Published : 10 Feb 2019 04:46 PM
Last Updated : 10 Feb 2019 04:46 PM
ஹேமில்டனில் நடந்த இந்திய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி.
இந்தத் தோல்வி மூலம் கடந்த 10 டி20 தொடர்களில் தோல்வியே கண்டிராமல் இந்திய அணி வெற்றி நடைபோட்டு வந்த நிலையில் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. 10 தொடர்களில் 9 தொடர்களில் வெற்றியும், ஒரு தொடரை மட்டும் சமன் செய்திருந்தது இந்திய அணி. இப்போது நீண்டகாலத்துக்குப் பின் டி20 தொடரை இழந்துள்ளது.
ஆட்டநாயகனாக கோலின் முன்ரோவும், தொடர் நாயகனாக டிம் சீபெர்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய மகளிர் அணியும் டி20 தொடரை நியூசிலாந்து அணியிடம் இழந்தது. இன்று நடந்த 3-வது போட்டியில் கடைசி ஒவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 13 ரன்கள் சேர்த்து இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.
அதேபோல, இந்திய ஆடவர் அணி மோதிய இந்தப் போட்டியிலும் கடைசி ஓவரில் 16 தேவைப்பட்டது. ஆனால், இந்திய அணி 11 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
தினேஷ் கார்த்திக் டி20 தொடர்களில் களமிறங்கும் போதெல்லாம் கடினமான சவால்கள் முன் நிற்கின்றன. ஆனால், அனைத்து நேரங்களிலும் அணியின் சுமையை தினேஷ் கார்த்திக் சுமப்பது என எதிர்பார்ப்பது கடினம். தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியில் களமிறங்கியபோது, ஓவருக்கு 15 ரன் ரேட் தேவைப்பட்டது. அதையும் நெருங்கிய நிலையில் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங், ரன்களைக் கட்டுப்படுத்த முடியாத பந்துவீச்சு, கேட்சுகளை தவறவிட்டதுதான் தோல்விக்கான விலையாகும். கலீல் முகமது வீசிய கடைசி ஓவரில் ராஸ் டெய்லரை பவுண்டரி அடித்ததுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. அந்த பவுண்டரியை இந்திய அணி தடுத்திருந்தால்,இந்தப் போட்டியில் வெற்றியை அடைந்திருக்கும்.
மிகச்சிறிய ஆடுகளத்தில் 212 ரன்கள் இலக்கு என்பது எட்டக்கூடியது சிறிது கடினம் என்ற போதிலும் இந்திய அணி தொடர்ந்து 10 ரன் ரேட்டுக்கு குறையாமல் கொண்டு சென்றது.
ஆனால், 121 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 24 ரன்களைச் சேர்ப்பதற்கு 3 விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது நெருக்கடியாகும்.
மேலும், கேப்டன் ரோஹித் சர்மா தனது வழக்கமான காட்டடி பாணியைக் கைவிட்டு, நிதான ஆட்டத்துக்குத் திரும்பியது அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. அவர் வழக்கம் போலான ஆட்டத்தைக் கையில் எடுத்திருந்தால், தொடக்கத்தில் இருந்தே ரன் வேகம் கூடியிருக்கும்.
முக்கியமான தருணத்தில் தவண், தோனி பேட்டிங்கில் சொதப்பிவிட்டனர். களத்தில் நின்றிருந்தால், நிச்சயம் அதிகமான அழுத்தத்தைச் சமாளிக்க வேண்டியது இருக்கும் என்பதால் விரைவாகவே விக்கெட்டை தோனி பறிகொடுத்துவிட்டாரா?
213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை விரட்டிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
தவண் (5) விரைவாக ஆட்டமிழந்த நிலையில், ரோஹித் சர்மா, விஜய் சங்கர் பொறுப்புடன் பேட் செய்தனர். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர்.
அதிரடியாக பேட் செய்த விஜய் சங்கர் மீண்டும் தன்னை நீரூபித்துவிட்டார். உலகக்கோப்பைக்கான அணியில் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விஜய் சங்கர் பெயரைப் பரிந்துரைக்கத் தகுதியானவர். 28 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அடுத்து வந்த ரிஷப் பந்த், ரோஹித்துடன் இணைந்தார். வந்த வேகத்தில் அதிரடியாக 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து 12 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது ரோஹித் சர்மா 38 ரன்கள், ஹர்திக் பாண்டியா 21, தோனி 2 ரன்கள் என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். 121 ரன்களுக்கு 3-வது விக்கெட்டையும், 145 ரன்களுக்கு 6-வது விக்கெட்டையும் இந்திய அணி இழந்தது.
குர்னல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இருவரும் முடிந்தவரை நியூசிலாந்து பந்துவீச்சை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி ரன் வேகத்தை அதிகப்படுத்தினர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. சவுதி பந்துவீச்சை கார்த்திக் எதிர்கொண்டார். முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த 2 பந்துகளில் ரன் ஏதும் சேர்க்கவில்லை. 3 பந்தில் ஒரு ரன்னும், 4-வது பந்தில் குர்னல் ஒரு ரன்னும் சேர்த்தனர். கடைசி பந்து வைடாகச் சென்றது. கடைசிப் பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கார்த்திக் சிக்ஸர் அடித்தார்.
தினேஷ் கார்த்திக் 16 பந்துகளில் 33 ரன்களுடனும்(4 சிக்ஸர்கள்), குர்னல் பாண்டியா 13 பந்துகளில் 26 ரன்களுடனும் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மிட்ஷெல், சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.3-வது மற்றும் கடைசிப் போட்டி இன்று ஹேமில்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
டிம் சீபெர்ட், கோலின் முன்ரோ இருவரும் முதல் விக்கெட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். சீபெர்ட் 11 ரன்கள் சேர்த்திருந்தபோது ஒரு கேட்ச் வாய்ப்பை விஜய் சங்கர் தவறவிட்டார். அது மிகவும் கடினமானது என்றாலும் பிடித்திருந்தால், ஆட்டம் மாறியிருக்கும். இருவரின் அதிரடியால் 5.2 ஓவர்களில் நியூசிலாந்து 50 ரன்களை எட்டியது. முதல் 7 ஓவர்களில் 79 ரன்கள் சேர்த்தது.
ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த குல்தீப் யாதவ் வரவழைக்கப்பட்டார். அவரின் வருகைக்கு பலன் கிடைத்தது. 43 ரன்களில் சீபெர்ட் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். இதில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும்.முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கி முன்ரோவுடன் சேர்ந்தார். 28 பந்துகளில் அரைசதத்தை முன்ரோ எட்டினார். 11-வது ஓவரில் நியூசிலாந்து அணி 100 ரன்களை எட்டியது.
முன்ரோ 72(40 பந்துகள்) ரன்கள் சேர்த்திருந்த போது, குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். கிராண்ட்ஹோம் களமிறங்கினார்.
அடுத்த சிறிது நேரத்தில் வில்லியம்ஸன் 27 ரன்கள் சேர்த்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கிராண்ட் ஹோம், மிட்ஷெல் களத்தில் இருந்தனர். நீண்டநேரம் நிலைக்காத கிராண்ட்ஹோம் 30 ரன்கள்(16 பந்துகள்) சேர்த்து வெளியேறினார்.
மிட்ஷெல் 19 ரன்களிலும், ராஸ் டெய்லர் 14 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ், கலீல் அகமது தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT