Published : 12 Jan 2019 12:35 PM
Last Updated : 12 Jan 2019 12:35 PM
சிட்னியில் நடந்து வரும் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆனால், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் அரைசதம் அடித்தனர். நடுவரிசையில் களமிறங்கிய ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டம் ஆடியதால், ஸ்கோர் திடீரென எகிறியது.
40 ஓவர்கள் வரை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகுந்த கட்டுக்கோப்பாகவே பந்துவீசினார்கள். ஆனால் கடைசி 10 ஓவர்களில் அவர்களுக்கு என்ன ஆனது தெரியவில்லை. கடைசி 10 ஓவர்களில் 9.3 ரன் ரேட் அளவுக்கு வாரி வழங்கினார்கள். இதைக் கட்டுப்படுத்தி இருந்தால், ஆஸ்திரேலியாவை 250 ரன்களுக்குள் சுருட்டி இருக்கலாம்.
அதிலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ்கம்ப் கடைசி 7 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்தனர். இந்தியப் பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், கலீல் முகமது, குல்தீப் ஓவர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நொறுக்கி எடுத்துவிட்டனர். தொடக்கத்தில் விக்கெட்டை வீழ்த்தி ரன் வேகத்தைக் குறைத்த புவனேஷ் குமார் அடுத்தடுத்து சோப்பிக்கத் தவறினார்.
289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாகஅமைந்தது. முதல் ஓவரிலேயே பெஹரன்டார்ப் பந்துவீச்சில் தவான் எல்பிடபிள்யு முறையில் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி 3 ரன்கள் சேர்த்த நிலையில், ரிச்சர்ட்ஸன் பந்துவீச்சில் ஸ்டோனிஸிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு, அதே ஓவரில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார்.
ரோஹித் சர்மா 6 ரன்னிலும், தோனி ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் உள்ளனர்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. சிட்னியில் நடந்து வரும் முதலாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆரோன் பிஞ்ச், கேரே ஆட்டத்தைத் தொடங்கினார். கலீல் அகமது, புவனேஷ்குமார் வீசிய முதல் இரு ஓவர்களில் ஆஸி. பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள்.
புவனேஷ்குமார் வீசிய 3-வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். 96 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய 12-வது இந்திய வீரர் எனும் பெருமையையும் புவனேஷ்குமார் பெற்றார். மேலும், மிக மெதுவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது வீரரும் புவனேஷ் குமார்.
அடுத்து கவாஜா களமிறங்கி, கேரேயுடன் சேர்ந்தார். கேரேயும், கவாஜாவும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தனர். கலீல் அகமதுவின் 4-வது ஓவரில் கேரே 2 பவுண்டரிகள் விளாசினார். இருவரின் பந்துவீச்சிலும் ரன்கள் செல்லத்தொடங்கியதால், பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட்டது.
10-வது ஓவரை குல்தீப் வீசினார். 5-வது பந்தை கேரே சந்தித்தபோது பந்து பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்சாக அமைந்தது. கேரே 24 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார்.
கவாஜா, மார்ஷ் 3-வது ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தனர். டெஸ்ட் போட்டியில் சோபிக்காத கவாஜா ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவ்வப்போது பவுண்டரிகள் விளாசி 70 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க கலீல் அகமது, ராயு, குல்தீப் முயன்றும் முடியவில்லை.
ரவிந்திட ஜடேஜா வீசிய 29-வது ஓவரில் கவாஜா எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 81 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து கவாஜா வெளியேறினார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 92 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கம்ப், மார்ஷுடன் சேர்ந்தார். ஹேண்ட்ஸ்கம்ப் தொடக்கத்தில் இருந்தே சீரான வேகத்தில் அவ்வப்போது பவுண்டரிகளும் அடித்து ரன்களைச் சேர்த்தார்.
புவனேஷ் குமார் வீசிய 35 ஓவரிலும், கலீல் அகமது வீசிய 36-வது ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை ஹேண்ட்ஸ்கம்ப் அடித்தார். ஒருபுறம் நிதானமாக பேட் செய்த ஷான் மார்ஷ் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
குல்தீப் யாதவ் வீசிய 39-வது ஓவரில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 53 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ்கம்புடன் இணைந்தார். இருவரும் கடைசி 10 ஓவர்களில் இந்திய பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். இருவரையும் அடக்கிவைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர். 40-வது ஓவர் வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
குல்தீப் யாதவ் வீசிய 44-வது ஓவரில் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ்கம்ப் தலா ஒரு சிக்சர் விளாசினார்கள். புவனேஷ் குமார் வீசிய 46-வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்ப் இரு பவுண்டரிகள் விளாசினார். அதிரடியாக ஆடிய ஹேண்ட்ஸ்கம்ப் 50 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
புவனேஷ் குமார் வீசிய 48-வது ஓவரில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஹேண்ட்ஸ்கம்ப் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த மேக்ஸ்வெல், ஸ்டோனிஸுடன் சேர்ந்தார். புவனேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் ஸ்டோனிஸ் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசிய, மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்தார்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. ஸ்டோனிஸ் 47 ரன்களிலும், மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT