Published : 31 Jan 2019 01:00 PM
Last Updated : 31 Jan 2019 01:00 PM

எங்களுக்கு மட்டுமல்ல ஸ்விங் ஆகும்போது  எந்த அணிக்குமே கடினம்தான்: பெரிய தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா

ஹாமில்டன் ஒருநாள் போட்டியில் இந்தியாவை 212 பந்துகள் மீதம் வைத்து நியூஸிலாந்து அணி பெரிய வெற்றியை பெற்றதையடுத்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தோல்விக்கான காரணங்களைக் குறித்துப் பேசியுள்ளார்.

 

பிட்சில் பந்து ஸ்விங் ஆகி கொஞ்சம் கூடுதலாக எழும்ப, இடுப்புயர பந்துகளில் வெளுத்து வாங்கும் இந்திய சூப்பர்ஸ்டார்கள் தட்டுத் தடுமாறியதைப் பார்க்க முடிந்தது.

 

2002-ல் இப்படிப்பட்ட பிட்சில்தான் சேவாக் ஒருநாள் போட்டிகளில் அங்கு 2 சதங்களை விளாசினார். ஆனால் அதே அளவு இந்த ‘சுயவிளம்பரப் பிரிய’ இந்திய அணியை ‘டேமேஜ்’ செய்ய அனுமதிப்பார்களா? அதனால் தொடரை இந்தியா வென்ற பிறகு இத்தகைய பிட்ச் போடப்பட்டுள்ளது என்று கொள்ளலாமா?

 

ஆட்டம் முடிந்த பிறகு நீண்ட காலத்துக்குப் பிறகு இந்திய பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டதாக ரோஹித் சர்மா தெரிவித்தார்.

 

“நீண்ட காலத்துக்குப் பிறகு இந்திய அணியின் மோசமான பேட்டிங் இது.  நியூஸிலாந்து பவுலர்களுக்குப் பாராட்டு.  பிட்ச் உள்ளிட்டவை கடினமாக இருக்கும் போது ஒரு பேட்டிங் யூனிட்டாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

நிதானமாக ஆடியிருக்க வேண்டும், ஆனால் அதைச் செய்யத் தவறினோம். இது மோசமான பிட்ச் அல்ல, கொஞ்சம் நிதானித்து ஆடியிருந்தால் பேட் செய்வதற்கு நல்ல பிட்ச்தான். எங்களை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டு ஆடவில்லை. நாங்கள் சில மோசமான ஷாட்கலை ஆடினோம்.  பந்துகள் ஸ்விங் ஆகும்போது எப்போதுமே சவால்தான். எங்களுக்கு மட்டுமல்ல ஸ்விங் ஆகும்போது  எந்த அணியுமே திணறவே செய்யும்.

 

குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய தொடர்களில் வெற்றி பெற்றோம்.  பந்துகள் ஸ்விங் ஆகும் தருணங்கள் எப்போதும் அமையும் அதனை எப்படிக் கையாள்வது என்பதில் திட்டமிடல் முக்கியம்.

 

என்ன தவறு நடந்தது என்று நாங்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம்.  தொடரை வென்று விட்டோம் என்பதற்காக ரிலாக்ஸ் ஆகக் கூடாது. தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும் நல்ல அணிகள் அதைத்தான் செய்யும். வெலிங்டன் போட்டியை எதிர்நோக்குகிறோம்”

 

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x