதனைகளில் இடம் பெறப் போவதும் இல்லை. அப்படி இருக்கும் போது நல்ல பேட்டிங்ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனை நேர்மையற்ற(அழுகினிஆட்டம்) முறையில் ஆட்டமிழக்கச் செய்து அஸ்வின் பெறும் வெற்றி வெற்றியாகாது. அப்படிப்பட்ட வெற்றி அஸ்வினுக்கு தேவையா.
ஒருவேளை அஸ்வின் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணிக்குள் தேர்வாவார் என்கிற நிலை இருந்ததால் அஸ்வி்ன் இவ்வாறு நடந்துவிட்டார் என்ற வாதம் வைக்கப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறப்போவதில்லை. உண்மையில், அஸ்வின் செயலால் இந்திய அணியின், ஒட்டுமொத்த வீரர்களுக்கே தலைகுணிவுதான் ஏற்பட்டுள்ளது.
மன்கட் அவுட்டை ஒரு பந்துவீச்சாளர் செய்திருந்தால்கூட அது கேப்டனிடம் கொண்டு செல்லப்பட்டு ஆலோசிக்கப்படும், ஆனால், அணியின் கேப்டனே இதுபோல் செய்வது, கேப்டன் பதவிக்கு ஏற்பட்ட இழுக்கு.
எம்.எஸ். தோனி அல்லது விராட் கோலியோ இந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த மன்கட் அவுட்டை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஏனென்றால் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதனால்தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேப்டன்களாக, வீரர்களாக இன்னும் இருக்கிறார்கள்.
களத்தில் எதிரணி வீரர்களின் திறமைக்கு மதிப்பளித்து, நட்புணர்வு அடிப்படையில் செல்வதுதான் கேப்டனுக்கு அழகு. ஆனால், மைதானத்தில் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் வெற்றிபோதை தலைக்கேறி அஸ்வின் செயல்பட்டது சரியல்ல.
அஸ்வினின் நேற்றைய செயலில் எப்பாடுபட்டேனும் வெற்றி பெற்றே தீர வேண்டும் எனும் தீரத தாகம் முகத்தில் தெரிந்தது. வழக்கத்துக்கு மாறான அஸ்வினாக ஒவ்வொரு விக்கெட் வீழ்கின்றபோதும் அவரின் முகத்தின் உணர்ச்சிகள் மிகஆவேசமாக இருந்தன. யாருக்கு உணர்த்த இவ்வாறு செயல்பட்டார் எனத் தெரியவில்லை.
அதுமட்டுமல்லாமல் ஒரு கேப்டனாக இருந்து கொண்டு எதிரணி வீரரான பட்லருடன் அஸ்வின் வாக்குவாதம் செய்ததும் அசிங்கமாக இருந்தது. சர்வதேச தளத்தில் மதிக்கப்படும் ஒரு லீக் கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவது அவருக்குமட்டுமல்ல, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்ட தலைகுணிவு.
விதிப்படிதான் செயல்பட்டார் அஸ்வின் என்று வாதத்தை முன்வைக்கலாம், விதிக்காக விளையாடப்படுவதல்ல கிரிக்கெட், கிரிக்கெட்டில் வகுத்த விதிகளை எவ்வளவு ஜென்டில்மேனாக பின்பற்றுகிறோம், நட்புறவுகளை பேணுகிறோம் என்பதில்தான் இருக்கிறது கிரிக்கெட்டின் ஸ்பிரிட். அஸ்வினின் செயலால் அனைத்தும் கறைபடிந்துவிட்டது.
கிரிக்கெட்டில் வெற்றியை இப்படித்தான் பெற வேண்டும் என்ற குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாமல், பெறும் வெற்றி யாரைத் திருப்திபடுத்துவதற்காக எனத் தெரியவில்லை. அஸ்வின் செய்தது அவரின் உள்ளுணர்வுக்கு வேண்டுமானால் சரியெனத் தெரியலாம், சர்வதேச அளவில் அஸ்வினின் செயல் நேர்மைற்ற செயல், போலித்தனமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு பெரிய கரும்புள்ளி, தீராக்கறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT