Last Updated : 04 Jan, 2019 09:02 AM

 

Published : 04 Jan 2019 09:02 AM
Last Updated : 04 Jan 2019 09:02 AM

இரட்டை சதத்தை தவறவிட்டார் புஜாரா: இமாலய ரன் குவிப்பில் இந்தியா: திகைக்கும் ஆஸி.

ஆஸ்திரேலிய அணியை தனது சுவர்போன்ற பேட்டிங்கால் கிறங்க வைத்த புஜாரா இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

புஜாரா 373 பந்துகளில் 193 ரன்கள் சேர்த்துப் பந்துவீசிய லயனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் 22 பவுண்டரிகள் அடங்கும்.

புஜாராவுக்கு துணையாக ஆடிய ரிஷப் பந்த் இந்தத் தொடரில் முதல் முறையாக அரைசதம் அடித்துள்ளார். 137 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 439 ரன்களுடன் உள்ளது. ரிஷப் பந்த் 58 ரன்களுடனும், ஜடேஜா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி இந்திய அணி நகர்ந்து வருவதால், என்ன செய்வதென்று தெரியாமலும், விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கி , நம்பிக்கையற்று பந்துவீசுவதை காணமுடிகிறது.

இந்த தொடரில் புஜாரா இரட்டைச் சதம் அடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 இரட்டை சதம் அடித்த 3-வது சர்வதேச வீரர் எனும் பெருமையை புஜாரா பெற்றிருப்பார். இதற்கு முன் மே.இ.தீவுகள் வீரர் பிரையன் லாரா, இங்கிலாந்து வீரர் வாலே ஹேமண்ட் ஆகியோர் மட்டுமே அடித்துள்ளனர்.

இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் தனது மிக அதிகபட்ச ஸ்கோரையும் புஜாரா பதிவு செய்துள்ளார். வெளிநாடுகளில் புஜாராவின் அதிகபட்ச ஸ்கோர் 153 ரன்கள்தான் அதை இப்போது கடந்த 193 ரன்களைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் புஜாரா ஆவார். இதற்கு முன் ராகுல் டிராவிட் கடந்த 2003-04ம் ஆண்டிலும், 2014-15-ம் ஆண்டில் விராட் கோலியும் அந்த சாதனையை படைத்திருந்தனர்.

குறிப்பாட கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 1200 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார் புஜாரா. இதற்கு முன் ராகுல் டிராவிட் 2003-04ம் ஆண்டில் 1203 பந்துகளைச் சந்தித்திருந்தார். அவருக்குப் பின் 2-வது வீரர் புஜாரா.

சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. முதல்நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 130 ரன்களிலும், விஹாரி 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆடுகளம் இன்று பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் என்று கூறப்பட்ட நிலையில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்திய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். சிறப்பாக பேட் செய்த புஜாரா 282 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.

லயன் வீசிய 102 ஓவரின் கடைசிப் பந்தில் விஹாரி ஷார்ட்லெக் திசையில் பந்து லாபுசாங்கேயிடம் கேட்சாக மாறியது. விஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி புஜாராவுடன் சேர்ந்தார். இருவரும் ஓரளவுக்கு வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்டதால், இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. மதிய உணவு இடைவேளையின் போது இந்திய 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் குவித்திருந்தது.

இரட்டை சதத்தை நோக்கி புஜாரா முன்னேற, மறுபுறம் இந்த தொடரில் முதல் அரை சதத்தை நோக்கி பந்த் நகர்ந்தார். லயன் வீசிய 126 ஓவரில் புஜாரா அதை அடிக்க லயன் கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் இந்த வாய்ப்பை புஜாரா பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், 130-வது ஓவரில் லயன் பந்துவீச்சுக்கு புஜாரா இரையாகினார். லயனிடமே கேட்ச் கொடுத்து புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். 6-வது விக்கெட்டுக்கு புஜாரா, பந்த் இருவரும் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து ஜடேஜா களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். ரிஷப் பந்து சிறப்பாக ஆடி 85 பந்துகளில் இந்த தொடரில் முதலாவது அரை சதத்தை பதிவு செய்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x