Published : 27 Sep 2014 10:52 AM
Last Updated : 27 Sep 2014 10:52 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மூத்த வீரரான யூனிஸ்கான், அணித் தேர்வாளர்களை கடுமையாக சாடியுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை கட்டமைக்கத் தவறினால் அதற்கு தேர்வாளர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான யூனிஸ்கான், 15 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அதில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய யூனிஸ்கான், உறவினரின் மரணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குத் திரும்பினார். இந்த நிலையில் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.
தேர்வாளர்களே பொறுப்பு
இதனால் கடும் கோபமடைந்த யூனிஸ்கான் மேலும் கூறியதாவது: இனி எனக்கு எதிர்காலம் இல்லை என்று தேர்வாளர்கள் சொன்னால், அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன். டெஸ்ட் போட்டிக்கும் என்னை தேர்வு செய்ய வேண்டாம். அடுத்த 5 மாதங்களுக்கு நான் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன். ஆனால் உலகக் கோப்பைக்கு முன்பு புதிய அணியை கட்டமைக்க தவறினால் அதற்கு தேர்வாளர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
வேதனையளிக்கிறது
மூத்த வீரர்களை பாகிஸ்தான் வாரியம் நடத்தும்விதம் வேதனையளிக்கிறது. நான் உடற்தகுதியுடன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் மொயீன் கான் எப்படி கூறலாம். எந்த அடிப்படையில் அவர் என்னைப் பற்றி அவ்வாறு கூறினார். 36
வயதாகிவிட்டால் நான் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமா? 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சாதிக்கவில்லையா? நான் விளையாடிய காலம் முழுவதும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக 100 சதவீத பங்களிப்பை கொடுத்திருக்கிறேன். ஆனால் இப்போது என்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள்.
என்னை அணியில் இருந்து நீக்குவதற்கு இவர்கள் எந்த விதிமுறையை பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு போட்டியில் விளையாட உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். நீங்கள் ஓய்வு பெற்றுவிடுங்கள் என என்னிடம் கூறியிருந்தால் நான் அதை செய்திருப்பேன். அதைவிட்டுவிட்டு அணியில் இருந்து நீக்குவது சரியானதல்ல.
மூத்த வீரர்களுக்கு அவமதிப்பு
மூத்த வீரர்களை மதிக்காமல் உலகக் கோப்பைக்கான அணியைகட்டமைப்பதை பற்றி பேசிக் கொண்டிருப்பதை ஏற்க முடியாது. இதை என்னுடைய தவறு என தேர்வாளர்கள் கூறினால், பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டாம், அதைப் பற்றிய சிந்திக்ககூட வேண்டாம் என்றுதான் இளம் வீரர்களுக்கு அறிவுரை கூறுவேன். முகமது யூசுப், மியான்தத், இன்ஸமாம் போன்றவர்களையும் அசிங்கப்படுத்தித்தான் அனுப்பினார்கள்.
தேர்வுக்குழு தலைவர் மொயீன் கான் இப்படி செயல்படுவதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. அவரும் மூத்த வீரராக இருந்தவர். அவர் எப்படி வெளியேற்றப்பட்டார் என்பது அவருக்குத் தெரியும். அதனால் என் விஷயத்திலாவது மூத்த வீரர் என்ற விஷயத்தை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.
மேற்கண்ட விஷயங்களை பேசியதால் விளக்கம் கேட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. எந்த அடிப்படையில் அவர்கள் எனக்கு நோட்டீஸ் அனுப்ப முடியும்? என்னுடன் கிரிக்கெட் வாரியம் செய்த ஒப்பந்தத்தின் நகலை கடந்த 5 மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை தரவில்லை. அதில் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT