Published : 12 Sep 2014 11:56 AM
Last Updated : 12 Sep 2014 11:56 AM
காதலி கொலை வழக்கில்இருந்து பாராஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தப்பினார். இந்த வழக்கின் முழு தீர்ப்பு விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாராஒலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். மாற்றுத் திறனாளியான அவர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் வசித்து வந்தார். இவரது காதலி ரீவா ஸ்டீன்காம்ப். கடந்த ஆண்டு காதலர் தினத்தின்போது பிஸ்டோரியஸும் ரீவாவும் பிரிட்டோரியா உள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.
அன்றிரவு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரீவா உயிரிழந்தார். பிஸ்டோரியஸ் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டதாக போலீஸார் குற்றம் சாட்டினர். இதனை மறுத்த பிஸ்டோரியஸ், வெளிநபர் குளியல் அறைக்குள் புகுந்து விட்டதாகக் கருதி தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு பிரிட்டோரியா நீதிமன்றத்தில் கடந்த 19 மாதங்களாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தோகோஷில் மிஸிபா வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஆஸ்கர் பிஸ்டோரியஸ், தனது காதலி ரீவாவை திட்டமிட்டு கொலை செய்தார் என்பதை போலீஸ் தரப்பில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. எனவே அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. ரீவா படுக்கை அறையில் இருப்பதாகவும் குளியல் அறைக்குள் வெளிநபர் நுழைந்து பதுங்கியிருக்கிறார் என்றும் கருதி தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தை புறக்கணிக்க முடியாது.
இந்த வழக்கில் அவரது உடல்நல குறைபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வெளிநபர் வீட்டுக்குள் புகுந்துவிட்டார் என்றால் சாதாரண நபர்களே அதிகம் அஞ்சும் நிலையில் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட அவரது அச்ச உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. அதன்காரணமாகவே அவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இப்போதைய நிலையில் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து மட்டுமே பிஸ்டோரியஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன்படுத்தியது, கொலைக்குற்ற வரம்பிற்குள் வராத மரணம் ஆகிய பிரிவுகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT