Published : 02 Jan 2019 05:26 PM
Last Updated : 02 Jan 2019 05:26 PM

நொந்து நூலாகியிருக்கும் இந்த ஆஸி.யை வீழ்த்தி தொடரை வெல்லாவிட்டால் இனி வாய்ப்பு கடினம்: வரலாறு படைக்கும் முனைப்பில் இந்திய அணி

நொந்து நூலாகிப் போன ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியிலும் வென்று தொடரை 3-1 என்று கைப்பற்றி ஆஸ்திரேலிய மண்ணில் புதிய இந்திய வரலாறு படைக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க, அதை நடக்க விடாமல் 2-2 என்று ட்ரா செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும், என்ன மாற்றம் வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி சிந்தித்து வருகிறது.

 

நாளை (வியாழன்) சிட்னியில் தொடரின் கடைசி டெஸ்ட் ஆண்டின் முதல் டெஸ்ட். இதில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மோதும் என்றாலும் இந்திய அணி வரலாறு படைப்பதில் கடும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

 

2010-11 ஆஷஸ் தொடரில் இதே நிலைதான் இருந்தது. அடிலெய்டில் இங்கிலாந்து வெல்ல, பெர்த்தில் ஆஸ்திரேலியா வெல்ல சிட்னியில் சமன் ஆகும் நிலை ஏற்பட்ட போது இங்கிலாந்து 3-1 என்று தொடரை வென்றது.

 

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் அணித்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடும் தவறுகளை இழைத்த விராட் கோலி அங்கு தொடரை வெல்லும் வாய்ப்புகளை இழந்தார், ஆனால் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடரை வெல்ல முடியாமல் போனால் இனி எப்போதும் வெல்ல முடியாது என்ற நிலையே ஏற்படும், கபில்தேவ் 1985-86 தொடரில் இதே போன்ற நொந்து நூலான ஒரு ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொள்ளும் நிலைக்கு வந்து நடுவர்களின் மோசடிகளினால் தொடரை வெல்ல முடியாமல் போனது, ஆனால் அப்போது ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான ஆலன் பார்டர் கேப்டனாக இருந்தார்.

 

அதே போல் கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுகு 2008-ல் சென்ற போதும் மெல்போர்னில் தோற்றோம், பிறகு சிட்னியில் நடுவர் மோசடித் தீர்ப்புகளினாலும் சர்ச்சைகளினாலும் தோற்றோம், ஆனால் பெர்த்தில் பதிலடி கொடுத்தோம், அடிலெய்டில் ஆஸி. போராடி ட்ரா செய்தது, அந்தத் தொடரிலும் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டியது.

 

இதுவரை ஆஸ்திரேலியாவில்...

 

1947-48 முதல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஆடி வருகிறது. இதில் 1980-81, 1985-86, 2003-04 ஆகிய தொடர்களை இழக்காமல் ட்ரா செய்தது இந்திய அணி. ஆனால் 1967-68, 1977-78 (இது மிகவும் நெருக்கமாக ஆடப்பட்ட தொடர்), 1991-92, 199-2000, 2007-08, 2011-12, 2014-15 என்று உதை மேல் உதை வாங்கியதுதான் நடந்துள்ளது.

 

ஆகவே விராட் கோலி தன் தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியை இடம்பெறச் செய்யும் முனைப்பில் இருக்கிறார்.

 

இந்திய அணிக்குப் பின்னடைவாக ஸ்பின் எடுக்கும் என்ற சிட்னி பிட்சில் அஸ்வின் ஆட முடியாமல் போயிருப்பது மற்றும் அருமையாக வீசிவரும் இஷாந்த் சர்மா காயம் காரணமாக ஆட முடியாமல் போயிருப்பதும் ஆகும். ஆனால் குல்தீப் யாதவ்வை 13 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்துள்ளனர். இஷாந்த் சர்மாவுக்குப் பதில் உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார், சிட்னி பிட்ச் இவரது பந்து வீச்சுக்கு தோதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 

ரோஹித் சர்மா இல்லாததால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுலை எடுத்துள்ளனர். பார்த்திவ் படேலுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்.  ஆனால் ராகுல் தொடக்கத்தில் இறங்கி ஹனுமா விஹாரி தன் வழக்கமான டவுனுக்கு வருவாரா, அல்லது ராகுலுக்கு இன்னொரு டவுன் ஆர்டர் வழங்கும் முகமாக ரோஹித் சர்மா டவுனில் இறங்குகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

ஹர்திக் பாண்டியாவை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை, இஷாந்த் சர்மாவுக்குப் பதில் அவரை எடுத்திருக்கலாம், அப்படி எடுத்தால் ராகுல் தேவையில்லை, குல்தீப் யாதவ்வை கொண்டு வந்திருக்கலாம், ஆனால் ஹர்திக் பாண்டியா வலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கடுமையாக பயிற்சி மேற்கொண்டது அவரை ஏதோ நாளை களமிறக்கி விடுவார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.

 

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் வீரர்கள் தேர்வில் அவர்களுக்கு தெரிவுகள் அதிகமில்லை, இயன் சாப்பல் கூறியது போல் இப்போது இருக்கு வீரர்களுகுப் பதிலாக ஷீல்ட் அணிகளிலிருந்து புதிய வீரர்களைக் களமிறக்கும் வாய்ப்பும் குறைவுதான் ஏனெனில் அவர்கள் சராசரியும் 30-35தான். ஆகவே ஏரோன் பிஞ்ச், மார்ஷ் இருக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் லாபுஷேன் அணிக்கு வருகிறார். பிஞ்ச் இல்லையெனில் உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸுடன் இறங்குவார். மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் களமிறக்கப்படுகிறார்.

 

இந்திய அணியில் புஜாரா, விராட் கோலி ஆகியோர் சதங்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி வீரர்களில் ஒருவரும் ஒரு சதம் கூட இந்தத் தொடரில் எடுக்க முடியவில்லை.

 

பிட்ச்:

 

இந்தப் போட்டியில் பெர்த், மெல்போர்ன் அளவுக்கு பிட்ச் பற்றி பேச்சு இல்லை என்றாலும், டிம் பெய்ன் ஆஸ்திரேலிய பிட்ச் தயாரிப்பாளர்கள் உள்நாட்டு அணிக்கு சாதகம் செய்யவில்லை என்று சாடியதும் நினைவு கூரத்தக்கது.  ஆனால் பிட்ச் தயாரிப்பாளர் ஜஸ்டின் குரோவ்ஸ், பிட்சில் அனைவருக்கும் சாதகம் இருக்கும். முதல் நாளில் கொஞ்சம் ஸ்விங், நல்ல பேட்டிங் ஆடினால் ரன் எடுக்கலாம். பிற்பாடு ஸ்பின் எடுக்கும் என்று கூறியுள்ளார்.

 

புள்ளி விவரங்கள்:

 

கபில்தேவ் மட்டுமே ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார் (25 விக்கெட்டுகள், 1991-92), ஆனால் பும்ரா 3 போட்டிகளில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், கபில் சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு நல்ல வாய்ப்பு.

 

ஆட்டம் நாளை காலை 5 மணிக்குத் தொடக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x