Published : 09 Sep 2014 12:12 PM
Last Updated : 09 Sep 2014 12:12 PM
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்ட இந்திய ரசிகர்களை கண்டிக்க மறுத்த தோனியை பிரிட்டன் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
20 ஓவர் போட்டியின்போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி ரசிகர்கள்தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அதிகம் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் விக்கெட் எடுத்தபோதும், பவுண்டரிக்கு பந்தை விரட்டியபோதும் பெரும் கரவொலி எழுந்தது. இந்திய வீரர்களுக்கு ஆதரவாக குறிப்பாக தோனியைப் புகழும் வாசக அட்டைகள் பலவற்றையும் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கொண்டு வந்திருந்தனர். போட்டியில் இங்கிலாந்தில் நடைபெறுகிறதா அல்லது இந்தியாவில் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய ரசிகர்கள் பெருமளவில் மைதானத்துக்கு வந்திருந்தனர்.
இங்கிலாந்தின் மொயின் அலி, ரவி போபாரா ஆகியோர் பேட்டிங் செய்ய வந்தபோதும், வெளியேறியபோதும் இந்திய ரசிகர்கள் சிலர் அவர்களை கேலி செய்யும் நோக்கில் கூச்சல் எழுப்பினர். இதேபோல மொயின் அலி பந்து வீச வந்தபோதும் ரசிகர்கள் பகுதியில் இருந்து சற்று கூச்சல் எழுந்தது.
மொயின் அலி பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், ரவி போபாரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்த பிறகு இது தொடர்பாக கேப்டன் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, இங்கிலாந்து தொடரை சர்ச்சையுடன் முடிக்க விரும்பவில்லை. டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜாவுடன் ஆண்டர்சன் மோதலில் ஈடுபட்ட விவகாரத்துக்குப் பின் ஜடேஜா களமிறங்கியபோது இங்கிலாந்து ரசிகர்கள் இதேபோன்ற கூச்சலிட்டனர். அப்போது யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்றார்.
இதனை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ள தி கார்டியன் நாளிதழ், இந்திய ரசிகர்களை கண்டிக்க மறுத்த தோனி என்று தலைப்பிட்டு தோனியை விமர்சித்துள்ளது. கடைசி ஓவரில் தோனி விளையாடிய விதத்தையும் அப்பத்திரிகை கடுமையாக குறை கூறியுள்ளது. இதேபோல இங்கிலாந்து ஊடகங்கள் பலவும் ரசிகர்களின் கூச்சல் விவகாரத்தையும், தோனியையும் விமர்சித்துள்ளன.
இதே விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன், அனைவருமே இதேபோன்று ரசிகர்களின் கேலி கூச்சலை எதிர்கொண்டுள்ளோம் என்று மட்டும் குறிப்பிட்டார். அவரும் ரசிகர்கள் கூச்சலிட்டத்தை கண்டிப்பதாகக் கூறவில்லை. எனினும் இங்கிலாந்து பத்திரிகைகள் மோர்கனை விமர்சிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT