Published : 23 Jan 2019 09:27 AM
Last Updated : 23 Jan 2019 09:27 AM
நேப்பியரில் நடந்து முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறி வருகிறது.
துல்லியத்துடனும், வேகத்துடனும் பந்துவீசிய முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் புதிய மைல்கல்லையும், சாதனையும் படைத்தார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. நேப்பியரில் இன்று பகலிரவாக முதலாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இருவர், அம்பதி ராயுடு ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் எந்தவிதமான காரணமும் இன்றி ஓரங்கப்பட்டு ராயுடு அழைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியத் தொடரில் இரு போட்டிகளிலும் மோசமாக விளையாடியதால், ராயுடு 3-வது போட்டியில் நீக்கப்பட்டார். ஆனால், தினேஷ் கார்த்திக் நடுவரிசையில் இறங்கினாலும், சிறப்பாகவே விளையாடினார். ஆஸி.க்கு எதிரான 2-வது போட்டியில் தோனியுடன் நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் கார்த்திக் என்பதை மறக்க முடியாது. ஆனால், இந்த ஆட்டத்தில் ஏன் ஓய்வளிக்கப்பட்டார் என்பது புரியவில்லை.
ஏற்கெனவே, உடற்தகுதியை காரணம்காட்டி அஸ்வினை அணியில் இருந்து ஓரம்கட்டியுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக்கை ஒதுக்கி வருகிறார்கள்.
நியூசிலாந்து அணியில் டக் பிரேஸ்வெல், சான்ட்னர் அணிக்குத் திரும்பினர்.
கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஷமி வீசிய 2-வது ஓவரில் கப்தில் 5 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது, ஷமி தனது ஒருநாள் அரங்கில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கினார். ஒரு ஓவர் மட்டுமே முன்ரோ தாக்குப்பிடித்த முன்ரோ 2 பவுண்டரிகள் அடித்தார்.
4-வது ஓவரை மீண்டும் ஷமி வீசினார். அப்போது, கிளீன் போல்டாகி 8 ரன்களில் முன்ரோ வெளியேறினார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.
3-வது விக்கெட்டுக்கு ஆபத்தான பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் களமிறங்கி, வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர்.
இவர்களைப் பிரிக்க விஜய் சங்கரும், சாஹலும் அழைக்கப்பட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது. 15-வது ஓவரை சாஹல் வீசினார். 3-வது பந்தில் சாஹலிடமே கேட்ச் கொடுத்து ரோஸ் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து டாம் லதாம் களமிறங்கி வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். சிறிது நேரம் மட்டுமே நிலைத்து ஆடிய லதாம் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
விஜய் சங்கர் வீசிய 16-வது ஓவரில் வில்லியம்ஸன் அடித்த கேட்சை கேதார் ஜாதவ் தவறவிட்டார்.
19-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சாஹலிடமே கேட்ச் கொடுத்து லதாம் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு வந்த நிக்கோலஸ், வில்லியம்ஸனுடன் இணைந்து விளையாடி வருகிறார். தனிஆளாக போராடி வரும் வில்லியம்ஸன், அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்களைச் சேர்த்தார். குறிப்பாக சாஹல் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு வுண்டரிகளை விளாசினார்.
இதனால் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட்டது.இவர்கள் இருவரையும் பிரிக்கும் நோக்கில் கேதார் ஜாதவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. 24-வது ஓவரை கேதார் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் மிட்விக்கெட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து நிகோலஸ் 12ரன்களில் வெளியேறினார்.
நியூசிலாந்து அணி 25 ஓவர்களில் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. சான்ட்னர், வில்லியம்ஸன் 47 ரன்களில் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT