Published : 17 Feb 2019 03:15 PM
Last Updated : 17 Feb 2019 03:15 PM
புல்வாமாவில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில்40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மும்பையில் பாரம்பரிய கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா(சிசிஐ) தன்னுடைய ரெஸ்டாரண்டில் இருந்த இம்ரான் கான் புகைப்படத்தைத் திரையிட்டு மறைத்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின் செயலாளர் சுரேஷ் பாஃப்னா நிருபர்களிடம் கூறுகையில், " புல்வாமாவில் நமது ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பை வலியுறுத்தியுள்ளோம். சிசிஐ அமைப்பு விளையாட்டோடு தொடர்புடையதாக இருந்தாலும், தேசத்து முதலிடம், அதன்பின் விளையாட்டு.
புல்வாமாவில் இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதில் அளிக்க வேண்டும். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று பிரதமர் இம்ரான் கான் நம்பினால், ஏன் வெளிப்படையாக வந்து பேச மறுக்கிறார். மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். அவர் வெளிப்படையாகப் பேச மறுத்தால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என அர்த்தம் " எனத் தெரிவித்தார்.
உலகக்கோப்பைப் போட்டியில் வரும் மே 30ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16-ம் தேதி ஓல்டு டிராபோர்ட் நகரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT