Published : 05 Jan 2019 01:31 PM
Last Updated : 05 Jan 2019 01:31 PM
சிட்னியில் நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று போதுமான வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
இன்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83.3ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்துள்ளது.
இன்னும் இருநாட்கள் இருக்கும் நிலையில், சிட்னியில் நாளை மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதால், ஆட்டம் டிரா ஆவதற்கே பெரும்பாலான வாய்ப்புகள் இருக்கின்றன.
இதனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. கடந்த 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கும் இந்திய அணியின் நீண்டவெற்றி தாகம் இந்த முறை தீரப்போகிறது, கனவு நிறைவேறுகிறது.
கடந்த 1947-48-ம் ஆண்டு லாலா அமர்நாத் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு முதல்முறையாகச் சென்று டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பின் 11 முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. ஆனால், இந்த முறை வரலாறு மாற்றி எழுதப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறது.
இன்று 74 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதுமான அளவு வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83.3ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் இன்னும் 386 ரன்கள் பின்தங்கி உள்ளது.
கம்மின்ஸ் 25 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நாளை 4-ம் நாள் ஆட்டத்தை அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்குவது என நடுவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், மழை வருவதற்கான சாத்தியங்கள் நாளை இருப்பதாகக் கூறப்படுகிறது.
டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
2-ம் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி, 24 ரன்கள் சேர்த்திருந்தது. ஹாரிஸ் 19 ரன்களிலும், கவாஜா 5 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
காலையில் இருந்து விரைவாக கவாஜாவும், ஹாரிஸும் ரன்களைச் சேர்த்தனர். இதனால், 30 நிமிடங்களில் 27 ரன்களும், 30-வது ஓவரில் 100 ரன்களை வேகமாக எட்டியது.
குல்தீப் வீசிய 22 ஓவரில் மிட்விக்கெட்டில் நின்றிருந்த புஜாரவிடம் கேட்ச் கொடுத்து கவாஜா 27 ரன்களில் வெளியேறினார். 72 ரன்களுக்கு முதல் விக்கெட்டை ஆஸி. இழந்தது.
அடுத்தாக ஆல்ரவுண்டர் லபுஷான் களமிறங்கி ஹாரிஸுடன் இணைந்தார். வேகமாக ரன்களைச் சேர்த்த ஹாரிஸ் 67 பந்துகளில் அரைசதம் அடித்தார். உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது ஆஸி.
உணவு இடைவேளைக்குப்பின் ஆஸ்திரேலிய அணியில் அடுத்தடுத்த விக்கெட் சரிவு ஏற்பட்டது. அடுத்த 10 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஜடேஜா வீசிய 43-வது ஓவரில் ஹாரிஸ் கிளீன் போல்டாகி 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷான் மார்ஷ் இந்த முறையும் சொதப்பினார். ஜடேஜா வீசிய 49-வது ஓவரில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த 3 ஓவர்களில் லபுஷான் ஆட்டமிழந்தார். முகமது ஷமி வீசிய 52 ஓவரில் மிட்விக்கெட் திசையில் திசையில் நின்றிருந்த ரஹானேவியிடம் கேட்ச் கொடுத்து 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரஹானே பிடித்த கேட்ச் மிகவும் அற்புதமான கேட்சாகும். ரஹானே, ஷமி கூட்டாகத் திட்டமிட்டு செய்தனர். மிட்விக்கெட்டில் கேட்சாக மாறுமாறு ஷமி பந்துவீச ரஹானே அருமையாகப் பிடித்தார்.
உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்ற வலுவானநிலையில் இருந்து அதன்பின் 30 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஹெட், ஹேன்ட்ஸ்கம்ப் களத்தில் இருந்தனர். இந்த ஜோடியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு ஹெட் இரையாகினார். 67.2-வது ஓவரில் குல்தீப்யாதவிடமே கேட்ச் கொடுத்து ஹெட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் பெய்ன் களமிறங்கினார். நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெய்னுக்கு அதிர்ச்சி அளித்தார் குல்தீப். களமிறங்கி இரு ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பெய்ன், 5 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
7-வது விக்கெட்டுக்கு ஹேண்ட்ஸ்கம்ப்புடன், கம்மின்ஸ் இணைந்தார். இருவரும் ஆட்டநேரம் வரை நிலைத்து விளையாடினார்கள். கடந்த மெல்போர்ன் டெஸ்ட்போட்டியில் நிலைத்து பேட் செய்ததைப் போல் கம்மின்ஸ் ஆடி வருகிறார். கம்மின்ஸ் 25 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களிலும் களத்தில் உள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT