Last Updated : 23 Feb, 2019 05:02 PM

 

Published : 23 Feb 2019 05:02 PM
Last Updated : 23 Feb 2019 05:02 PM

வரலாறு படைத்தது இலங்கை: தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது

போர்ட் எலிசபெத நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்று புதிய வரலாறு படைத்தது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக, ஆசிய கண்டனத்தைச் சேர்ந்த ஒரு அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தொடரை இழந்திருந்திருந்தன, சமன் செய்திருந்தன. ஆனால், யாரும் வெற்றி பெறவில்லை.

இலங்கையின் வெற்றி சமீபத்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கடைசியாக உள்நாட்டில் நடந்த 7 டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் நடந்த 19 டெஸ்ட்களில் 16 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது.

இலங்கை அணியில் முன்னணி வீரர்களான சந்திமால் உள்ளிட்ட பலர் காயத்தால் அணியில் இடம் பெறாத நிலையில், இளம் வீரர்களை நம்பியே களமிறங்கியது. அவர்கள் அனைவரும் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளனர்.

போர்ட்எலிசபெத் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கிய இரண்டரை நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. வெற்றி பெற்றவுடன் இலங்கை அணி வீரர்கள் அனைவருக்கும் மைதானத்துக்குள் வந்து தங்கள் ஒருவொருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உலகக்கோப்பைப் போட்டி நெருங்கி வரும் நிலையில், இலங்கை அணிக்குத் தார்மீக ரீதியாக பெரும் ஆதரவையும், ஊக்கத்தையும் அளிக்கும்.

2-வது நாளான நேற்று மட்டும் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாகக் கடந்த இரண்டரை நாட்களில் 189.1 ஓவர்கள் வீசப்பட்டு 32 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதில் இலங்கை அணி ஒருமுறை ஆல்அவுட்டும், தென் ஆப்பிரிக்க அணி இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்துள்ளது.

197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது. பெர்னாண்டோ 75 ரன்களிலும்(2 சிஸ்கர்,13 பவுண்டரி), மெண்டிஸ் 84 ரன்களிலும்(10 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

குஷால் பெரேரா தொடர் நாயகனாகவும், மெண்டிஸ் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். குஷால் பெரேரா முதல் டெஸ்டில் தூணாக நின்று அணியை வெற்றி பெறவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை அணி வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதில் முக்கியமானது இந்த வெற்றியாகும்.

கடந்த 2014-ம் ஆண்டில் இங்கிலாந்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது, 2017-18-ம் ஆண்டில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கிலும், 2017-18-ம் ஆண்டில் வங்கதேசத்தை 1-0 என்ற கணக்கிலும் தற்போது தென் ஆப்பிரிக்காவை அதன் மண்ணில் வைத்து 2-0 என்றும் இலங்கை வென்றுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் 61.2 ஓவர்களில் 222 ரன்களிலும்,  இலங்கை அணி 37.4 ஓவர்களில் 154 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

69 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 44.3 ஓவர்களில் 128 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இரண்டாம் நாளான நேற்றுமட்டும் 18 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் களமிறங்கியது. 16 ஓவர்களில் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்திருந்தது. களத்தில் மெண்டிஸ் 10 ரன்களுடனும், பெர்னான்டோ 17 ரன்களுடன் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இன்று 30 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மீதிருந்த 137 ரன்களை மேற்கொண்டு எந்தவிதமான விக்கெட்டுகளையும் இழக்காமல் எளிதாக வெற்றியைப் பெற்றது. மெண்டிஸ், பெர்ணான்டோ அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x