Published : 15 Jan 2019 01:48 PM
Last Updated : 15 Jan 2019 01:48 PM
அடிலெய்டில் நடந்து வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி
நிதானமாகவும், நேரம் செல்லச் செல்ல காட்டடி ஆட்டம் ஆடிய ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து, சர்வதேச அளவில் 7-வது சதத்தை நிறைவு செய்தார். இவருக்குத் துணையாக ஆடிய மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். அணியில் இருவர் மட்டுமே குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணியில் புவனேஷ் குமார், ரவிந்திர ஜடேஜா தவிர்த்து யாருடைய பந்துவீச்சும் எடுபடவில்லை. குறிப்பாக முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஷமி பந்துவீச்சை ஆஸி. பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கிவிட்டனர்.
40 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் இருந்த ஆஸ்திரேலிய அணி கடைசி 10 ஓவர்களில் 93 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிலும் 286 ரன்களில் இருந்து அடுத்த 3 ரன்களைச் சேர்ப்பதற்குள் விக்கெட்டை இழந்தது. கடந்த முதலாவது போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி 10 ஓவர்களில் மோசமாகப் பந்துவீசி கோட்டைவிட்ட நிலையில், இந்த முறையும் அதே தவறைச் செய்துள்ளனர்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது. வேகப்பந்துவீச்சில் கலீல் அகமதுவுக்குப் பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் சேர்த்தது.
ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் காரே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். தொடக்கத்தில் இருந்தே புவனேஷ் குமாரும், ஷமியும் மிகுந்த கட்டுக்கோப்புடனும், துல்லியமாகவும் பந்துவீசினார்கள்.
புவனேஷ்குமார் வீசிய 7-வது ஓவரின் கடைசிப் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். பிஞ்ச் 6 ரன்னில் நடையைக் கட்டினார்.
அடுத்த ஓவரை ஷமி வீசினார். ஷமி பந்தை பவுன்ஸராக வீசிய அதை ஹூக் ஷாட் அடிக்க கரே முயன்றார். ஆனால், பந்து ஷிகர் தவணின் கைகளில் தஞ்சமடைந்தது. ஆஸி. 2-வது விக்கெட்டை இழந்தது. காரே 18 ரன்களில் நடையைக் கட்டினார்.
3-வது விக்கெட்டுக்கு கவாஜா, மார்ஷ் ஓரளவுக்கு நிலைத்து ஆடி வந்தனர். 19-வது ஓவரில் கவாஜாவை ‘டைரைட்ஹிட்’ முறையில் ஜடேஜா மூலம் ரன் அவுட் செய்தார். கவாஜா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கம்ப், மார்ஷுடன் இணைந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தனர். நிதானமாக ஆடிய மார்ஷ் 65 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
ஜடேஜா வீசிய 28-வது ஓவரில் தோனியால் 'ஸ்டெம்பிங்' செய்யப்பட்டு ஹேண்ட்ஸ்கம்ப் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ஸ்டோனிஸ் களமிறங்கி, மார்ஷுடன் சேர்ந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஸ்டோனிஸ் இந்த முறை சொதப்பினார். ஷமி வீசிய 37-வது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரிகள் அடித்த ஸ்டோனிஸ் 3-வது பவுண்டரி அடிக்க முற்பட்டபோது, தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டோனிஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கி, மார்ஷுடன் இணைந்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கே மாறியது. நிதானமாகத் தொடங்கிய மேக்ஸ்வெல் நேரம் செல்லச் செல்ல அதிரடிக்கு மாறினார்.
குல்தீப் யாதவ் வீசிய 43-வது ஓவரில் மேக்ஸ்வெல், மார்ஷ் தலா ஒரு சிக்ஸர் விளாசினார்கள். அடுத்து வீசிய முகமது சிராஜ் ஓவரில் மேக்ஸ்வெல் 2 பவுண்டரியும், மார்ஷ் ஒரு பவுண்டரியும் பறக்கவிட்டனர். அதிரடியாக ஆடிய மார்ஷ் ஒருநாள் அரங்கில் தனது 7-வது சதத்தை நிறைவு செய்தார்.
ஷமி வீசிய 45-வது ஓவரில் மேக்ஸ்வெல் பவுண்டரியும், மார்ஷ் சிக்ஸரும் அடித்து ரன் வேகத்தை அதிகரித்தனர். சிராஜ் வீசிய 47-வது ஓவரில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை கவர் திசையில் நின்றிருந்த ரோஹித் சர்மா பிடிக்கத் தவறி வாய்ப்பை நழுவவிட்டார்.
புவனேஷ் குமார் வீசிய 48-வது ஓவரில் இரு விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேக்ஸ்வெல் டீப் லாங்க்ஆப் திசையில் தினேஷ் கார்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்ளிட்ட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்த இரு பந்துகளில் மார்ஷ் லாங்ஆப் திசையில் அடித்த பந்து ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. 123 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்த மார்ஷ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 11 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து வந்த ரிச்சர்ட்ஸன் 2 ரன்னில் ஷமி பந்துவீச்சிலும், சிடில் டக்அவுட்டில் புவனேஷ் வேகத்திலும் வெளியேறினார்கள்.
லயன் 12 ரன்களிலும், பெஹன்டார்ப் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 283 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த ஆஸி அணி அடுத்த 3 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.
இந்தியத் தரப்பில் புவனேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT