Published : 06 Feb 2019 05:27 PM
Last Updated : 06 Feb 2019 05:27 PM
வெலிங்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை அடித்து நொறுக்கிய நியூஸி. அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட நிலையில் 219 ரன்கள் குவித்தது, தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.2 ஒவர்களில் 139 ரன்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது. இது டி20-யில் இந்திய அணியின் பெரிய தோல்வியாகும்.
ஒட்டுமொத்த போட்டியிலும் எந்த நிலையிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அருகில் கூட இல்லை, வெற்றிக்கும் இந்திய அணிக்கும் பல காததூரம் இடைவெளி இருந்ததையே பார்க்க முடிந்தது.
நியூஸிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லத்துக்குப் பிறகு வந்துள்ள அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் டிம் செய்ஃபர்ட் வெளுத்துக் கட்டினார், மேலேறி வந்து பவுலர்களை சாத்தி எடுத்தார், பந்து வீச்சை ஒன்றுமில்லை என்று கூறும்விதமாக ஸ்கூப் ஷாட்களையும் வெறித்தனமான புல் ஷாட்களையும் அடித்தார், அவர் 17 ரன்களில் இருந்த போது வழக்கமாக தோனி பிடித்து விடக்கூடிய கேட்சை விட்டார், பிறகு தினேஷ் கார்த்திக் அவர் 71 ரன்களில் இருந்த போது ஒரு எளிதான கேட்சை விட்டார். ஆகவே 17-71 எண் ஒரு எண் திருப்பமுறை, அதே போல் இரு கேட்ச்களும் விடப்பட்டது இரு விக்கெட் கீப்பர்களால் என்பதும் ஒரு விதிவசமான தற்செயலானது.
நியூஸிலாந்து தொடர்க்க வீரர்கள் 8 ஓவர்களில் 86 ரன்களை விளாச இந்திய அணியோ 11 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நாம் கேட்ச்களை விட்டு, மோசமாகப் பந்து வீச நியூஸிலாந்து அணியோ தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவுக்கு அருமையான கேட்ச்களை எடுத்தது. தோனி இறங்கும் டவுன் ஆர்டர் ஒரு சவுகரியமான டவுன் ஆர்டர், முதலில் விக்கெட் விழுந்து விட்டால்... விக்கெட்டுகள் சரிந்து விட்டது... அவர் என்ன செய்வார் பாவம்... என்று சுயநியாயப்பாடு எழுப்பலாம், சரி முதலில் நன்றாக ஆடியிருக்கும் போது தோனி இறங்கி ஆட்டமிழந்து அணி தோல்வி தழுவினால், தோனி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று ஒரு சுயநியாயப்பாட்டைக் கற்பிக்கலாம். அதுதான் ஒருநாள் போட்டிகளிலும் சரி, டி20 போட்டிகளிலும் சரி அவர் இறங்கும் டவுன் ஆர்டரில் உள்ள ஒரு மிகப்பெரிய சவுகரியம்.
இலக்கை விரட்டிய போது இந்திய அணியை கட்டியப் பசுவாக்கிய நியூஸிலாந்து பவுலிங்:
டிம் சவுதி அவர்கள் பிட்சில் பெரிய பவுலரே. தன் இன்ஸ்விங்கரில் ஷிகர் தவணை படுத்தினார். 3வது ஓவரில் ரோஹித் சர்மாவை பவுன்சரில் வீழ்த்தினார், ரோஹித் சர்மா 1 ரன்னில் விழுந்தது பெரிய அடியாகப் போய்விட்டது. ஆனால் ஷிகர் தவண் துல்லியத்தை எதிர்த்து அபாரமாக பேட் செய்தார், லாக்கி பெர்கூசன், குக்லீன் ஆகியோரை விளாசி 11 பந்துகளில் 28 ரன்கள் என்று இலக்குக்கு தேவைப்படும் ஸ்ட்ரைக் ரேட்டையும் கடந்து ஸ்ட்ரைக் ரேட்டில் சென்று கொண்டிருந்தார். ஆனால் ஒரு அதிவேகப் பந்து வீச்சாளர் அணியில் இருந்தால் என்ன நடக்குமோ அதுதான் தவணுக்கு நடந்தது 150 கிமீ வேக யார்க்கரில் பேடில் பட்டு பவுல்டு ஆகி 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
விஜய் சங்கர் பேட்டிங்கும் இலக்குக்கு தோதான ஸ்ட்ரைக் ரேட்டுடன் அமைந்தது, மிகப்பிரமாதமான சில தூக்கி அடிக்கும் ஷாட்களை ஆடிய விஜய் சங்கர் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஆடி வந்த நிலையில் இன்னொரு ஷாட்டை தூக்கி அடிக்க முயன்று லாங் ஆஃபில் கேட்ச் ஆனார்.
ரிஷப் பந்த் 13 பந்துகளைச் சந்தித்து 4 ரன்கள் என்று சொதப்பி சாண்ட்னரின் யார்க்கரில் பவுல்டு ஆனார். இஷ் சோதி, தினேஷ் கார்த்திக் (5), ஹர்திக் பாண்டியா (4) ஆகியோரை ஒரே ஒவரில் வீழ்த்தினார். பிறகு தோனி 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 39 ரன்கள் எடுத்து சவுதியை புல் ஷாட் ஆடி கேட்ச் ஆனார். கடைசியாக சாஹல் 1 ரன் எடுத்து பவுல்டு ஆனார். இந்தியா 139 ஆல் அவுட். மிகப்பெரிய தோல்வி. தோனி கிரீசில் இருக்கும் போதே ஒரு கட்டத்தில் வெற்றி பெற ஓரு ஓவருக்கு 63 ரன்கள் தேவை என்று ரன் விகிதம் எகிறியது. கடைசியில் போட்டி முடியும் போது 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெரிய தோல்வியைத் தழுவியது.
நியூஸிலாந்து தரப்பில் சவுதி 4 ஒவர்கள் 17 ரன்கள் 3 விக்கெட்டுகள். பெர்குசன், சாண்ட்னர், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக அதிரடி வீரர் டிம் செய்ஃபர்ட் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT