Published : 12 Sep 2014 07:45 PM
Last Updated : 12 Sep 2014 07:45 PM
மாற்றுத் திறனாளி சாதனையாளர்கள் பற்றிய முக்கியமான புத்தகத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற ராகுல் திராவிட், எது தைரியம்? என்பது பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
Courage Beyond compare என்ற இந்த நூலின் ஆசிரியர் சஞ்சய் சர்மா என்ற முன்னாள் தேசிய பேட்மிண்டன் சாம்பியன் ஆவார், இவரது மகள் மேதினி சர்மாவும் இந்த நூலுக்குப் பங்களிப்பு செய்துள்ளார். இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய முன்னாள் பேட்மிண்டன் சாம்பியன் பிரகாஷ் பதுகோன், ‘இந்த நூல் ஒரு அரிய புதையல்’என்று கூறியுள்ளார்.
ஆசிரியர் சஞ்சய் சர்மா கூறும்போது, “நான் மாற்றுத் திறனாளிகள் சாதனை நூலை எழுதக் காரணம், அவர்கள் செய்த அற்புதங்களை வெளிக்கொண்டு வருவதற்கு மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகள் பற்றி சமூகத்திற்கு இருக்கும் அக்கறையின்மையையும் கேள்வியாக முன்வைப்பதற்குத்தான்” என்று கூறியுள்ளார்.
இந்த நூலின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், "தைரியம் என்பது நாங்கள் கிரிக்கெட்டில் செய்வது அல்ல, தைரியம் என்பது திமிங்கிலங்களுடன் நீச்சலடிப்பது” என்று கூறிய திராவிட், மாற்றுத் திறனாளி நீச்சல் வீரர்களான தாரநாத் ஷெனாய் மற்றும் ராஜாராம் காக் ஆகியோரின் சாதனைகளை விதந்தோதினார். இவர்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகளாக இருந்தும் கடல் நீச்சலில் நீண்ட தூரம் நீச்சல் அடித்து சாதனை புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் கூறும்போது, “இளம் வயதில் வீட்டைவிட்டு ஓடி, கும்பல்களால் துரத்தப்பட்டு, பெற்றோரைப் பார்க்காமல் சாதனையாளராவதே தைரியமாகும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளி சாதனையாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் முரளிகாந்த் பெட்கர், 1972 ஆம் ஆண்டு ஹெய்டல்பர்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் நாட்டுக்காக தங்கப்பதக்கம் வென்று கொடுத்து சாதனை நிகழ்த்தியவர். மேலும் 1982ஆம் ஆண்டு ஆசிய மாற்றுத் திறனாளி விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். இவருக்கு ராகுல் திராவிட் இவருக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த முரளிகாந்த் பெட்கர் இந்திய ராணுவத்தின் குத்துச் சண்டை சாம்பியனாகத் திகழ்ந்தவர். ஆனால் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் சியால்கோட் பிரிவில் பணியாற்றியபோது எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இளம் வயதில் மாற்றுத் திறனாளியானார். இவரது முதுகுத் தண்டுப் பகுதியில் இன்னமும் தோட்டா உள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற தாரநாத் ஷெனாய் என்ற வீரர் வாய் பேச முடியாதவர், காது கேளாதவர். அவருக்கு பார்வையிலும் பிரச்சினைகள் இருந்தது. இவர் இங்கிலிஷ் கால்வாயை 1985ஆம் ஆண்டு இருவழியிலும் கடந்து சாதனை புரிந்தார். மற்ற முறை கடக்கும்போது திமிங்கிலக் கடிகளை வாங்கியுள்ளார்.
ராஜாராம் காக் கால்கள் பிணைந்தவர் இரண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடக்கக் கற்றுக் கொண்டார். இவரும் இங்கிலிஷ் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தவர்.
‘கரேஜ் பியாண்ட் கம்பேர்’ என்ற இந்த நூலில் முரளிகாந்த் பெட்கர், தாரநாத் ஷெனாய், ராஜாராம் காக் உட்பட 10 மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை வரலாறு நெகிழ்ச்சியும் துயரமும் நிகழ்ந்த சம்பவங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.
ராகுல் திராவிட் இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு நெகிழ்ந்து போனதாக தெரிவித்தார். “நாம் முழு உடல்தகுதியுடன் வாழும்போதே வாழ்க்கையில் சிறிய விஷயங்கள் நிறைவேறவில்லை என்றால் கூட வருத்தமடைகிறோம், புகார் செய்கிறோம். இந்த நூலில் குறிப்பிட்ட இந்த ஆச்சரியமிக்க வீரர்கள் எந்நாளும் வாழ்க்கையில் தைரியத்திற்காக நமக்கு உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கிறார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT