Published : 29 Mar 2019 03:13 PM
Last Updated : 29 Mar 2019 03:13 PM

‘ஷிவம் துபே அவுட் ஆகியிருந்தால் நோ-பாலா என்று பார்த்திருப்பார்கள்’ - நோ-பால் சர்ச்சை குறித்து கைஃப் முதல் லாரா வரை சாடல்

ஆர்சிபி அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான 7வது ஐபிஎல் போட்டியும் நேற்று சர்ச்சையுடன் முடிந்தது, மலிங்காவின் கடைசி பந்து நோ-பால் என்பது ரீப்ளேயில் தெரியவர சர்ச்சை வெடித்தது.

 

கேப்டன் விராட் கோலியும் ‘இது என்ன கிளப் கிரிக்கெட்டா, சர்வதேச மட்ட கிரிக்கெட்டா?’ என்று கடுமையாகச் சாடியுள்ளார், காரணம் அது நோபால் என்று அறிவிக்கப்பட்டிருந்தால் ஃப்ரீ ஹிட் கிடைத்திருக்கும் வெற்றி ஆர்சிபி  பக்கம் சென்றிருக்க வாய்ப்பிருந்தது, ஏனெனில் ஆர்சிபிக்கு கடைசி பந்தின் போது தேவைப்பட்டது 7 ரன்கள்.

 

ரோஹித் சர்மாவும் இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று எச்சரித்த நிலையில் கிரிக்கெட் முன்னாள், இந்நாள் வீரர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.

 

அன்று டெட் பாலுக்கு ஓவர் த்ரோ என்று கூறி 4 ரன்களை 4வது நடுவரிடம் எடுத்து சென்று களநடுவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு டெட் பாலுக்கு 4 ரன்களை உடனடியாக வழங்க முடியும் போது ஏன் மேலிருந்து அது நோ-பால் மறுபடியும் வீச வேண்டும் என்று கள நடுவர்களுக்கு டெக்னாலஜி நடுவர்கள் அறிவுறுத்தக் கூடாது என்பதே தற்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக ஏற்கெனவே பாழகிப் போன ஐபிஎல் நேர்மை இன்னும் பாதிப்படைந்ததுதான் மிச்சம்.

 

இந்நிலையில் சில முன்னாள் வீரர்கள் இந்த நோ-பால் பராமுகத்தை கண்டித்துள்ளனர்:

 

பிரையன் லாரா:

 

கிரிக்கெட்டில் பலதரப்பட்டதற்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் போது ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் போட்டியில் தொழில்நுட்பம் மூலம் இன்னும் அதிகம் செய்திருக்கலாம்.  3வது நடுவர் உடனடியாக நோ-பால் என்று கூறியிருக்க வேண்டும்.  முன்னெடுத்துச் செல்ல இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

 

சஞ்சய் மஞ்சுரேக்கர்:

 

உயர்தரமான கிரிக்கெட்! யுவி, ஹர்திக், சாஹல், உமேஷ், பும்ரா, விராட், ஏபி, மலிங்கா அனைவரும் ஆட்டத்தை உயர்நிலைக்குக் கொண்டு சென்றனர். இவையெல்லாமே அந்த கடைசி நோ-பால் மூலம் கீழே சரிந்தன. மன்னிக்க முடியாத தவறு.

 

மொகமது கைஃப்:

 

ஷிவம் துபே அந்த கடைசி பந்தில் ஆட்டமிழந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் ஆட்டமிழந்திருந்தால் மட்டுமே அது நோ-பாலா என்று நடுவர் சரிபார்த்திருப்பார்கள்.

 

கெவின் பீட்டர்சன்:

 

நாம் வாழும் இன்றைய தொழில் நுட்ப உலகில் இத்தகைய நோ-பால்களை பாராமல் விட்டிருக்க கூடாது.  கதை முடிந்தது.

 

டுபிளெசிஸ்:

 

தொழில் நுட்பத்தை இன்னும் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். அனைத்து வடிவங்களிலும் முன் கால் வெளியே வரும் நோ-பால்கள் பெரும்பாலும் பார்க்காமலேயே விடப்படுகின்றன.  ஆட்டமிழந்த பிறகுதான் சரிபார்க்கப்படுகின்றன. 3வது நடுவர் தலையிட்டு அது நோ-பால் என்று கூற வேண்டியதுதான்.

 

மைக்கேல் வான்:

 

தொழில்நுட்ப யுகத்தில் நோ-பால்களை பார்க்காமல் விடுதல் கூடவே கூடாது.

 

பிராக்யன் ஓஜா:

 

என்ன நடந்தது ? மிகப்பெரிய பிழை, ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும்.

 

டீன் ஜோன்ஸ்:

 

சாரி... நடுவர்கள் இப்போதெல்லாம் ஏகப்பட்ட நோ-பால்களை பார்க்காமலேயே விட்டு விடுகின்றனர்.  இன்னொரு நடுவர் நோ-பால்களை அறிவிக்க நியமிக்கப்படும் காலம் வந்து விட்டது.

 

குமார் சங்கக்காரா:

 

வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் இந்த விவகாரங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும்.

 

ஆகாஷ் சோப்ரா:

 

மலிங்காவின் கடைசி பந்து நோ-பால், பெரிய நோ-பால், நடுவர்கள் பார்க்கவில்லை மிகப்பெரிய தவறு. நம்ப முடியவில்லை.

 

இவ்வாறு தங்கள் ட்விட்டர் பதிவுகளில் சாடியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x