Published : 15 Mar 2019 06:43 PM
Last Updated : 15 Mar 2019 06:43 PM
வரும் 23-ம்தேதி 12-வது ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்குகின்றன. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விசில் போடு, மஞ்சள் உடை, தோனி படை இதுதான் சிஎஸ்கேயின் அடையாளம். பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெம்மிங், பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி, பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாலாஜி என வலுவான கட்டமைப்புடன் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணிக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பதும் சிஎஸ்கே அணிக்குத்தான் என்றால் மிகையல்ல.
மூன்று முறை சாம்பியன்(2010,2011, 2018), 4 முறை இறுதிச்சுற்று(2008, 2012, 2013, 2015) என ஐபிஎல் போட்டித் தொடரில் அனைத்து அணிளுக்கும் சிம்மசொப்னாமாய் திகழ்வது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சூதாட்ட புகார் காரணமாக 2ஆண்டுகள் தடைக்குப் பின் கடந்த ஆண்டு களத்தில்இறங்கிய சிஎஸ்கே அணி பட்டையை கிளப்பி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் வெற்றி சதவீதம் என்பது 50 சதவீதத்துக்கு குறைந்ததில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கமே சிஎஸ்கே அணியின் முதல் ஆட்டத்தோடுதான் ஆட்டம் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் வரும் 23-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி.
2019 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடந்த போது, சிஎஸ்கே அணி தங்களின் வெற்றிக்கூட்டணியை அதிகமாக மாற்றிக்கொள்ளவில்லை. பெரும்பாலான வீரர்களை தக்கவைத்துக்கொண்டது. கடந்த முறை கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா(ரூ.5 கோடி), ருதுராஜ் கெய்க்வாட்(ரூ.20லட்சம்) ஆகியோரை மட்டும் விலைக்கு வாங்கியது. மற்ற வீரர்களை விடுவிக்கவும், யாரையும் வாங்கவும் இல்லை.
பலம், பலவீனம்:
சிஎஸ்கே அணியின் பலம் என்றால் அதன் பேட்டிங் வரிசைதான். சிஎஸ்கே அணியில் இருக்கும் 8 பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் போட்டியில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்தவர்கள் என்ற ஒரு விஷயமே எதிரணிக்கு கிலி ஏற்படுத்தும். ரெய்னா, தோனி, வாட்ஸன், முரளி விஜய், ராயுடு, கேதார் ஜாதவ், டூப் பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், ரவிந்திர ஜடேஜா, பிராவோ என பேட்டிங்கில் ஒரு பெரிய படை காத்திருக்கிறது.
அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் போது அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு கொண்டு செல்ல அனைத்து நிலையிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தோனி, பிராவோ, வாட்ஸன், டூப்பிளஸிஸ் ஆகியோர் எந்த நேரத்தில் காட்டடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது எதிரணிக்கு பெரிய கிலி ஏற்படுத்தும் விஷயமாகும்.
வேகப்பந்துவீச்சு
பந்துவீச்சைப் பொருத்தவரை சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சில் வலுவானதாகக் இருப்பதாக கூற இயலாது. இந்த முறை மோகித் சர்மா அணிக்குள் வந்துள்ளது, ஓரளவுக்கு வலு சேர்க்கும். லுங்கி இங்கிடி, வாட்ஸன், சர்துல் தாக்கூர், மோகித் சர்மா, பிராவோ, டேவிட் வில்லே ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். இதில் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் இங்கிடியைத் தவிர வேறுயாரும் பந்துவீசமாட்டார்கள்.
ஸ்பின்னர்கள்
சுழற்பந்துவீச்சில் கரண் சர்மா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கேதார் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சேர்ந்த வலுவான கூட்டணி இருக்கிறது. இவர்களில் லெக் ஸ்பின்னர், ஆப் ஸ்பின்னர் கூட்டணி கலந்து இருப்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும், 5 ஓவர்களுக்குமேல் எதிரணியின் ரன் விகிதத்தை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசுவார்கள். குறிப்பாக இம்ரான் தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா ஆகியோர் இருப்பது பலமாகும்.
சென்னை சூப்பர் அணியின் பலமே ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடும் திறன் படைத்த பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மேன்களும் இருப்பதை குறிப்பிடலாம். அதனால், மூன்று முறை சாம்பியன் பட்டத்தையும், 4 முறை இறுதிப்போட்டிக்கும் செல்ல முடிந்தது.
மாறுபட்ட தோனி
குறிப்பாக இந்திய அணியில் இடம் பெறும் தோனிக்கும், சிஎஸ்கே தோனிக்கும் இடையே ஏராளமான மாற்றங்கள் களத்தில் இருக்கும். தோனியின் அதிரடி ஆட்டம், கேப்டன் வியூகம், சாதுர்யமான முடிவுகள் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.
7 ஆல்ரவுண்டர்கள்
இதில் ஷேன் வாட்சன் , பிராவோ ,ரவீந்திர ஜடேஜா கேதர் ஜாதவ், மிட்சல் சான்ட்னர், டேவிட் வில்லே,பிஷ்னோய்ஆகிய 7 ஆல் ரவுண்டர்கள் சிஎஸ்கேவில் உள்ளனர்.
ஆனால் இதில், ஷேன் வாட்சன், டிவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகிய ஆல் ரவுண்டர்களுக்கே ஆடும் லெவனில் விளையாட அதிக வாய்ப்பிருக்கும் கடந்த சீசனில், பந்துவீச்சில் பெரியளவில் ஜொலிக்காவிட்டாலும், பேட்டிங்கில் பெரிய தூணாக இருந்தவர் வாட்ஸன்.
பிராவோவே பொறுத்தவரை, கடைசிக் கட்ட சிக்ஸர்கள், டெத் பவுலிங் இவரது பலம்., சில போட்டிகளில் டெத் ஓவர்களில் சொதப்பி, தோனியை டென்ஷன் ஆக்குவார் இருந்தாலும், தோனியின் லிஸ்டில் இவருக்கும் இடமுண்டு.
ரவீந்திர ஜடேஜா கடந்த சீசனில் ‘ஏன் இவரை இன்னும் தோனி அணியில் வைத்திருக்கிறார்?’ என்று ரசிகர்கள் கடுப்பாகும் அளவிற்கு சொதப்பினாலும், இரண்டாம் பாதி தொடரில் நன்றாகவே பவுலிங் செய்தார்.
ஸ்பின் ஆல் ரவுண்டராக வலம் வரும் ஜடேஜாவிற்கு கேப்டன் தோனி, ப யிற்சியாளர் பிளமிங் என இருவரின் ஆதரவும் பலமாக இருப்பதால், இந்த சீசனிலும் தொடக்க ஆட்டங்களில் இவருக்கு மாற்று சாய்ஸ் இருக்காது என நம்பலாம்.
தோனி உட்பட அணி நிர்வாகம் கேதர் ஜாதவ் மீது பெருமளவில் நம்பிக்கை வைத்துள்ளது. ஸ்பின் ஆல் ரவுண்டரான கேதர் ஜாதவ், கடந்த சீசனில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து தொடரை விட்டே வெளியேறினார். இப்போது, முழு உடல்தகுதியுடன் களமிறங்க காத்திருக்கும் ஜாதவுக்கு நிச்சயம் அணியில் வாய்ப்புண்டு. இந்திய அணியிலும் சமீப ஆட்டங்களில் ஜாதவ் சிறப்பாகஆடி வருவதால், அவருக்கு உறுதியான இடம் உண்டு.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுவரை சிஎஸ்கே அணியில் அதிக ரன் அடித்த வீரர், விக்கெட்டுகள் வீழத்திய வீரர் குறித்த பட்டியல்.
ஆண்டு | அதிக ரன் | அதிக விக்கெட் | வெற்றி சதவீதம் |
2008 | ரெய்னா(456) | மோர்கல்(17) | 56.25 |
2009 | ஹேடன்(572) | முரளிதரன்(14) | 53.33 |
2010 | ரெய்னா(520) | முரளிதரன்(15) | 56.25 |
2011 | ஹசி (492) | அஸ்வின்(20) | 68.75 |
2012 | ரெய்னா(441) | பிராவோ(15) | 57.89 |
2013 | ஹசி(732) | பிராவோ(12) | 61.11 |
2014 | ஸ்மித் (566) | மோகித்சர்மா(23) | 62.50 |
2015 | மெக்கலம்(436) | பிராவோ(26) | 58.80 |
2018 | ராயுடு(602) | ஷர்துல்(16) | 68.75 |
சிஎஸ்கே அணி விவரம்:
தோனி(கேப்டன்), இம்ரான் தாஹிர், ருதுராஜ் கெய்க்வாட், சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, தீபக் சாஹர், நாராயன் ஜெகதீஸன், சுரேஷ் ரெய்னா, கேஎம் ஆசிப், ஷர்துல் தாக்கூர், துருவ் ஷோரே, மோகித் சர்மா, டூ பிளசிஸ், மோனு குமார், பிராவோ, பிஷ்னோய், கரன் சர்மா, லுங்கி இங்கிடி, ஷேன் வாட்ஸன், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், மிட்ஷெல் சான்ட்னர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT