Last Updated : 27 Sep, 2014 10:46 AM

 

Published : 27 Sep 2014 10:46 AM
Last Updated : 27 Sep 2014 10:46 AM

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 7-வது நாளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் 25 மீ. சென்டர் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் விஜய் குமார், பெம்பா டமாங், குருபிரீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,740 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தியாவும், சீனாவும் சமபுள்ளிகளைப் பெற்றபோதிலும், “இன்னர் டென்” முறையில் சீனா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.மகளிர் 50 மீ. ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் லஜ்ஜா கோஸ்வாமி, அஞ்சலி பகவத், தேஜஸ்வினி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 6-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் கண்டது.

ஆடவர் 50 மீ. பிரெஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். 25 வயதான சந்தீப், 28.26 விநாடிகளில் இலக்கை எட்டினார். இந்தப் பிரிவில் கஜகஸ்தானின் டிமிட்ரி பாலன்டின், ஜப்பானின் யாஸுஹிரோ கொசெக்கி ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். நீச்சல் போட்டியில் இந்தியர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்துவரும் தருணத்தில் சந்தீப் பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்குவாஷில் இரு வெள்ளி உறுதி

ஸ்குவாஷ் பிரிவில் ஆடவர், மகளிர் என இரு அணிகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இரு வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. மகளிர் பிரிவில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, அனகா அலங்காமணி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தென் கொரியாவையும், ஆடவர் பிரிவில் மகேஷ், ஹரிந்தர், சவுரவ் கோஷல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் குவைத்தையும் தோற்கடித்தன.

மகளிர் ரிகர்வ் வில்வித்தை அணி பிரிவில் தீபிகா குமாரி உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால் அந்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சனம்

சிங், யூகி பாம்ப்ரி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இரட்டையர் பிரிவில் சாகேத் மைனேனியுடன் இணைந்து ஆடிவரும் சனம் சிங், அதிலும் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

காலிறுதியில் இந்திய மகளிர்

மகளிர் வாலிபால் போட்டியில் இந்திய அணி 25-12, 25-7, 25-11 என்ற செட் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் காலிறுதியில் சீனாவை சந்திக்கிறது இந்தியா. ஆடவர் பிரிவில் ஏற்கெனவே காலிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி தனது கடைசி பிரிலிமினரி சுற்றில் ஈரானிடம் தோல்வி கண்டது.

சிவ தாபா, குல்தீப் முன்னேற்றம்

ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவா தாபா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முந்தைய சுற்றில் பாகிஸ்தானின் நாடிரை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் குல்தீப் (81 கிலோ எடைப்பிரிவு) 2-1 என்ற கணக்கில் தாய்லாந்தின் தாங்க்ரத்தோக் அனாவட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு வீரரான அகில் குமார் (60 கிலோ எடைப் பிரிவு) காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறினார். அவர் பிலிப்பைன்ஸின் சார்லே சுரேஜிடம் தோல்வி கண்டார்.

சாய்னா, காஷ்யப் தோல்வி

மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-18, 9-21, 7-21 என்ற செட் கணக்கில் சீனாவின் இகன் வாங்கிடம் தோல்வி கண்டார். ஆடர் ஒற்றையர் பாட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் காஷ்யப் 12-21, 11-21 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்யிடம் தோல்வி கண்டார். மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் காந்த் 21-19, 11-21, 18-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் சோன் வான்கூவிடம் தோல்வி கண்டார்.

அரையிறுதியில் இந்திய மகளிர்

மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியத் தரப்பில் ரீது ராணி, ஜேஸ்பிரித் கவுர் ஆகியோர் தலா இரு கோல்களையும், நமிதா டோப்போ, வந்தனா கேத்ரியா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்திய அணி தனது அரையிறுதியில் தென் கொரி யாவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியா, கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதிக்கு முன்னேறுமா ஆடவர் அணி?

ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இன்று நடைபெறும் வாழ்வா, சாவா ஆட்டத்தில் சீனாவை சந்திக்கிறது இந்தியா. கடந்த போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா, சீனாவை வீழ்த்தினாலொழிய அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x