Published : 23 Sep 2014 11:47 AM
Last Updated : 23 Sep 2014 11:47 AM
சாம்பியன் லீக் போட்டியில் லாகூர் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது. இதன் மூலம் தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்று நைட் ரைடர்ஸ் சாதனை படைத்துள்ளது.இப்போட்டித் தொடரில் தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றுள்ளது. அதற்கு முன்பு பெற்ற 9 வெற்றிகளை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து பெற்ற வெற்றிகளாகும். ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது நினைவுகூரத்தக்கது.
ஹைதரபாதில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன் லீக் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லாகூர் லயன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
லாகூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் அகமது ஷெசாத் அதிகபட்சமாக 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதிரடியாத விளையாடிய உமர் அக்மல் 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் சிறப்பாக பந்து வீசி லாகூர் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.
அடுத்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. கேப்டன் கம்பீர் 47 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 34 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும். இந்த ஜோடி அணியை 12.2 ஓவர்களில் 100 ரன்களுக்கு எடுத்துச் சென்றது.
எனினும் நடுவரிசையில் பிஸ்லா 6 ரன்கள், யூசுப் பதான் 11 ரன்கள், டஸ்சாத்தே 12 ரன்கள், ரஸ்ஸல் 1 ரன் என ஆட்டமிழந்ததால் இலக்கை எட்டு வதில் கொல்கத்தா தடுமாற்றம் கண்டது. எனினும் அடுத்து சூர்யகுமார் யாதவ் 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நரைன்ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கொல்கத்தா அடுத்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT