Published : 04 Sep 2014 11:54 AM
Last Updated : 04 Sep 2014 11:54 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், பிரான்ஸின் கேல் மான்பில்ஸும் மோதுகின்றனர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பௌதிஸ்டா அகட்டை தோற்கடித்தார். கடந்த 11 ஆண்டுகளில் 10-வது முறையாக அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் ஃபெடரர்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள கேல் மான்பில்ஸ் 7-5, 7-6 (6), 7-5 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்தார்.
அமெரிக்க ஓபனில் 2-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் மான்பில்ஸ், “ஆஷே மைதானத்தில் நான் பெற்ற முதல் வெற்றி இது. நியூயார்க்கில் விளையாடுவதை விரும்புகிறேன். இங்கு பெரிய அளவில் ஆற்றல் கிடைக்கிறது. அது நான் சிறப்பாக விளையாட உதவுகிறது” என்றார்.
போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிச் தீமை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். பெர்டிச் தனது காலிறுதியில் குரேஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்க வுள்ளார்.
போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் சிலிச் 5-7, 7-6 (3), 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை தோற்கடித்தார். 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியவரான சிலிச், சைமனுக்கு எதிராக 23 ஏஸ் சர்வீஸ்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் வோஸ்னியாக்கி
மகளிர் ஒற்றையர் அரையிறு தியில் டென்மார்க்கின் வோஸ்னி யாக்கியும், சீனாவின் பெங் ஷுவாயும் மோதவுள்ளனர். முன்னாள் முதல் நிலை வீராங்கனையான வோஸ்னியாக்கி தனது காலிறுதியில் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானியை வீழ்த்தினார். 2011-க்குப் பிறகு இப்போதுதான் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் வோஸ்னி யாக்கி.
பெங் ஷுவாய் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். லீ நா, ஜீ ஜெங் ஆகியோருக்கு அடுத்தபடி யாக கிராண்ட்ஸ்லாமில் அரையிறு திக்கு முன்னேறிய 3-வது சீன வீராங்கனை என்ற பெருமை பெங் ஷுவாய்க்கு கிடைத்தது.
அரையிறுதியில் சானியா ஜோடி
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடியை எதிர்த்து விளையாடிய கஜகஸ்தானின் ஜெரினா டியாஸ்-சீனாவின் இ பான் ஸு ஜோடி காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியது. அப்போது 6-1, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த சானியா ஜோடி, அரையிறுதிக்கு முன்னேறியது.
போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சானியா ஜோடி, அடுத்ததாக ஸ்விட்சர்லாந் தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-இத்தாலி யின் பிளேவியா பென்னட்டா ஜோடியை சந்திக்கிறது. மார்ட்டினா-பிளேவியா ஜோடி தங்களின் காலிறுதியில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த வீட்டா பெஸ்கே-கேத்தரினா ஸ்ரீ போட்னிக் ஜோடியை வீழ்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT