Last Updated : 17 Jan, 2019 01:55 PM

 

Published : 17 Jan 2019 01:55 PM
Last Updated : 17 Jan 2019 01:55 PM

3-வது ஒருநாள் போட்டி: வருகிறார் ஆடம் ஸாம்ப்பா; மாற்றங்களுடன் ஆஸி. அணி

மெல்போர்னில் நாளை நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான விளையாடும் 11 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு போட்டிகளில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் பெஹ்ரன்டார்ப், சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவும், வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டான்லேக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளன.

இதனால், நாளை மெல்போர்னில் நடக்கும் 3-வது போட்டியில் வென்று ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. இதற்காக அணியில் மாற்றங்களைச் செய்துள்ளது.

கடந்த போட்டியில் முதுகுவலியால் அவதிப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் பெஹ்ரன்டார்ப் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியிலும், சன்ரைசர்ஸ் அணியிலும் இடம் பெற்ற பில்லி ஸ்டான்லேக் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு ஒருநாள் போட்டியில் விக்கெட்டுகளை எடுக்காமல் இருந்த சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஐபிஎல் தொடரில் புனே சைரஸிங் ஸ்டார்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், “ நாதன் லயன் நன்றாகப் பந்துவீசுகிறார், ஆனால், விக்கெட்டுகளை வீழ்த்துவதில்லை. ஆதலால், அவருக்குப் பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்சிமுறையில் வாய்ப்பு அளிக்கப்படும்.

கடைசிப் போட்டியில் நாங்கள் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்வோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கடந்த இரு போட்டிகளிலும் நாங்கள் அதிகமான முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பதால், தொடரை வெல்வோம் “ எனத் தெரிவித்தார்.

ஆஸி. அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ரிச்சர்ட்ஸன், பீட்டர் சிடில், ஆடம் ஸாம்பா, பில்லி ஸ்டான்லேக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x