Last Updated : 23 Jan, 2019 11:03 AM

 

Published : 23 Jan 2019 11:03 AM
Last Updated : 23 Jan 2019 11:03 AM

தொடக்கி வைத்த ஷமி, முடித்துவைத்த குல்தீப்: 157 ரன்களில் சுருண்டது நியூசி.

நேப்பியரில் நடந்துவரும் முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ரன்களில் சுருண்டது.

நியூசிலாந்து அணியின் சரிவைத் ஷமி தொடக்கவைக்க, அதை வெற்றிகரமாக குல்தீப் யாதவும், சாஹலும் முடித்துவைத்தனர்.

நியூசிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்று பிட்ச் ரிப்போர்ட் கூறியது. இதனால், 300 ரன்களுக்கு மேல் முதலில் பேட் செய்யும் அணியால் அடிக்க முடியும், 2-வது பேட்டிங் செய்யும் அணியும் சேஸிங் செய்ய முடியும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், காற்றுப்போன பலூன் போல நியூசிலாந்தின் ஆட்டம் அமைந்துவிட்டது.

குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹலின் ரிஸ்ட் ஸ்பின்னை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிலும் அவர்களின் ஆடுகளித்தில் விசித்திரமாகச் சுழலும் இந்தப்பந்துவீச்சு நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

முகமது ஷமயின் துல்லியத்தன்மை நிறைந்த பந்துவீச்சுக்கு தொடக்கத்திலேயே நியூசிலாந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்த சரிவை கேப்டன் வில்லியம்ஸனால் கடைசிவரை தடுத்துநிறுத்த முடியவில்லை. சீரான இடைவெளியில் நியூசிலாந்து வீரர்கள் பெவிலயனில் இருந்து வருவதும், செல்வதுமாக இருந்தனர்.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமே கேப்டன் கானே வில்லியம்ஸன் சேர்த்த 64 ரன்கள் தான். இந்த ரன்களை தவிர்த்துப்பார்ததால், நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 90 ரன்களுக்குள்தான் இருந்திருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

நியூசிலாந்து அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்ட ரோஸ் டெய்லர்(24), சான்ட்னர்(14) ரன்களில் வெளியேறினார். காட்டி அடிக்கும் கப்தில், முன்ரோ, லதாம் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. நேப்பியரில் இன்று பகலிரவாக முதலாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கானே வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஷமி வீசிய 2-வது ஓவரில் கப்தில் 5 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது, ஷமி தனது ஒருநாள் அரங்கில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கினார். ஒரு ஓவர் மட்டுமே முன்ரோ தாக்குப்பிடித்த முன்ரோ 2 பவுண்டரிகள் அடித்தார்.

4-வது ஓவரை மீண்டும் ஷமி வீசினார். அப்போது, கிளீன் போல்டாகி 8 ரன்களில் முன்ரோ வெளியேறினார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு ஆபத்தான பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் களமிறங்கி, வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர்.

இவர்களைப் பிரிக்க விஜய் சங்கரும், சாஹலும் அழைக்கப்பட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது. 15-வது ஓவரை சாஹல் வீசினார். 3-வது பந்தில் சாஹலிடமே கேட்ச் கொடுத்து ரோஸ் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து டாம் லதாம் களமிறங்கி வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். சிறிது நேரம் மட்டுமே நிலைத்து ஆடிய லதாம் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.

விஜய் சங்கர் வீசிய 16-வது ஓவரில் வில்லியம்ஸன் அடித்த கேட்சை கேதார் ஜாதவ் தவறவிட்டார்.

19-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சாஹலிடமே கேட்ச் கொடுத்து லதாம் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்

5-வது விக்கெட்டுக்கு வந்த நிக்கோலஸ், வில்லியம்ஸனுடன் இணைந்து விளையாடி வருகிறார். தனிஆளாக போராடி வரும் வில்லியம்ஸன், அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்தார். குறிப்பாக சாஹல் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு வுண்டரிகளை விளாசினார்.

இதனால் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட்டது.இவர்கள் இருவரையும் பிரிக்கும் நோக்கில் கேதார் ஜாதவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. 24-வது ஓவரை கேதார் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் மிட்விக்கெட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து நிகோலஸ் 12 ரன்களில் வெளியேறினார்.

அடுத்துவந்த சான்ட்னர், வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் நிதானமாக ஆடிய வில்லியம்ஸன் 63 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

30-ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் எல்பிடபிள்யு முறையில் 14 ரன்களில் வெளியேறினார் சான்ட்னர். அதன்பின் நியூசிலாந்தின் விக்கெட்சரிவு வேகம் அதிகரித்தது.

குல்தீப் யாதவ் வீசிய 33-வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. நிதானமாக ஆடியவில்லியம்ஸன் 64 ரன்கள் சேர்த்திருந்த போது லாங்க் ஆன் திசையில் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் பிரேஸ்வெல் 7 ரன்னில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

பெர்குஷன், சவுதி களத்தில் இருந்தனர். 35-வது ஓவரில் மீண்டும் குல்தீப் யாதவ் பந்துவீசியபோது விக்கெட் விழுந்தது. குல்தீப் வீசிய ஓவரில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு பெர்குஷன் டக்அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து டிரன்ட் போல்ட் களமிறங்கினார். குல்தீப் வீசிய 38-வது ஓவரில் ரோஹித் சர்மாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் போல்ட் ஆட்டமிழந்தார்.

107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணி அடுத்த 50 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. கடைசி 10 ரன்களுக்குள் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

38 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x