Published : 28 Jan 2019 03:55 PM
Last Updated : 28 Jan 2019 03:55 PM
10 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை அந்நாட்டிலேயே 3-0 என்ற கணக்கில் வென்று 2-வது முறையாகச் சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
கடந்த 2009-ம் ஆண்டு தோனி தலைமையில் நியூசிலாந்து சென்றிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனைபடைத்தது. அதற்கு முன் நியூசிலாந்தில் ஒருநாள், டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருந்தது. 2014-ம் ஆண்டு தொடரில் 4-0 என்ற தோல்வி அடைந்த நிலையில், அந்தத் தோல்விக்கு இப்போது இந்திய அணி பழிதீர்த்துக்கொண்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக வங்கதேசம் ஆடி இருந்தால்கூட ஓரளவுக்கு நெருக்கடி கொடுத்து ஆடி இருப்பார்கள், ஆட்டத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றிருப்பார்கள். ஆனால், நியூசிலாந்து வீரர்கள் முதல் போட்டியில் இருந்தே வில்லியம்ஸன் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலாக பேட் செய்தனர். பந்துவீச்சிலும் மிகவும் எதிர்பார்க்கபட்டநிலையில் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
அதேசமயம், இந்திய அணி பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் நியூசிலாந்து அணியைக் கீழே சாய்க்கப் பெரிதாக சிரமம் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு சிறந்த அணி, திறமையான வீரர்களைக் கொண்ட அணி எந்த அளவுக்கு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டுமோ அதை கச்சிதமாக எடுத்துக்கொண்டனர். அருமையான தொழில்முறைக் கிரிக்கெட்டுக்கு உதாரணமாக இந்திய அணியின் பேட்டிங்கும்,பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது.
தொடக்க வீரர்கள் சொதப்பினால் நடுவரிசை வீரர்கள் அணியைத் தாங்குவது, அல்லது தொடக்க ஜோடி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பது என அணியின் கூட்டுழைப்பு கண்கூடாகத் தெரிந்தது. பந்துவீச்சிலும் தொடக்கச் சரிவுக்கு ஷமியும், புவனேஷ்குமாரும் போடும் பிள்ளையார் சுழியை அடுத்துவரும் சாஹல், குல்தீப் பின்பற்றி எதிரணியை சிதைக்கத் தயங்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சிலும்,பேட்டிங்கிகலும் தேர்ந்து உலகக்கோப்பைப் போட்டிக்கு ஏறக்குறையத் தயாராகி இருக்கிறதுஇந்திய அணி.
மவுண்ட்மவுங்கினியில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று பகலிரவாக நடந்த 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 244 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா 62 ரன்களும், கேப்டன் கோலி 60 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். தினேஷ் கார்த்திக் 38 ரன்களிலும், ராயுடு 40 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஒட்டுமொத்தமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றி அணியின் கூட்டுழைப்புதான். பிசிசிஐ தடைநீக்கத்துக்குப்பின் இன்று களம்கண்ட ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் வீசிய 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் கிராண்ட்ஹோமேக்கு பதிலாக சான்ட்னர் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு பதிலாகப் பாண்டியா வாய்ப்புப் பெற்றார்.
விக்கெட் சரிவு
நியூசிலாந்து அணியில் 59 ரன்களுக்குள் தொடக்க வீரர்கள் கப்தில்(13), முன்ரோ(7) வில்லியம்ஸன்(28) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெய்லர், லாதம் ஆகியோர் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 119 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இதில் டெய்லர் 7 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு 93 ரன்களில் ஆட்டமிழந்தார். லாதம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் ஆட்டமிழந்தபின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கடைசி 65 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்
244 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஷிகர் தவண், ரோஹித் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்த அதிரடியாக ஆரம்பித்த ஷிகர் தவண் 6 பவுண்டரிகள் உள்ளிட்ட 28 ரன்கள் சேர்த்த நிலையில், போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு கேப்டன் கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். நேரம் செல்லச் செல்ல ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்து, சிக்ஸருக்கும், பவுண்டரிகளையும் விளாசினார்.
ரோஹித் சர்மா 63 பந்துகளிலும், கோலி 59பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். கோலிக்கு இது 49-வது அரைசதமாகும். ரோஹத் சர்மாவுக்கு 39-வது அரைசதமாக அமைந்தது.
3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 77 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து வந்த ராயுடு, கோலியுடன் இணைந்தார். சிறிதுநேரமே நிலைத்திருந்த கோலி, 60 ரன்கள் (6பவுண்டரி, ஒருசிக்ஸர்) சேர்த்து போல்ட் பந்துவீ்சசில் வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன், தினேஷ் கார்த்திக்சேர்ந்தார்.. தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 38 ரன்கள் விளாசினார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில் 38 ரன்களும், ராயுடு 40 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT