Published : 03 Feb 2019 04:44 PM
Last Updated : 03 Feb 2019 04:44 PM
வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டாஸ்வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 253 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை அபாரமாக வென்று அவர்களை நையப்புடைத்து நியூசிலாந்து வந்த இந்திய அணி இங்கு வந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
பேட்டிங்குக்கு சாதமான ஆடுகளத்தில் முதல் 3 போட்டிகளை இந்திய அணி வென்றுவிட்டது என்று பலர் விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்குப் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டு வீழ்த்தியுள்ளனர் இந்திய அணியினர்.
4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நிலைகுலையச் செய்து, படுதோல்வி அடையச்செய்த நியூசிலாந்து அணியினருக்கு இன்றைய போட்டியில் இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்தனர்.
அம்பதி ராயுடு, விஜய்சங்கர், கேதார் ஜாதவின் பொறுப்பான பேட்டிங், ஹர்திக் பாண்டியாவின் மிரட்டலான காட்டடி பேட்டிங் ஆகியவை இன்றைய போட்டியில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் சாஹல், ஷமி, ஆகியோரின் பங்களிப்பும் சிறப்புக்குரியது.
இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்து ஆட்டமிழந்ததற்கு யஜூவேந்திர சாஹல், குல்தீப் யாதவின் பந்துவீச்சு முக்கியமானது என்பதை மறப்பதற்கில்லை. ரிஸ்ட் ஸ்பின்னை கடைசிவரை விளையாடத் தெரியாமல் நியூசிலாந்து இந்தத் தொடரில் விக்கெட்டுகளை அதிகமாக இழந்திருக்கிறார்கள்.
இந்த தொடரின் நாயகனாக வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமியும், ஆட்டநாயகனாக அம்பதிராயுடுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
டாஸ்வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 253 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோஹித்சர்மா(2) தவண்(6), கில்(7), தோனி(1) என முக்கிய தூண்கள் விரைவாக சாய்ந்தன. ஆனால், அம்பதி ராயுடு(90), தமிழக வீரர் விஜய் சங்கர்(45) ஆகியோர் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். இவர்கள் இருவரும் பாராட்டுக்குரியவர்கள். உலகக் கோப்பைக்கான தனது இடத்தை சிமெண்ட் போட்டு செட் செய்துவிட்டார் ராயுடு.
அதிலும் விஜய் சங்கரின் ஆர்ப்பரிப்பான பேட்டிங், பந்துவீச்சு இந்திய அணி இனி இவரைப் பயன்படுத்தாமல் தவிர்த்தால் தவறு செய்ததாகிவிடும். நிடாஹஸ் கோப்பையில் வங்கதேச வீரர்களின் பாம்பு டான்ஸுக்கு பலியாகாமல் தடுத்த முக்கியமானவர் விஜய் சங்கர். இப்போதும் நியூசிலாந்து தொடரில் மானம் காத்துவிட்டார். இவரை டி20 போட்டிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல் உலகக்கோப்பைப் போட்டிகளுக்களுக்கும் பயன்படுத்துவது சிறப்பாகும். அணிக்கு அடுத்த ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டார்.
ஹர்திக் பாண்டியா தன்னை மீண்டும் நிரூபித்துவிட்டார். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அனல் தெறிக்கும் என்பதை காட்டிவிட்டார். 22 பந்துகளில் 45 ரன்கள், இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என பட்டையை கிளப்பினார் பாண்டியா. பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரால் கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 84 ரன்கள் குவித்தது வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாகும்.
கடைசிநேரத்தில் அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்திச் செல்ல இதுபோன்ற அதிரடியான பேட்ஸ்மன்கள் தேவை என்பதை நிரூபித்துவிட்டார் பாண்டியா. கடைசி 5 ஓவர்களில் காட்டடி அடித்ததை நியூசிலாந்து வீரர்கள் மறக்க மாட்டார்கள்.
253 ரன்கள் சேர்த்தால் வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்ஸன்(39), ஜிம்மி நீஷம்(44) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ஸ்கோர்செய்தனர். முதல் 10 ஓவர்களுக்குள் நியூசிலாந்து அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் நடுவரிசை வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக விக்கெட்டை காப்பாற்ற தவறிவிட்டனர். நீஷம், வில்லியம்ஸன் இருக்கும்வரை அந்த நம்பிக்கையுடன் இருந்தது இருவரும் ஆட்டமிழந்தபின் நம்பிக்கை இழந்ததோடு விக்கெட்டுகளையும் இழந்தது.
நிலைத்து பேட் செய்துவந்த நீஷத்தை (44) தோனி ரன் அவுட் செய்தவிதம் வேடிக்கையானது. பந்துவீச்சாளர் எல்பிடபிள்யு அப்பீல் செய்தநேரத்தில் மின்னல் வேகத்தில் பந்தை எடுத்து ரன் செய்த தோனியின் சமயோஜித தன்மை, அனுபவம் இந்திய அணியின் வெற்றிக்குத் திருப்புமுனை. முதல் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கடைசி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி. நியூசிலாந்து வீரர் ஹென்ரி 17 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
— Mr Gentleman (@183_264) February 3, 2019
44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு நியூசிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியத் தரப்பில் யஜுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஷமி, பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT