Published : 11 Jan 2019 09:29 PM
Last Updated : 11 Jan 2019 09:29 PM
டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி விராட் கோலி தலைமைய்ல் நாளை சிட்னியில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி வலுவாக உள்ளது, ஆஸ்திரேலிய அணி மிகவும் பலவீனமாக உள்ளது.
ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் தங்கள் அந்தரங்க விஷயங்களையும் பெண்களுடனான தொடர்பு பற்றியும் பேசி வசமாகச் சிக்கிஉள்ளதால் முதல் போட்டியில் அவர்களை தேர்வு செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ சிஓஏ அணி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இது ஒரு புதிய கவனச் சிதறலை அணிக்கு ஏற்படுத்தியுள்ளது.
2019 இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா 13 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது, இதில் தேறுபவர்கள் உலகக்கோப்பையில் இடம்பெறுவார்கள், தேறாதவர்கள் அணியிலிருந்து அகற்றப்படுவார்கள், ஆனால் இந்த வழக்கமான பார்முலாவுகு இடையூறாக இருப்பவர் தோனி. அவர் இந்திய அணிக்காகச் செய்த ஏகப்பட்ட பங்களிப்புகளின் காரணமாக உலகக்கோப்பையை கடைசி தொடராக அவருக்கு அளிக்கலாம் என்று முடிவெடுத்தால் அவர் நிச்சயம் பேட்டிங்கில் பழைய வெற்றி அதிரடி பாணிக்குத் திரும்பியாக வேண்டும், ஏனெனில் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என்று சாதித்துள்ளதால் தோனிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
“அணியின் வழிகாட்டும் விளக்கு”, ‘சாஹல், குல்தீப்புக்கு விலைமதிப்பற்ற அறிவுரைகள்’ ‘களத்தில் கோலிக்கே உதவி புரிகிறார்’ போன்ற அலங்கார, தனிமனித வழிபாட்டு சொல்லலங்காரங்களை வைத்துக் கொண்டே நீண்ட காலம் ஓட்ட முடியாது என்பதை தோனியும் அறிந்திருப்பார், ஏனெனில் அவர் நாம் கருதுவது போல் கூலும் அல்ல ஒன்றும் அல்ல, என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறியும் சாமர்த்தியமான ஒரு வீரர். ஒருநாள் போட்டிகளில் இன்னமும் 50.11 என்ற சராசரி வைத்துள்ளார், அதற்குக் காரணம் அவர் ஏகப்பட்ட நாட் அவுட்கள் என்பதால் அவரது சராசரி பாதிக்கவில்லை. மற்றபடி அவரது கடைசி சில இன்னிங்ஸ்களைப் பார்ப்போம். கடைசியாக அவர் அரைசதம் (65) எடுத்தது டிசம்பர் 10, 2017-ல் தரம்சலாவில், அதுவும் இந்தியா இலங்கைக்கு எதிராக படுதோல்வி அடைந்த ஒரு நாள் போட்டியாகும் அது. கடைசியாக சதம் கண்டது இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில், 134 ரன்கள், யுவராஜ் சிங்கும் (150) இவரும் வெளுத்துக் கட்டிய போட்டியில் 381 ரன்கள் எடுத்தும் இந்திய அணி 15 ரன்களில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 366/8.
கடைசியாக எடுத்த 65க்குப் பிறகு தோனியின் ஸ்கோர்கள் வருமாறு: 7, 4, 10, 42 நாட் அவுட், (இந்தப் போட்டியில் 36 ஓவர்களில் 210 ரன்கள் வந்த பிறகும் தோனியினால் 300 ரன்களுக்கும் மேல் ஸ்கோரைக் கொண்டு செல்ல முடியவில்லை 289 ரன்களில் முடிந்தது, டக்வொர்த் லூயிசில் தெ. ஆ. வென்றதற்கு இவரது படுமந்தமான ஆட்டம் காரணமானது), 37, 42, 0 (ஹாங்காங்குக்கு எதிராக டக்), 33, 8 (ஆப்கானுக்கு எதிராக சொதப்பினார் ஆட்டம் ‘டை’ ஆனது), பிறகு 36, 20, 7, 23 . இதுதான் எம்.எஸ்.தோனியின் ஸ்கோர்கள். தோனி கடைசி 20 ஒருநாள் போட்டிகளில் மிகக்குறைந்த 275 ரன்களை எடுத்துள்ளார். 25 ரன்கள் சராசரி, அரைசதம் இல்லை. அவரது கரியர் ஸ்ட்ரைக் ரேட் 87.89, ஆனால் கடைசி 20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 71.42. இது அவரது ஹிட்டிங் திறமைகளுக்கு போதாததாக உள்ளது. எனவே இந்தத் தொடரை அவர் பயன்படுத்த வேண்டும். வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு ஒரு முன்னோட்டமாக அவர் பார்த்தாலும் சரி, ரன்கள்... ரன்கள்.. வேக ரன்கள் இது மட்டுமே அவர் சார்பாக இனி பேச முடியும், பழைய புகழாரங்கள் இல்லை என்பதை அவர் உணர வேண்டும்.
தினேஷ் கார்த்திக் இடையிடையே வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் டவுன் ஆர்டர்களை மாற்றி மாற்றி வெறுப்பேற்றினாலும் நன்றாக ஆடிவருகிறார். ஆனால் இவருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர் அக்னிப்பரிட்சைதான்
ஷிகர் தவண், அம்பாத்தி ராயுடு, கேதார் ஜாதவ், சாஹல் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். பாண்டியா ஆட முடியாததால் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னியில் நாளை பிட்சில் கொஞ்சம் புற்கள் உள்ளன, மற்றபடி அதிக ரன்கள் போட்டியாகவே இது அமையும் என்று தெரிகிறது. இதுவரை சிட்னியில் 16 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 13-ல் வென்றுள்ளது இந்தியா 2-ல் வென்றுள்ளது. இங்குதான் கடைசியாக 331 ரன்கள் இலக்கை 81 பந்துகளில் 104 ரன்கள் விளாசி மணீஷ் பாண்டே வெற்றிக்கு இட்டுச் சென்றார், ஆனால் அவர் இல்லை.
தவண் 65 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். ஜடேஜாவுக்குத் தேவை 2000 ரன்களுக்கு 18 ரன்கள்.
ஆட்டம் நாளை காலை 7.50 மணிக்குத் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT