Published : 17 Sep 2014 04:35 PM
Last Updated : 17 Sep 2014 04:35 PM
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தன் பயணத்தில் லாகூர் வந்து சேர்ந்தது.
பாகிஸ்தான் சுதந்திர நினைவுச் சின்னம் அருகே கேப்டன் மிஸ்பா உல் ஹக் உலகக் கோப்பையைப் பெற்றார்.
அவர் இது குறித்து கூறும் போது, “தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி உலகக் கோப்பை என்பது மிகப்பெரிய உலகத் தொடராகும். இதற்காக அனைத்து அணிகளும் தயார் படுத்தி வருகின்றன, இந்தச் சவாலுக்கு பாகிஸ்தான் அணியும் தங்கள் தரப்பில் கடுமையாக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது” என்றார்.
1992ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலியா-நியூசீலாந்தில் 2வது முறையாக உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி சாம்பியன் ஆனது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை பாகிஸ்தான் முதன் முதலில் கைப்பற்றியது.
அந்த நினைவாக பாகிஸ்தான் வந்துள்ளது இந்த உலகக் கோப்பை. “ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலகக் கோப்பை நடைபெறுவதால் அங்கு சாம்பியன் ஆன அணி என்ற முறையில் பாகிஸ்தான் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதரவுடன் இந்த முறையும் உலகக் கோப்பையை வெல்ல பாடுபடுவோம்” என்று மேலும் கூறினார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.
சுதந்திர நினைவுச் சின்ன இடத்திலிருந்து லாகூர் கடாஃபி விளையாட்டு மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது உலகக்கோப்பை. பிறகு கராச்சியில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி பிரிவு பி-யில் இந்தியா, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், யு.ஏ.இ., ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் இருக்கிறது.
அடிலெய்டில் பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியை பிப்.21ஆம் தேதி கிறைஸ்ட் சர்ச்சில் எதிர்கொள்கிறது. மீண்டும் ஆஸ்திரேலியா வந்து மார்ச் 1ஆம் தேதி பிரிஸ்பனில் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. தென் ஆப்பிரிக்க அணியை மார்ச் 7ஆம் தேதி ஆக்லாந்தில் எதிர்கொள்கிறது.
இதுவரை உலகக் கோப்பை இலங்கை, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, பபுவா நியுகினியா, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டது. அடுத்து தென் ஆப்பிரிக்கா செல்கிறது.
மேலும் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், யு.ஏ.இ. ஆகிய நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT