Published : 31 Jan 2019 09:12 AM
Last Updated : 31 Jan 2019 09:12 AM
ஹேமில்டனில் நடந்துவரும் 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், கோலி, தோனி ஆகிய இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ரோஹித் சர்மாவுக்கு 200-வது போட்டி, சுப்மான் கில் அறிமுகம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்களை வைத்திருந்த நிலையில், மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
21 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 34 ரன்களைச் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் 10 ஓவர்கள் வீசிய 4 மெய்டன்கள், 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிராண்ட் ஹோமே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டிரண்ட் போல்ட் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஸ்மித்,வார்னர் இரு பெரும் தூண்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணி தற்போது எந்த அளவுக்குத் தடுமாறி வருகிறதோ அதேபோலவே இந்திய அணியும்.
ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கக் கூடிய இரு பெரும் சக்திகளான கோலி, தோனி ஆகியோர் இல்லாமல் மோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளிலும் கோலி, தோனி இருக்கும் போது சேஸிங் அல்லது முதல் பேட்டிங்காக இருந்தாலும் கையில் 6 விக்கெட்டுகளை மீதம் வைத்திருந்தது. இந்திய அணி.
கோலியும், தோனியும் எதிரணிகளுக்கு ஒரு சிம்ம சொப்னமாக திகழ்ந்தார்கள். இருவரையும் களத்தில் இருந்து அகற்றுவது என்பதும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்குத் தலைவலியாக இருந்தது. மற்ற வீரர்களுக்கும் தார்மீக பலத்தையும், மனோபலத்தையும் அதிகரித்து வந்தது. ஆனால், இரு பெரும் வழிகாட்டுதல் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
விராட் கோலி, தோனி ஆகிய இரு பெரும் சக்திகளை நம்பித்தான் இந்திய அணி இருக்கிறது என்பது முடிவாகிறதா என்பது புரியவில்லை. உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணி ஏறக்குறைய தயாராகிவிட்டது என்று தேர்வாளர்கள் கூறிவருவது இதுதானா.
நியூசிலாந்தில் இதற்கு முன் நடந்த ஆட்டங்கள் எல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் அதில் விளையாடுவதும், மட்டைவீச்சில் தங்கள் ஜாலங்களைக் காட்டுவதும் பெரிய விஷயமல்ல. ஆனால், ஹேமில்டன் போன்ற ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும், வேகப்பந்துவீச்சு நன்றாக ஒத்துழைக்கும். அந்த ஆடுகளத்தில் நிலைத்து ஆடுவதற்கு வீரர்கள் திறமை கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.
இந்திய அணி வீரர்கள் ஆட்டமிழந்து சென்றதைப் பார்க்கும் போதுகடந்த 2002-ம் ஆண்டு நியூசிலாந்து தொடர் நினைவுக்கு வருகிறது. அப்போது, இந்திய அணி பெரும்பாலான போட்டிகளில் 120 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருந்தது. அந்த மோசமான ஆட்டம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
ஆனால், நடுவரிசைக்கு இன்னும் சரியான வீரர்கள் அமையவில்லை என்பது இந்த ஆட்டம் மிகப்பெரிய சாட்சி. தோனியை ஓய்வு பெற வலியுறுத்தியவர்கள், தோனியின் மந்தமான ஆட்டம் என்று விமர்சித்தவர்களுக்கு இந்த ஆட்டத்தின் மூலம் தோனியின் முக்கியத்துவம் அறிந்திருக்கும்.
ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுவிட்டதால் அசட்டையாக பேட் செய்தார்களா அல்லது ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியுள்ளதா என்பது வியப்பாக இருக்கிறது.
டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், கிராண்ட் ஹோமே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்று இந்திய அணி தொடரை வென்றநிலையில், 4-வது போட்டி ஹேமில்டனில் இன்று நடந்து வருகிறது.
இந்திய அணியில் தோனி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால், அவர் விளையாடவில்லை. கோலிக்கு பதிலாக சுப்மான் கில்லும், ஷமிக்கு பதிலாக கலீல் அகமதுவும் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தவண், ரோஹத் சர்மா ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஹென்றி வீசிய 3-வது ஓவரில் தவண் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.
போல்ட் 6-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் எல்பிடபிள்யு முறையில் தவண் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மான் கில் களமிறங்கினார்.
இந்திய அணிக்க முதல் முறையாக களம் கண்டார் சுப்மான் கில். இந்திய அணிக்காக விளையாடும் 227 வீரர் எனும் பெருமையுடன் களமிறங்கினார். 200-வது ஒருநாள் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரோஹித் சர்மா நீண்டநேரம் நிலைக்கவில்லை.
போல்ட் வீசிய 8-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 7 ரன்களில் ரோஹித் வெளியேறினார். அதன்பின் கிராண்ட்ஹோமே வீசிய 11-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது.
ஆஃப் சைடு விலகிச் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டதால், கப்திலிடம் கேட்ச் கொடுத்து கிராண்ட்ஹோமே பந்துவீச்சில் 2-வது பந்தில் டக்அவுட்டில் ராயுடு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 5-வது பந்தில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். இதனால், 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
12-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரில் கடைசிப் பந்தில் போல்டிடமே கேட்ச் கொடுத்து 9 ரன்களில் கில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில் ஏமாற்றினார்.
போல்ட் வீசிய 14-வது ஓவரிலும் விக்கெட் வீழ்ந்தது. கேதார் ஒரு ரன் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
கிராண்ட்ஹோமே 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் கிளீன் போல்டாகி ஒரு ரன்னில் புவனேஷ் குமார் ஆட்டமிழந்தார்.
டிரண்ட் போல்ட் வீசிய 18-வது ஓவரில் அருமையா ஹாட்ரிக் பவுண்டரி அடித்து பாண்டியா அசத்தினார். தனிஒருவனாக போராடி வந்தார்.
டிரண்ட் வீசிய 20-வது ஓவரில் விக்கெட் கீப்பர் லதாமிடம் கேட்ச் கொடுத்து 16 ரன்களில் பாண்டியாவும் ஆட்டமிழந்தார்.
குல்தீப் யாதவ், சாஹல் சேர்த்து 9-வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடினார்கள். இருவரும் சேர்ந்து 25 ரன்கள் சேர்த்ததே இன்றைய கூட்டணியின் அதிகபட்ச ஸ்கோராகும். நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 88 ஆக இருந்த நிலையில், அதைத் தாண்டுவார்களா என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் நிதானமாக பேட்செய்து அதை தாண்டினார்கள். குல்தீப் 15 ரன்களில் ஆஸ்டில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது 5 ரன்னில் நீஷம் பந்துவீச்சில் வெளியேறினார். சாஹல் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT