Published : 04 Jan 2019 12:46 PM
Last Updated : 04 Jan 2019 12:46 PM
சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இன்றை நாள் இந்திய அணிக்கான நாள்.
புஜாரா அருமையாக பேட் செய்து 193 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தைத் தவறவிட்டார். உறுதுணையாக இருந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரர் ரவிந்திர ஜடேஜா 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்துள்ளது. ஹாரிஸ் 19 ரன்களுடனும், கவஜா 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
முதல் நாளான நேற்று இந்திய அணி 303 ரன்கள் சேர்த்த நிலையில் 2-வது நாளான இன்று 319 ரன்கள் சேர்த்ததது. உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணி 233 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸி. 'செக்'
முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி 622 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை நிறுத்தியுள்ளது, நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். எப்படியாகினும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளுக்கும் இந்திய அணி தனது ரன் குவிப்பின் மூலம் ‘செக்’ வைத்திருக்கிறது.
4 பவுண்டரி
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை இன்று இந்திய பேட்ஸ்மேன்கள், புஜாரா, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் நொறுக்கி எடுத்துவிட்டனர். குறிப்பாக கம்மின்ஸ் வீசிய ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி உள்ளிட்ட 4 பவுண்டரிகள்அடித்து ஜடேஜா மிளிர்ந்தார்.
தன்னுடைய பங்கிற்கு ரிஷப் பந்த் 167-வது ஓவரில் ஹேசல்வுட் பந்துவீச்சில் 3 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார். மேலும், லயன் ஓவரில் ஜடேஜாவும், ரிஷப் பந்தும் ஆளுக்கு ஒரு சிக்ஸர் அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கதிகலங்க வைத்தனர்.
ஜடேஜா 81 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சேர்த்த அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார்.
ரிஷப் பந்த் சாதனை
ரிஷப் பந்த் 159 ரன்கள் சேர்த்து, இந்திய விக்கெட் கீப்பர்களின் அதிகபட்ச 3-வது மிகப்பெரிய ஸ்கோரைப் பதிவு செய்தார். இதற்கு முன் தோனி 224 ரன்களும், நயன் மோங்கியா 1996-ம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் கோட்லா மைதானத்தில் 152 ரன்கள் சேர்த்து இருந்தார்.
உணவு இடைவேளைக்குப் பின்புதான் இந்திய அணியின் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது. முதல்நாளான நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 303 ரன்கள் சேர்த்து, உணவு இடைவேளைவரை 389 ரன்கள் அதாவது கூடுதலாக 86 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
ஆனால், அதன்பின் ரிஷப் பந்த், புஜாரா ஜோடி, ரிஷப் பந்த் ஜடேஜா ஜோடி வேகமாக ரன் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடிக்கும் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
மேலும், இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் 284 ரன்களைக் கடந்துவிட்டார் ரிஷப் பந்த்.
2-வது மைல்கல்
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியிலும், ரிஷப் பந்த் சதம் அடித்து இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றார். இப்போது ஆஸ்திரேலியாவிலும் அந்த பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது ஆட்டமிழக்காமல் சதத்தை கடந்து சென்றுவரும் நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்ச ரன்களையும ரிஷப் பந்த் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் கடந்த 1967-ம்ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினீயர் 89 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அதை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்த அணிகளில் விக்கெட் ஒருவரின் அதிபட்சம் என்பது தென் ஆப்பிரிக்காவின் டீ வில்லியர்ஸ் சதம் மட்டுமே. அவர் 2012-ம் ஆண்டில் ஆஸ்திரேலயாவுக்கு எதிராக பெர்த்தில் 169 ரன்கள் சேர்த்ததுதான் இன்று வரை சாதனையாக இருக்கிறது. இப்போது அதற்கு அடுத்தார்போல் சிட்னியில் ரிஷப் பந்த் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தவறிய இரட்டை சதம்
முன்னதாக, முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 130 ரன்களிலும், விஹாரி 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
லயன் வீசிய 102 ஓவரின் கடைசிப் பந்தில் விஹாரி ஷார்ட்லெக் திசையில் பந்து லாபுசாங்கேயிடம் கேட்ச்சாக மாறியது. விஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
130-வது ஓவரில் லயன் பந்துவீச்சுக்கு புஜாரா இரையாகினார். லயனிடமே கேட்ச் கொடுத்து புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தைத் தவறவிட்டார். 6-வது விக்கெட்டுக்கு புஜாரா, பந்த் இருவரும் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
புஜாரா முத்திரை
ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் தனது மிக அதிகபட்ச ஸ்கோரையும் புஜாரா பதிவு செய்துள்ளார். வெளிநாடுகளில் புஜாராவின் அதிகபட்ச ஸ்கோர் 153 ரன்கள்தான். அதை இப்போது கடந்து 193 ரன்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது வீரர் புஜாரா ஆவார். இதற்கு முன் ராகுல் டிராவிட் கடந்த 2003-04ம் ஆண்டிலும், 2014-15-ம் ஆண்டில் விராட் கோலியும் அந்தச் சாதனையை படைத்திருந்தனர்.
குறிப்பாக கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 1200 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார் புஜாரா. இதற்கு முன் ராகுல் டிராவிட் 2003-04ம் ஆண்டில் 1203 பந்துகளைச் சந்தித்திருந்தார். அவருக்குப் பின் 2-வது வீரர் புஜாரா.
விளாசல் கூட்டணி
அடுத்துக் களமிறங்கிய ஜடேஜா, ரிஷப் பந்த்துடன் சேர்ந்தார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் அதன்பின் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். ரிஷப் பந்த் சிறப்பாக பேட் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை 137 பந்துகளில் பதிவு செய்தார்.
ஜடேஜா 89 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன்பின் இருவரும் ஓவருக்கு ஒருபவுண்டரி வீதம் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்கள். ரிஷப் பந்த் 185 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.
சிறப்பாக பேட் செய்துவந்த ஜடேஜா 81 ரன்களில் லயன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஜடேஜா கணக்கில் 7 பவுண்டரிகள் அடங்கும். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 204 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணி 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலியத் தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT