Published : 22 Sep 2014 11:24 AM
Last Updated : 22 Sep 2014 11:24 AM
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்றில் லாகூர் லயன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட சதர்ன் எக்ஸ்பிரஸ் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லாகூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ஹபீஸ் 40 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார்.
பின்னர் பேட் செய்த சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி, லாகூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18 ஓவர்களில் 109 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முபாரக் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். லாகூர் அணியின் தரப்பில் சீமா 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹபீஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் இருந்த லாகூர் அணி, மும்பை இண்டியன்ஸ் அணி நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியிடம் தோல்வி கண்டதால் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT