Last Updated : 18 Feb, 2019 05:54 PM

 

Published : 18 Feb 2019 05:54 PM
Last Updated : 18 Feb 2019 05:54 PM

2019 உலகக் கோப்பைக்கு பின் முக்கிய முடிவு: கிறிஸ் கெயில் அறிவிப்பு

இந்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பைக்கு பின் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.

"ஆம் உலகக் கோப்பைக்குப் பின் நான் ஓய்வெடுக்கப் பார்க்கிறேன். 50 ஓவர் கிரிக்கெட்டைப் பொருத்தவரை உலகக் கோப்பை தான் எனது முடிவு. இளைஞர்களுக்கு வழிவிட்டு நான் அமைதியாக உட்கார்ந்து அவர்கள் கொண்டாடுவதைப் பார்க்கப் போகிறேன்" என்று ஒரு பேட்டியில் கிறிஸ் கெயில் கூறியுள்ளார். 

இதுநாள் வரை அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி கேட்டபோது, "நீங்கள் ஒரு உயர்ந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் தான் உலகிலேயே சிறந்த வீரன். நான் தான் உலகின் தலைவன். அது எப்போதும் மாறாது. நான் சாகும்வரை அது மாறாது" என்றார். 

மேலும், "உலகக் கோப்பையை வென்றால் அது மாயாஜாலக் கதையின் முடிவைப் போல இருக்கும். இளம் வீரர்கள் எனக்காக வென்று கொடுக்க வேண்டும். அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனக்காக அதை வென்று அந்த கோப்பையை என்னிடம் கொடுக்க வேண்டும். எனது யோசனைகளை நான் அவர்களுக்குத் தருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் உலகக்கோப்பை மே 30-லிருந்து ஜூலை 14 வரை நடக்கிறது. 

1999-ஆம் ஆண்டு தனது முதல் போட்டியில் விளையாடிய கெயில் இதுவரை 284 ஆட்டங்களில், 9,727 ரன்களை ஒருநாள் போட்டிகளில் சேர்த்துள்ளார். 23 சதங்களை அடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015 உலகக் கோப்பையில் இவர் 215 ரன்களை சேர்த்தார். 50 ஓவர் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஆறு வீரர்களில் இவரும் ஒருவர். பகுதி நேர ஸ்பின்னராகவும் பந்துவீசியுள்ள கெயில், 165 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், இன்னமும் டி20 போட்டிகளில் ஆடத் தயாராக உள்ளதாக கெயில் கூறியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x