Published : 24 Sep 2014 12:05 PM
Last Updated : 24 Sep 2014 12:05 PM
ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4-வது நாளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் கிடைத்தன.
ஸ்குவாஷில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சவுரவ் கோஷல் பெற்றார். இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீரரான அபிநவ் பிந்த்ரா, ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் தனிநபர் மற்றும் அணி பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. 4-வது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆசிய தரவரிசையில் முதலிடத்தில் (சர்வதேச தரவரிசை 16) இருக்கும் கோஷல், குவைத்தின் அப்துல்லா அல் முஜாயெனை சந்தித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை கோஷல் 12-10, 11-2 என்ற கணக்கில் கைப்பற்ற, அவர் வெற்றி பெற்றுவிடுவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் 3-வது செட்டில் அபாரமாக ஆடிய அப்துல்லா ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அடுத்த 3 செட்களை முறையே 14-12, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் கைப்பற்றிய அப்துல்லா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
சர்வதேச தரவரிசையில் தன்னைவிட 30 இடங்கள் பின்னால் இருக்கும் அப்துல்லாவிடம் தோற்ற கோஷல், தோல்வியைத் தாங்க முடியாமல் அப்படியே சரிந்து விழுந்தார்.
அபிநவ் அசத்தல்
ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் அபிநவ் பிந்த்ரா. இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தனிநபர் பிரிவில் பிந்த்ரா பதக்கம் வென்றதில்லை என்ற குறையை தனது கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தீர்த்துள்ளார். ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் அணி பிரிவில் பிந்த்ரா, சஞ்ஜீவ் ராஜ்புட், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
அதேநேரத்தில் நேற்று நடைபெற்ற எஞ்சிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மகளிர் டிராப் அணி பிரிவில் ஸ்ரேயாஸி சிங் (66 புள்ளிகள்), சீமா தோமர் (63), ஷாகுன் சவுத்ரி (59) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 188 புள்ளிகளுடன் 8-வது இடத்தையே பிடித்தது.
ஆடவர் 25 மீ. ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹர்பிரீத் சிங் 290 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்தார். மற்ற இந்தியர்களான குருபிரீத் சிங், பிரேம்பா டமாங் ஆகியோர் தகுதிச்சுற்றை தாண்டவில்லை.
ஹாக்கியில் வெற்றி
ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் ஓமனை தோற்கடித்தது. இந்தியத் தரப்பில் ரூபிந்தர்பால் சிங், ரகுநாத் ஆகியோர் தலா இரு கோல்களையும், ஆகாஷ்தீப் சிங், ரமண்தீப் சிங், டேனிஸ் முஜ்தபா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
மகளிர் சைக்கிளிங் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் தேபோரா, க.வர்கீஸ் ஆகியோர் முறையே 9 மற்றும் 10-வது இடங்களைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி தனது “பிரிலிமினரி” சுற்றில் 76-85 என்ற புள்ளிகள் கணக்கில் பிலிப்பின்ஸிடம் தோல்வி கண்டது. தனிநபர் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவின் ஆசிஷ் குமார், ஆதித்ய சிங் ஆகியோர் முறையே 12 மற்றும் 17-வது இடங்களைப் பிடித்தனர். இவர்களில் ஆசிஷ் குமார்,
நீச்சலில் ஏமாற்றம்
ஆடவர் 400 மீ. ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சாஜன் பிரகாஷ், சவுரப் சங்வேகர் ஆகியோர் முறையே 4 மற்றும் 7-வது இடங்களைப் பிடித்தனர். 50 மீ. ப்ரீஸ்டைல் பிரிவில் அன்சல் கோத்தாரி 6-வது இடத்தைப் பிடித்தார்.
பளுதூக்குதலில் இந்தியாவின் ரவிக்குமார், பூனம் யாதவ் ஆகியோர் ஏமாற்றினர். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான ரவிக்குமார் 77 கிலோ எடைப் பிரிவில் பதக்கமின்றி வெளியேறினார். மகளிர் 63 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பூனம் யாதவ் 7-வது இடத்தையே பிடித்தார். இவர் கடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
உடல் நலக்குறைவால் சதீஷ் விலகல்
இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சதீஷ் சிவலிங்கம், உடல் நலக்குறைவு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகினார். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான சதீஷ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் பங்கேற்கவிருந்தார்.
சதீஷ் நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நலக்குறைவால் அவர் விலகியது ஏமாற்றமாக அமைந்தது. இது தொடர்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் குழு தலைவர் அடிலே சுமேரிவாலா கூறுகையில், "காய்ச்சல் மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக சதீஷ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அப்போது அதிலிருந்து அவர் மீண்டுவிடுவார் என்பது போல் தெரிந்தது. இந்த நிலையில் இன்று (நேற்று) மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றோம். அவரை பரிசோதித்த மருத்துவர் போட்டியில் பங்கேற்க முடியாது என கூறிவிட்டார்" என்றார்.
ஊசூவில் இரு வெண்கலம்
மகளிர் 52 கிலோ எடைப் பிரிவு ஊசூவின் அரையிறுதியில் இந்தியாவின் யூம்னம் சாந்தோய் தேவி சீனாவின் ஜங் லுவானிடம் தோல்வி கண்டார். இதனால் யூம்னம் வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார். ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் நரேந்தர் கிரேவால் தனது அரையிறுதியில் பிலிப்பின்ஸின் ஜியான் கிளாட் சக்லேக்கிடம் தோல்வி கண்டார். இதனால் அவரும் வெண்கலப் பதக்கத்தோடு வெளியேற நேர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT