Published : 03 Jan 2019 05:22 PM
Last Updated : 03 Jan 2019 05:22 PM

மயங்க் அகர்வால் போல் ஒரு அறிமுக வீரர் நமக்குக் கிடைப்பாரா? முன்னாள் ஆஸி. கேப்டன் மார்க் டெய்லர் ஆதங்கம்

ஆஸ்திரேலிய உள்நாட்டுக் கிரிக்கெட்டில் 40 ரன்கள் சராசரி வைத்திருக்கும் வீரர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை, இந்த மாதிரி ஒரு நிலைமை ஆஸ்திரேலிய அணிக்கு வந்ததில்லை, இதற்குக் காரணமாக பிக்பாஷ் உள்ளிட்ட டி20 தொடர்களை நிபுணர்கள் குறை கூறினாலும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் இந்தக் கருத்தை ஏற்பதில்லை.

ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன் யார் என்றால் உடனே சாதனைகளை வைத்து ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் என்று கூறுவார்கள், ஆனால் அணி உண்மையில் மாற்ற நிலையில் இருந்த போது மார்க் டெய்லர் ஒரு அணியை மிகப்பிரமாதமாக உருவாக்கி அந்த அணியைத்தான் ஸ்டீவ் வாஹ் கையில் கொடுத்தார் என்பது பலரும் அறியாதது. 

கேப்டன்சி உத்தி, சிந்தனை, கள வியூகம், அணித்தேர்வு என்று கேப்டன்சி தகுதியை அளவிட ஏகப்பட்ட அளவுகோல்கள் உள்ளன, வெறும் வெற்றிக்கணக்கும் நம்பரும் போதாது, அப்படிப்பார்த்தால் ஆலன் பார்டர், மார்க் டெய்லருக்குப் பிறகு பல அளவுகோல்களில் மைக்கேல் கிளார்க்தான் சிறந்த ஆஸ்திரேலிய கேப்டனாகத் திகழ்வார்.

இந்நிலையில் நெருக்கடியில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி அடுத்து வரும் ஆஷஸ் தொடர் பற்றி இப்போதே நடுங்கத் தொடங்கியுள்ளது.

அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு எழுதிய பத்தியில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளார். அதிலிருந்து வந்துள்ள மயங்க் அகர்வால் போன்ற ஒரு அறிமுக வீரர் மெல்போர்னில் செய்ததை எந்த ஒரு ஆஸ்திரேலிய அறிமுக வீரராவது செய்ய முடியுமா? என்று கேட்கிறார்.

 

“பாக்சிங் டே அன்று ஆஸ்திரேலிய பந்து வீச்சை மயங்க் அகர்வால் கையாண்ட விதத்தைப் பார்த்தேன். அப்போது என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது   ‘அறிமுக டெஸ்ட்டில் இவ்வாறு ஆடும் வீரர் நம்மிடம் உள்ளனரா?’ என்பதே அந்த கேள்வி. இந்திய அணி தொடக்க வீரர்களுக்கான நெருக்கடியில் இருந்த போது நேராக வந்து இறங்கி பிரமாதப்படுத்தினார் அகர்வால்.

 

இவர் தன் முதல் தர கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இந்திய முதல் தர கிரிக்கெட்டில் தனது ரன் குவிப்பின் மூலம் தன் இடத்தை அவர் சம்பாதித்து வந்துள்ளார்.  அகர்வால் இந்திய அணியின் 4வது தொடக்க வீரர், விஜய், ராகுல், பிரித்வி ஷா ஆகியோருக்குப் பிறகு அழைக்கப்பட்டுள்ளார்.  அகர்வாலிடம் நல்ல பேட்டிங் உத்தி உள்ளது, அதுதான் அவருக்கு டெஸ்ட் ரன்களைப் பெற்று தருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் இப்படிப்பட்ட ஒன்று தேவை என்று கருதுகிறேன்.

 

பிக்பாஷ் டி20 லீகுகள் நம் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்பது வழக்கமாக கூறும் ஒரு விட்டெறி கூற்றுதான்.” இவ்வாறு அவர் தன் நீண்ட பத்தியில் ஒரு இடத்தில் மயங்க் அகர்வால், இந்திய உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு ஆகியவற்றை விதந்தோதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x