Published : 14 Jan 2019 08:47 AM
Last Updated : 14 Jan 2019 08:47 AM

கோவையில் இன்று `ஹீரோ ஐ லீக்’ கால்பந்து: சென்னை சிட்டி எஃப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதல்

கோவையில் இன்று நடைபெற உள்ள `ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், சென்னை சிட்டி எஃப்.சி. அணியும் (சிசிஎஃப்சி), கயூஸ் ஈஸ்ட் பெங்கால் அணியும் மோதவுள்ளன.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில், `ஹீரோ ஐ லீக் 2018-2019’ கால்பந்துப் போட்டி, நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள சென்னை சிட்டி எஃப்.சி. அணி ஏற்கெனவே 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்த அணி, 3 போட்டிகளை டிரா செய்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியது.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டிகளில், மணிப்பூர் நெரோகா அணி, புவனேஸ்வர் இந்தியன் ஏரோஸ் அணி,மேகாலயா ஷில்லாங் லஜோங் அணி, கோகுலம் கேரளா அணிகளை வென்ற சென்னை சிட்டி எஃப்.சி. அணி, கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் டிரா செய்தது. மேலும், ரியல் காஷ்மீர் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

மொத்தம் 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள சென்னை சிட்டி எஃப்.சி. அணி, கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜன. 14) மாலை 5 மணியளவில் நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி, 10 ஆட்டங்களில் விளையாடி, 19 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து சிசிஎஃப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, `வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதுகிறோம். எனினும், எங்கள் அணிக்கு எந்த அழுத்தமும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளோம். உள்ளூர் மைதானம் என்பதால், போட்டி எங்களுக்கு சாதகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது" என்றார்.

ஈஸ்ட் பெங்கால் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அலெஜாண்ட்ரோ மெனான்டெஸ், "இந்த ஆட்டத்தில், பலம்வாய்ந்த அணியை எதிர்கொள்கிறோம். எனினும், வெற்றி-தோல்வி என்பது சகஜமானது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் விளையாடுவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x