Last Updated : 21 Feb, 2019 01:11 PM

 

Published : 21 Feb 2019 01:11 PM
Last Updated : 21 Feb 2019 01:11 PM

வரலாற்று சேஸிங்: ரூட், ஜேஸன் ராய் மிரட்டல் சதம்: கெயில் சதம் வீண், மே.இ.தீவுகளை சொந்த மண்ணில் சாய்த்தது இங்கிலாந்து

ஜேஸன் ராய், ஜோட் ரூட் ஆகியோர் மிரட்டலான சதத்தால், பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இங்கிலாந்து அணி.

இந்தவெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில இங்கிலாந்து அணி முன்னணியில் இருக்கிறது.

முதலில் பேட் செய்த  மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. 361 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 பந்துகள் மீதமிருக்கையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கரிபியன் மண்ணில், பிரிட்ஜ்டவுனில் மிகப்பெரிய ஸ்கோரான  360 ரன்களை சேஸ் செய்தது இதுதான் முதல்முறையாகும்.  இங்கிலாந்துக்கும் இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய 3-வது சேஸிங் இதுவாகும்.

உலகக்கோப்பையை வெல்வதற்கு இங்கிலாந்து  அணிக்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதை இந்த போட்டியில் ஜேஸன் ராய் மற்றும் ஜோட் ரூட் ஆகியோர் உறுதி செய்துவிட்டார்கள். ரூட் 85 பந்துகளில் 123 ரன்களும்(3 சிக்ஸர், 15 பவுண்டரி), ரூட் 97 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்தார்(9 பவுண்டரிகள்). இருவரின் அதிரடியான ஆட்டம், ஆர்ப்பரிப்பான சதம் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டநாயகன் விருதை ஜேஸன்ராய் பெற்றார்.  இருவரின்  காட்டடி ஆட்டம், மோர்கனின் அதிரடி வெற்றியை எளிதாக்கியது.

இவை ஒருபக்கம் இருக்க 'யுனிவர்ஸல் பாஸ்' என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் மேற்கிந்தியத்தீவுகள் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் நேற்றைய போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலேயே அதிகமான சிக்ஸர் அடித்த வீரர், மற்றும் ஒரு அணிக்கு எதிராக அதிகமான சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

கிறிஸ்கெயில் நேற்றைய ஆட்டத்தில் 129 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார். இதில் 12 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.  

டாஸ்வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. கெயில், கேம்பல் கூட்டணி 38 ரன்களில் பிரிந்தது. கேம்பல் 30 ரன்களில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஹோப், கெயில் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

குறிப்பாக கிறிஸ் கெயில் தொடக்கத்தில் 36 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து மந்தமாக ஆடினார். ஆனால், சிறிதுநேரம் கழித்து அதிரடியில் இறங்கி அரங்கில் சிக்ஸர் மழை பொழிந்தார். 76 பந்துகளில் அரைசதம் அடித்த கெயில்,  100 பந்துகளில் தனது 24-வது சதத்தை நிறைவு செய்தார்.

ஹோப் 48 பந்துகளில் அரைசதம் அடித்து 64 ரன்களில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 131 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ஹெட்மெயர் 20 ரன்னிலும், பூரன் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு கெயிலுடன் டேரன் பிராவோ சேர்ந்தார். அதிரடியாக ஆடிய பிராவோ 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஒரு ஆண்டு இடைவெளிக்குப்பின் ஒருநாள் அணிக்கு திரும்பி அதிரடியில் அசத்திய கெயில் 12 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 135 ரன்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார்.

ஹோல்டர் 16 ரன்னிலும், பிராத்வெய்ட் 3 ரன்னிலும் வெளியேறினர். நர்ஸ் 25 ரன்னிலும், பிஷி 9 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ராஷித், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

361 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பேர்ஸ்டோ, ராய் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கி, நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடக்கத்தில் இருந்தே ராய் அதிரடியாக ஆடினார், இதனால் இங்கிலாந்து பவர்ப்ளேயில் 91 ரன்கள் சேர்த்தது.  பேர்ஸ்டோ 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ராயுடன், ரூட் சேர்ந்தார். இருவரும் கூட்டணி மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சை வெளுத்துக்கட்டினர். ராய் 30 பந்துகளில் அரைசதத்தையும், 65 பந்துகளில் சதத்தையும் எட்டினார். ரூட் 55 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஜேஸன் ராய் 85 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். 2-வதுவிக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் மோர்கன், ரூட்டுடன் சேர்ந்தார். இவர்களும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்ததால், ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

அதிரடியாக பேட் செய்த மோர்கன் 37 பந்துகளில் அரைசதம் அடித்து 65 ரன்களில் வெளியேறினார். இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 116 ரன்கள் சேர்த்தனர்.

4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டோக்ஸ், ரூட்டுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய ரூட் 96 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து, 102 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 பவுண்டரி அடங்கும்.

ஸ்டோக்ஸ் 20 ரன்னிலும், பட்லர் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 48.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் சேர்த்து  வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x