Published : 15 Feb 2019 08:20 PM
Last Updated : 15 Feb 2019 08:20 PM
சமீபத்தில் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த தினேஷ் கார்த்திக் மிகவும் உற்சாகமாக ‘என்னை அணி நிர்வாகம் முழுதும் ஆதரிக்கிறது’ என்று பேட்டியளித்தார். ஆனால் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளது சோகமான நகைமுரண்.
உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் தொடராகும் இது, இதிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டிருப்பது, உலகக்கோப்பையில் அவரது இடம் குறித்த ஐயங்களை எழுப்பியுள்ளது.
அந்தப் பேட்டியில் அவர் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியபோது, “இதுதான் உங்களுடைய ரோல் இப்போதைக்கு... என்றார்கள், என்னை அணி நிர்வாகம் முழுதும் ஆதரிக்கிறது. இந்த நிலையில்தான் நான் இறங்கப்போகிறேன், என்னிடம் அவர் இதை எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்து விட்டனர். அதைத்தான் நான் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்” என்று பேட்டியளித்தார்.
ஆனால் தொடர்ந்து சொதப்பலாக ஆடி வரும், காயங்களை நிர்வகிக்கத் தெரியாதவருமான கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், டி20, ஒருநாள் என்று இரு அணிகளிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஆடும் ஆட்டம் இந்திய அணிக்கு சர்வதேச போட்டிகளில் ஆடும்போது உதவும் என்ற நிலைமாறி ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதற்கு சர்வதேச போட்டிகளை பயிற்சிக்களமாக வீரர்களுக்கு ஆக்கித்தரும் ‘திருப்பணி’யை இந்தியத் தேர்வுக்குழு ஏற்பாடு செய்கிறதோ என்ற ஐயமே எழுகிறது. இல்லையெனில் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டதன் தர்க்கத்தை நாம் எப்படி புரிந்து கொள்வது?
கடந்த 2 ஆண்டுகளில் தினேஷ் கார்த்திக் இந்தியா எதிரணியினரின் இலக்கை வெற்றிகரமாக விரட்டிய 10 போட்டிகளில் 7 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார். ஜோ ரூட் 9 முறை நாட் அவுட்டாகவும், தோனி, கோலி தலா 8 முறை வெற்றி விரட்டலில் நாட் அவுட்டாகவும் இருந்துள்ளனர், அவர்களுக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.
டி20 அணியிலி தினேஷ் கார்த்திக்கை வைத்துள்ளனர், அதற்குக் காரணம், கடந்த 2 ஆண்டுகளில் வெற்றிகரமான விரட்டலில் அதிக நாட் அவுட் வீரராக இருந்துள்ளார். இந்திய அணி இலக்கை விரட்டி வென்ற 7 இன்னிங்ஸ்களிலும் கார்த்திக் கடைசி வரை நின்றுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 142.42 என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாறாக கே.எல்.ராகுல் தன் ஒருநாள் போட்டி கரியரில் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகளில் ஆடி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 100, 33, 63 என்று எடுத்துள்ளார். வலுவான இங்கிலாந்துக்கு எதிராக அவரது ஸ்கோர் 8, 5, 11, இலங்கைக்கு எதிராக 4, 17, 7, மீண்டும் இங்கிலாந்துடன் 9 நாட் அவுட், பிறகு ஒரு டக், கடைசியாக 2018-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 60 நாட் அவுட். இவரது ஸ்ட்ரைக் ரேட் 80.66. இவரது ஒருநாள் போட்டி ஸ்கோருக்காக இவரைத் தேர்வு செய்ய முடியுமா என்றால் முடியாது, கூடாது என்பதே பதிலாக இருக்க முடியும். டி20 போட்டிகளில் கடைசியாக ராகுல் எடுத்த 3 ஸ்கோர்கள் 17, 13, 14.
மேலும் தினேஷ் கார்த்திக் இறங்கும் டவுன் ஆர்டர் மிகவும் ரிஸ்கான டவுன் ஆர்டர், அதன் மீதான எதிர்பார்ப்புகளை அவர் இதுவரை திருப்திகரமாக பூர்த்தி செய்தே வந்திருக்கிறார், அன்று டி20-யில் நியூசிலாந்தில் குருணால் பாண்டியாவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தோற்ற பிறகு குருணால் பாண்டியாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். உண்மையில் அணிக்கான ஒரு வீரர்.. எந்த டவுனிலும் இறங்கத் தயாராக உள்ள வீரர்.
கடைசி 2 ஆண்டுகள் நன்றாக ஆடியும் அவரை அணியிலிருந்து நீக்க முடியும் என்றால் இதன் பின்னணிகளை, அணித்தேர்வுக்குழுவின் செயல்பாடுகளை தீவிரமாக பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளதையே காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT