Published : 25 Sep 2014 11:21 AM
Last Updated : 25 Sep 2014 11:21 AM
பெங்களூரில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர் லயன்ஸும் மோதுகின்றன. டால்பின்ஸ் அணிக்கு எதிராக 242 ரன்கள் குவித்து அபார வெற்றி கண்ட தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆட்டத்திலும் அதிரடியைத் தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது. சூப்பர் கிங்ஸின் பேட்டிங் மிக வலுவாக உள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் வெளுத்துக் கட்டிய தொடக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித், கடந்த இரு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் சென்னையின் பேட்டிங் பலம் மேலும் அதிகரிக்கும். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரென்டன் மெக்கல்லம் கடந்த போட்டியில் 29 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.
மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா கடந்த ஆட்டத்தில் 43 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். அவர் இந்த ஆட்டத்தில் லாகூர் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என நம்பலாம். இதுதவிர டூ பிளெஸ்ஸி, கேப்டன் தோனி, பிராவோ, ரவீந்திர ஜடேஜா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
அதேநேரத்தில் சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பிராவோ மட்டுமே சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஆசிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோரின் பந்துவீச்சும் சூப்பர் கிங்ஸின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
லாகூர் அணியைப் பொறுத்தவரையில் சாட் நஸிம், கேப்டன் முகமது ஹபீஸ், அஹமது ஷெஸாத், உமர் அக்மல் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் ஷெஸாத் 59 ரன்களும், அக்மல் 40 ரன்களும் சேர்த்தனர்.
பந்துவீச்சில் அயாஸ் சீமா, வஹாப் ரியாஸ், இம்ரான் அலி ஆகியோரை நம்பியுள்ளது லாகூர் லயன்ஸ். அவர்கள் அனைவரும் தகுதிச்சுற்றிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். எனினும் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலொழிய லாகூர் லயன்ஸ் வெற்றி பெறுவது கடினமே.
சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), டுவைன் ஸ்மித், பிரென்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸ்ஸி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், மோஹித் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா, ஈஸ்வர் பாண்டே, பவன் நெகி, ஜான் ஹேஸ்டிங்ஸ், சாமுவேல் பத்ரி, மிதுன் மன்ஹாஸ்.
லாகூர் லயன்ஸ்: முகமது ஹபீஸ் (கேப்டன்), உமர் சித்திக், அஹமது ஷெஸாத், நசிர் ஜம்ஷெட், சாட் நஸிம், உமர் அக்மல், வஹாப் ரியாஸ், ஆசிஃப் ராஸா, முஸ்தபா இக்பால், அட்னன் ரசூல், அயாஸ் சீமா, முகமது சயீத், அலி மன்சூர், சல்மான், இம்ரான் அலி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT