Last Updated : 23 Jan, 2019 03:30 PM

 

Published : 23 Jan 2019 03:30 PM
Last Updated : 23 Jan 2019 03:30 PM

வெயிலால் டக்வொர்த் முறை: காரசாரமில்லாத நியூசி ஆட்டம்; இந்திய அணி எளிதான வெற்றி: தவண், ஷமி, யாதவ் அபாரம்

ஷிகர் தவணின் பொறுப்பான பேட்டிங், ஷமி, குல்தீப்பின் பந்துவீச்சு ஆகியவற்றால், நேப்பியரில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருதை முகமது ஷமி பெற்றார்.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் மழை காரணமாகவே டக்வொர்த் லூயிஸ் முறை கையாளப்பட்டு இலக்குகள் மாற்றப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல்முறையாக வெயில் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, டக்வொர்த் முறைப்படி, ரன் குறைக்கப்பட்டு இந்தியாவுக்கு இலக்கு 156 ஆக மாற்றப்பட்டது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், வெயில் காரணமாக ஆட்டம் அரைமணிநேரம் நிறுத்தப்பட்டதால், இலக்கு 49 ஓவர்களில் 156 ரன்கள் எனக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து ஆடுகளத்தையும், இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து வீரர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து மிகவும் உயர்வாக ரசிகர்கள் நினைத்திருந்தார்கள். இந்திய அணிக்குப் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நெருக்கடி அளிப்பார்கள் என்று பேசப்பட்டது. ஆனால், காற்றுபோன பலூன் போன நியூசிலாந்து அணியின் பேட்டிங் இருந்தது ஆட்டத்தின் விறுவிறுப்புத்தன்மையை குலைத்துவிட்டது.

பிட்ச் ரிப்போர்ட்டில் முதலில் பேட் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் எளிதாக அடிக்க வாய்ப்பு உண்டு என்று கூறப்பட்டநிலையில், நியூசிலாந்து 160 ரன்களுக்குள் சுருண்டுவிட்டதை என்னவென்பது.

அதேசமயம், ஆடுகளத்தின் தன்மையையும் புதுப்பந்தையும் சரியாகப் பயன்படுத்திய முகமது ஷமி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணிக்குக் கிலி ஏற்படுத்தினார். தன்னுடைய முதல் 4 ஓவர்களிலேயே 2 மெய்டன்களாக வீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறவைத்தார். அதில் தான் வீசிய முதலாவது,2-வது ஓவரிலும் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சரிவில் இருந்து கடைசிவரை நியூசிலாந்து அணியால் மீளமுடிவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

குறிப்பாக இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து ஆட நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அந்த தடுமாற்றத்தின் பலனே விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினார்கள்

சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசிய 39 ரன்கள் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷமி 6 ஓவர்கள் வீசி 2 மெய்டன்க 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்ஸன்(64) தவிர எந்த ஒருவீரும் 25 ரன்களுக்குமேல் தாண்டவில்லை.  வில்லியம்ஸன் ரன்களை கழித்துப்பார்த்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 90 ரன்களைத் தாண்டாது.

இந்திய அணியைப் பொருத்தவரை ஆஸ்திரேலியத் தொடரில் பேட்டிங் ஃபார்மில்லாமல் தடுமாறி வந்த ஷிகர் தவண் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்துக்கு மாறியுள்ளார். 103 பந்துகளைச் சந்தித்து 75 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

10ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி ரோஹித், தவண் நிதானமாக பேட் செய்தனர் ஆனால், வெயில்காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியபின் ரோஹித் சர்மா 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு தவணுடன், கோலி இணைந்தார். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ஆடி சில பவுண்டரிகளை அடித்தனர். ஆனால், நியூசிலாந்து வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் பவுண்டரிகள் அடிப்பதைக் குறைத்து, ஒரு ரன், இரு ரன்களாகச் சேர்த்தனர். இதனால்,ஸ்கோர் சீராக உயர்ந்து வந்தது.

சிறப்பாக ஆடிய தவண் ஒருநாள் அரங்கில் தனது 26-வது அரைசதத்தை நிறைவு செய்தார். மேலும், ஒரு நாள் போட்டியில் 118 இன்னிங்ஸில் 5 ஆயிரம் ரன்களை எட்டினார். கடந்த 9 இன்னிங்ஸ்களுக்குப் பின் தவண் இப்போது அரைசதம் அடித்துள்ளார்.

அரைசதம் நோக்கி முன்னேறிய கோலி 45 ரன்கள் சேர்த்த நிலையில் பெர்குசன் பந்துவீச்சில் லேதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு வந்த ராயுடு, தவணுடன் சேர்ந்தார். வந்த வேகத்தில் அதிரடியாக ராயுடு இரு பவுண்டரிகள் விளாசினார். 34.5 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கான 156 ரன்களை எட்டியது. ஷிகர் தவண் 103 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தும், ராயுடு 13 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x