Published : 31 Jan 2019 05:30 PM
Last Updated : 31 Jan 2019 05:30 PM
கிரிக்கெட் வல்லுநர்களின் பார்வைகள், கருத்துகள், சர்வேக்கள் எல்லாம் தற்போது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேல் உள்ளது. அது நடத்தப்படும் விதம் முந்தைய உலகக்கோப்பை தொடரிலிருந்து வேறுபட்டது எனும்போது கணிப்பது கடினம் என்று ஒருவரும் கூற முன் வருவதில்லை.
1992 உலகக்கோப்பை மாதிரி போல் எல்லா அணிகளும் எல்லா அணிகளுடன் விளையாட வேண்டிய வடிவத்தில் இந்த உலகக்கோப்பை நடைபெறுகிறது. ஆகவே கணிப்பது கடினம். 1992-ல் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பாகிஸ்தான் வென்றது, முதல் முறையாக வந்த தென் ஆப்பிரிக்கா கலக்கு கலக்கென்று கலக்கி அரையிறுதியில் மோசமான மழை விதிகளால் 3 ஒவர் 21 ரன்கள் என்ற இலக்கு 1 பந்து 21 ரன் என்று ஆகி அதை வீச வேண்டிய அபத்தமும் நடந்தது. இதனால் இங்கிலாந்து இறுதிக்கு முன்னேறியது. நிறைய அணிகளிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் கோப்பையை வெல்ல இரண்டு தோல்விகளை மட்டும் சந்தித்த நியூஸிலாந்துக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.
எனவே இந்த வடிவம் மிகவும் கடினமான வடிவம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை எனும் நிலையில், இங்கிலாந்து வெல்லும் இந்தியா வெல்லும் என்றெல்லாம் கருத்தமைவுகள் உருவாக்கப்பட்டு நிரந்தரப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் உலகக்கோப்பை, இந்தியாவின் சமீபத்திய ஆதிக்கம் பற்றி இங்கிலாந்தின் முன்னாள் ஸ்விங் பவுலர் டாமினிக் கார்க் ஸ்கை ஸ்போர்ட்ஸ் பத்தியில் தெரிவித்திருப்பதாவது:
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 50 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவெடுத்த பிறகே இங்கிலாந்து அணி பிரமாதமான சில வெற்றிகளை ஈட்டி வருகிறது. நிறைய பேர் இங்கிலாந்துதான் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி என்று கூறுகின்றனர்.
ஆனால், இந்திய அணியை எடுத்துக் கொள்ளுங்கள் ஒருநாள் போட்டிகளை வெற்றி பெற என்ன தேவையோ அத்தனை பகுதிகளையும் திறம்படக் கொண்டுள்ளனர். அங்கு எல்லா வீரர்களும் பிரமாதமாக ஆடுகின்றனர் (இன்றைய போட்டிக்கு முன் எழுதிய பத்தி).
ரோஹித் சர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறுகிறார், ஆனால் ஒருநாள் போட்டிகளில் சீராக ஆடிவருகிறார், விராட் கோலி ரன்கள் அடிக்கும் போது சிலவேளைகளில் ரோஹித் சர்மா மறக்கப்படுகிறார். ரோஹித் சர்மா எவ்வளவு பிரமாதமாக ஆடுகிறார் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர்.
இந்திய அணியைப் பார்த்தோமானால், தோனி இன்னமும் நன்றாகவே ஆடுகிறார். பிறகு இந்திய பந்து வீச்சு, அவர்களின் வேகம் மற்றும் திறமை என்னை வெகுவாகக் கவர்கிறது. ஆல்ரவுண்டராகப் பாண்டியாவும் சரியாக ஆடுகிறார், இந்திய அணியில் அனைவரும் திறம்பட ஆடுகின்றனர்.
இவ்வாறு கூறியுள்ளார் டாமினிக் கார்க்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT