Published : 11 Jan 2019 04:00 PM
Last Updated : 11 Jan 2019 04:00 PM

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடங்கள் ‘ஃபுல்’ : இப்போதே ரோஹித் சர்மா திட்டவட்டம்

உலகக்கோப்பை 2019-ற்கு முன்பாக இந்திய அணி 13 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் ஆடும் இந்திய ஒருநாள் அணியே உலகக்கோப்பை போட்டிகள் வரை நீடிக்கும் என்று ரோஹித் சர்மா அபிப்ராயப்படுகிறார்.

 

“உலகக்கோப்பைக்கு முன்னால் நாம் விளையாடவிருக்கும் 13 ஒருநாள் போட்டிகள், கிட்டத்தட்ட உலகக்கோப்பையில் நாம் விளையாடப்போகும் அணிதான். ஓரிடண்டு மாற்றங்கள் இருக்கலாம், அது பார்ம், காயம் காரணமாக இருக்கும். பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. அனைத்தும் தனிப்பட்ட வீரர்களின் பார்மில் தான் உள்ளது.

 

இங்கிலாந்துக்கு (உலகக்கோப்பைக்கு) விமான டிக்கெட் யாருக்கும் உத்திரவாதம் கிடையாது.

 

விளையாடும் 11 வீரர்கள் பற்றி அதற்குள் பேச முடியாது, இன்னும் 4-5 மாதங்கள் உள்ளன, ஐபிஎல் வேறு இடையில் உள்ளது. எனவே நிறைய கிரிக்கெட் ஆடவிருக்கிறோம். எனவே இப்போதே ஆடும் 11 அல்லது 12 வீரர்களை உடனடியாக தீர்மானிக்கவியலாது.

 

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் ஆடியபோது கூட கமின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆடவில்லை. ஆனாலும் 1-4 என்று தோற்றோம். ஆஸ்திரேலிய அணியிடம் இன்னமும் தரமான பந்து வீச்சு உள்ளது. ஆனால் ஸ்டார்க், கமின்ஸ், ஹேசல்வுட் மூவர் கூட்டணிதான் முக்கியப் பவுலர்கள், இவர்கள் இல்லாவிட்டாலும்  அவர்களுக்கு வேலையை முடித்துக் கொடுக்கும் பவுலர்கள் இருக்கவே செய்கின்றனர்.

 

நமக்கு அழுத்தம் கொடுக்கும் பவுலிங் அவர்களிடம் உள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணி குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடி வருகின்றனர், ஆகவே நாம் ஏதோ எடுத்த எடுப்பில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று கூறுவதற்கில்லை.

 

தற்போது இந்திய அணி தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறது, அதை ஒருநாள் தொடருக்கும் கடத்த வேண்டும்” இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x