Published : 14 Jan 2019 08:46 AM
Last Updated : 14 Jan 2019 08:46 AM
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்போட்டி மெல்பர்ன் நகரில் இன்று தொடங்கவுள்ளது.
இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான இது வரும் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முன்னணி வீரர்கள் ஜோகோவிச் (செர்பியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (ஸ்விட்சர்லாந்து), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டொமினிக் தியெம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்) உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகிய 4 முன்னிலை வீரர்களும் பட்டம் பெறும் முனைப்பில் உள்ளனர். கடந்த ஆண்டில் ஜோகோவிச் அமெரிக்க ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், ரபெல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் ரோஜர் பெடரர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தனர். எனவே இம்முறை பெடரர், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்கவைக்க கடுமையான முயற்சி செய்வார் என எதிர்பார்க்கலாம்.
மகளிர் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கிறார். 2017 இறுதியில் இவர் குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்கா ஓபனில் கலந்து கொண்டு விளையாடினார். துரதிருஷ்டவசமாக இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தார்.
இதுவரை செரீனா 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் ஒரு பட்டத்தை வென்றால் அதிக கிராண்ட் லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை அமெரிக்காவின் மார்கரெட் கோர்ட்டுடன் பகிர்ந்து கொள்வார் செரீனா.
எனவே இந்த கிராண்ட்ஸ்லாம் போட்டி செரீனாவுக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் பட்டம் பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளதாக செரீனா ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT