Last Updated : 14 Jan, 2019 04:04 PM

 

Published : 14 Jan 2019 04:04 PM
Last Updated : 14 Jan 2019 04:04 PM

கவலையளிக்கும் தோனியின் மந்தமான பேட்டிங்: ஆஸி.யுடன் நாளை இந்திய அணி வாழ்வா சாவா மோதல்

தோனியின் மந்தமான பேட்டிங் அணிக்கு பெரும் சுமையாக இருக்கும் நிலையில், நாளை அடிலெய்டில் நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நாளை நடக்கும் 2-வது ஆட்டத்தில் வென்றால்தான் இந்திய அணி தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இல்லாவிட்டால், தொடர் ஆஸி.வசம் சென்றுவிடும். ஆதலால் தோனியைப் போன்ற சீனியர் வீரர்கள் பொறுப்புடன் ஆடுவது அவசியமாகும்.

ஷிகர் தவண், தோனி, ராயுடு ஆகிய 3 பேரும் கடந்த 2 மாதங்களில் உள்நாட்டுப் போட்டிகள், பயிற்சி ஆட்டங்கள் எதிலுமே பங்கேற்காமல் இருப்பதால் பேட்டிங்கில் தடுமாறுகின்றனர். இவர்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவது அவசியம்.

ஹர்திக் பாண்டியா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அணியின் பேட்டிங் வரிசை லேசாக ஆட்டம் கண்டுள்ளது முதல்போட்டியில் தெரிந்தது.

கடந்த ஆட்டத்தில் தோனிக்கு அடுத்தார்போல் நிலைத்து நின்று ரோஹித் சர்மாவுக்கு உறுதுணையாக பேட் செய்ய பேட்ஸ்மேன்கள் இல்லாதது கவலைக்குரிய விஷயம். தினேஷ் கார்த்திக் இருந்தும் தனக்குக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிட்டார்.

மேலும், தோனி தன்னை நிலைப்படுத்திக்கொள்ளப் பந்துகளை வீணாக்கியது, சமீபகாலமாக பேட்டிங்கில் ஃபார்மில்லாமல் தவிப்பதை வெளிச்சம் போட்டுகாட்டிவிட்டது. 96 பந்துகளில் 51 ரன்கள் தோனி சேர்த்தும், 13 மாதங்களுக்குப் பின் அரைசதம் அடித்தும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது தோனியின் பேட்டிங்.

தோனியின் பேட்டிங்கை பார்க்க ஆவலுடன் காத்திருந்த அவரின் ரசிகர்களுக்கு அவரின் பேட்டிங் ஸ்டைலும், பேட்டிங் முறையும் பெரும் ஆத்திரத்தையே வரவழைத்தது. ஒரு காலத்தில் மேட்ச் வின்னர் என்று வர்ணிக்கப்பட்ட தோனியின் பேட்டிங் இப்படி மோசமாகிவிட்டதே என்று ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு மோசமாக அமைந்திருந்தது. பெரும்பாலான பந்துகளை டெஸ்ட் போட்டியை போன்று பீட்டன் செய்யவிட்டு தோனி திணறினார். தோனியின் வழக்கமான ஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ், ஹெலிகாப்டர் ஷாட் போன்றவற்றை மறந்துவிட்டாரா என்று கேட்கும் அளவுக்கு இருந்தது.

ஆனால், தோனி 5-ம் வரிசையில் களமிறங்காமல் 4-வது வரிசையில் களமிறங்க வேண்டும் என்று ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார் என்றாலும் அது ஆலோசிக்கப்பட வேண்டியதாகும்.

ஏனென்றால், பெரும்பாலும் தோனி 5-ம் வரிசையில்தான் களமிறங்கி விளையாடி வருகிறார், 4-ம் இடத்தில் மிகவும் அரிதாகவே களமிறங்கி இருக்கிறார்.

4-வது வரிசையில் தோனி களமிறங்கியபோது அவரின் பேட்டிங் சராசரி 52.95 ஆக இருக்கிறது. 333 போட்டிகளில் வைத்துள்ள 50.11 ரன்கள் சராசரியைக் காட்டிலும் அதிகமாகும். 5-வது வரிசையில் தோனி களமிறங்கியபோது பேட்டிங் சராசரி 50.70 ஆகவும், 6-வது வரிசையில் 46.33 ஆகவும்இருக்கிறது.

அதேசமயம், 4-வது வரிசையில் தோனி களமிறங்கியபோதுதான் அவரின் ஸ்டிரைக் ரேட் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 4-வது வரிசையில் தோனியின் ஸ்டிரைக் ரேட் 94.21 ஆகவும், ஒட்டுமொத்த ஸ்டிரைக் ரேட் 87.60 ஆகவும் இருக்கிறது. 5-வது வரிசையில் 86.08 ஆகமட்டுமே ஸ்டிரைக் ரேட் இருக்கிறது.

ஆனால், ஆஸ்திரேலியாவில் கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு தோனி விளையாடியபோது, 4-வது வரிசையில் களமிறங்கி வெறும் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ஒட்டுமொத்தமாகக் கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் 4-வது வரிசையில் தோனி 8 போட்டிகளில் மட்டுமே களமிறங்கி இருக்கிறார், அதில் அவரின் சராசரி என்பது 24.75 ரன்களாகவும், 77.34 ஸ்டிரைக் ரேட்டாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிராக 2016-ம் ஆண்டு அக்டோபரில் 80 ரன்கள் சேர்த்துள்ளார். ஆதலால், தோனி 5-வது வரிசையில் களமிறங்குவதில் பெருமளவுக்கு மாற்றம் இருக்காது என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பதி ராயுடுவைப் பொருத்தவரை கடந்த ஆசியக் கோப்பை, மே.இ.தீவுகள் தொடரில் சிறப்பாக விளையாடி நடுவரிசையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி நம்பிக்கையூட்டினார். அதனால்தான், ஆஸ்திரேலியத் தொடரிலும் இடம் பெற்றார். ஆனால், முதல் ஆட்டத்தில் டக்அவுட்டில் ராயுடு வெளியேறியது கவலையளித்துள்ளது. மேலும் பந்துவீச்சிலும் சிக்கல் ஏற்பட்டு ஆய்வுக்கு உள்ளாகியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர், இன்று இரவுதான் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்பதால், அவர் நாளைய போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமே.

ரோஹித் சர்மா சதம் அடித்து அருமையான ஃபார்மில் இருக்கிறார், தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்து ரோஹித் விளையாடியபோதிலும், அவருக்கு துணையாக இருக்க கடந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் இல்லை.

மேலும், தினேஷ் கார்த்திக்கை கூடுதல் பேட்ஸ்மேனாக எடுத்த நிலையிலும் அது கடந்தபோட்டியில் பலன் அளிக்கவில்லை. அவருக்கு பதிலாக நாளை நடக்கும் போட்டியில் கேதார் ஜாதவ் சேர்க்கப்படலாம். கேதார் ஜாதவ் இருந்தால், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சுமாராக செயல்படுவார் என்பதால், அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படலாம்.

மேலும், இந்திய அணியின் கடைசி வரிசை வீரர்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கலீல் அகமது, யஜுவேந்திர சாஹல், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். யஜுவேந்திர சாஹல் பேட்டிங்கில் ஜொலிக்கமாட்டார் என்பதால், ரவிந்திரஜடேஜாவுக்கு அதிகமான வாய்ப்பு அளிக்கப்படலாம்.

அடிலெய்ட் மைதானத்தில் கோலி 76 ரன்கள் சராசரி வைத்திருப்பதால், இந்த போட்டியில் கோலியின் வழக்கமான ஆட்டத்தைக் காணலாம்.

அணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து பேட்டிங் டச்சில் இருந்துள்ளனர். ஆனால், இதில் ஷிகர் தவண், தோனி, அம்பதி ராயுடு கடந்த 2 மாதங்களாக பேட்டிங் பயிற்சியிலோ அல்லது உள்நாட்டுத் தொடரிலோ இந்த 3 பேரும் விளையாடவில்லை.

தவணும், தோனியும் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் கழித்தனர். முதல்தரப்போட்டியில் இருந்து ராயுடு ஓய்வு பெற்றதால், அவரும் விளையாடவில்லை. இவர்கள் மூன்று பேரும் மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியமாகும்.

ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை பந்துவீச்சில் பெஹரன்டார்ப், ரிச்சார்ட்ஸன், சிடில் சிறப்பாகப் பந்து வீசுகின்றனர். அதிலும் குறிப்பாக ரிச்சர்ட்ஸன் பந்துவீச்சுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் திணறினார்கள். அடிலெய்ட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 250 ரன்கள் அடித்தாலே 2-வது பேட் செய்யும் அணிக்கு நெருக்கடி அளிக்க முடியும்.

ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கிலும் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ்கம்ப், கவாஜா கடந்த ஆட்டத்தில் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தனர். ஆரோன் பிஞ்ச் இன்னும் டெஸ்ட் போட்டியில் இருந்தே ஃபார்மில்லாமல் தவித்து வருகிறார், 7-வது வரிசையில் மேக்ஸ்வெல் களமிறங்குவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால், அவர் நடுவரிசையில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

உத்தேச வீரர்கள்(இந்தியா)

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ்அல்லது தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, முகமது ஷமி

உத்தேச வீரர்கள்(ஆஸி.)

ஆரோன்பிஞ்ச், அலெக்ஸ் கேரே, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், பீட்டர் சிடில், ரிச்சார்ட்ஸன், நாதன் லயன், பெஹரன் டார்ப்

போட்டி இந்தியநேரப்படி நாளை காலை 7.50 மணிக்குத் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x