Published : 26 Jan 2019 10:25 AM
Last Updated : 26 Jan 2019 10:25 AM
பார்பேடோஸ் டெஸ்ட் போட்டியில் நேற்று இங்கிலாந்தை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் (202 நாட் அவுட்), டவ்ரிச் (116 நாட் அவுட்) ஆகியோர் அழ அடித்தனர். 120/6 என்பதிலிருந்த் விக்கெட்டே விழவில்லை, இருவரும் சேர்ந்து 7வது விக்கெட்டுக்காக வீழ்த்த முடியாத 295 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆட்ட நேர முடிவில் 628 ரன்கள் இமாலய வெற்றி இலக்கை எதிர்த்து இங்கிலாந்து அணி 56/0 என்று உள்ளது.
சுவாரசியம் என்னவெனில் 2ம் நாள் ஆட்டத்தில் 18 விக்கெட்டுகள் சரிவு, 3ம் நாள் ஆட்டத்தில் விக்கெட்டே விழவில்லை. ஜேசன் ஹோல்டர் அதிரடி முறையில் ஆடினார். 229 பந்துகளில் 23 பவுண்டரிக 8 சிக்சர்களுடன் 202 ரன்களையும் ஷேன் டவ்ரிச் 224 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 116 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர். நம்பர் 8-ல் இறங்கி இரட்டைச் சதம் அடிக்கும் 3வது வீரராக இவர் திகழ்கிறார். 8 சிக்சர்கள் டெஸ்ட் இன்னிங்சின் இங்கிலாந்துக்கு எதிராக மே.இ.தீவுகள் வீரர் ஒருவரின் அதிகபட்ச சிக்சர்களாகும். மேலும் இந்த 295 ரன்கள் கூட்டணி 7வது விக்கெட்டுக்காக மே.இ.தீவுகளின் அதிகபட்ச ரன் கூட்டணியாகும்.
மைதானம் நெடுக ஓடி ஓடி, பந்து வீசிவீசி இங்கிலாந்து வீரர்கள் உண்மையில் கடும் களைப்படைந்தனர். டவ்ரிச் ஒருமுனையில் தன் கேப்டன் ஹோல்டரின் ஆக்ரோஷத்துக்கு உறுதுணையாக ஆடினார். இங்கிலாந்து அணி இன்னமும் கேட்ச்களைப் பிடிப்பதில் திருந்தவில்லை, அதனால்தான் இந்த காயடிப்பு.
முதலில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சை நிதானமாக ஆடினர், ஆனால் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் சரியாக வீசவில்லை என்பதே உண்மை ஆஃப் வாலிகளையும் லெக் திசையில் சுலப பவுண்டரிகளையும் கொடுத்தனர், ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னர் ஹோல்டர் மொயின் அலியை 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார், பிறகு 3 சிக்சர்களை விளாசினார். இதில் அனாவசியமாக அணியில் தேர்வு செய்யப்பட்ட ஆதில் ரஷீத்தை 2 சிக்சர்கள் அடித்தார் ஹோல்டர். 9 ஓவர்களில் ரஷீத் 61 ரன்கள் விளாசப்பட்டார்.
இங்கிலாந்து ரிவியூவை வேஸ்ட் செய்ததால் டவ்ரிச் 62-ல் ரூட் பந்தில் எல்.பி. ஆனார், நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் அது அவுட். ரிவியூ இல்லாததால் வாய்ப்பு இழக்கப்பட்டது. ஹோல்டர் 99 பந்துகளில் சதம் அடித்தார். பிறகு ரஷீத்தை நேராக ஒரு அலட்சியமான அரக்க சிக்சரை அடித்தார்.
சதம் அடித்த பிறகு 127-ல் ஹோல்டருக்கு பர்ன்ஸ் ஓடிப்போய் கேட்ச் ஒன்றைவ் விட்டார். பிறகு 151-ல் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் லெக் திசையில் டைவ் அடித்து கடினமான கேட்ச் ஒன்றை விட்டார், இது பவுண்டரி ஆனது. தேநீர் இடைவேளையின் போது டவ்ரிச் 97 நாட் அவுட்டாக இருந்தவர் வந்தவுடன் மொயின் அலியை பவுண்டரி அடித்து தன் சதத்தை நிறைவு செய்தார். இப்போது மே.இ.தீவுகளின் முன்னிலை 572 ரன்கள், டிக்ளேர் செய்வாரா என்று ஏக்கமாகப் பார்க்கத் தொடங்கினர் இங்கிலாந்து வீரர்கள், ஆனால் ஹோல்டர் சிரித்துக் கொண்டே மேலும் 3 சிக்சர்களை விளாசி இரட்டைச் சதம் நோக்கிப் படையெடுத்து முடித்தார்.
இருவரும் சேர்ந்து 295 ரன்கள் சாதனைக் கூட்டணி அமைத்தனர், இங்கிலாந்துக்கு எதிராக ரவிசாஸ்திரி, சையத் கிர்மானி கூட்டணி 1984-ல் மும்பையில் 235 ரன்கள் கூட்டணி அமைத்த பிறகு இது சிறந்த 7வது விக்கெட் கூட்டணியாகும். டெஸ்ட் வரலாற்றில் 3வது பெரிய 7வது விக்கெட் கூட்டணியாகும். தனது 8வது சிக்சரகா ஹோல்டர் ஜெனிங்சை தூக்கி நேராக அடித்தார். இதே ஜெனிங்ஸை பவுண்டரி விளாசி இரட்டைச் சதம் அடித்து டிக்ளேர் செய்தார்.
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் 20 ஒவர்கள் ஆடி விக்கெட் இழப்பின்றி 56/0 என்று உள்ளனர், ட்ரா செய்வது மிகமிகக் கடினம், ஆனால் டெஸ்ட் போட்டியில் என்ன நடக்கும் என்பது கூற முடியாதது, ஏனெனில் 2ம் நாள் ஆட்டத்தில் 18 விக்கெட்டுகள், நேற்று விக்கெட்டே விழவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT