Last Updated : 26 Dec, 2018 08:49 AM

 

Published : 26 Dec 2018 08:49 AM
Last Updated : 26 Dec 2018 08:49 AM

அசத்தல் அறிமுகம்: அகர்வால் அரைசதம்; இந்தியா நிதான ஆட்டம் : 8 ஆண்டுகளுக்குப்பின் புதிய சாதனை

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் மயங்க் அகர்வால் நிதானமாக பேட் செய்து அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியில் தனக்கு கிடைத் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நிதானமாக பேட் செய்து வருகிறார் மயங்க் அகர்வால். குறிப்பாக லயான் பந்துவீச்சு மூத்த வீரர்கள் திணறி வரும்போது, அகர்வால் அனாசயமாக எதிர்கொண்டு விளையாடி வருவது சிறப்பாகும்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அல்லது பாக்ஸிங்டே டெஸ்ட் மெல்போர்னில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு இருந்ததுபோல், தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி களமிறங்கினர். மெல்போர்ன் மைதானத்தில் பந்துகள் நன்கு எழும்பியும், வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால், இருவரும் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை நிதானமாகவே எதிர்கொண்டனர்.

முரளிவிஜய், ராகுல் போல் அவசரப்பட்டு எந்த பந்தையும் தொட்டு விக்கெட்டை பறிகொடுக்கவில்லை. ஹனுமா விஹாரி தனது முதல் ரன்னை 25 பந்துகள் சந்தித்தபின்தான் எடுத்தார்.

வெளிநாடுகளில் இந்த ஆண்டு நடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் 5-வது தொடக்க ஜோடி மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டனர். ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் என அனைவரின் பந்துவீச்சில் மோசமான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து இருவரும் அடித்தனர்.

இருவரும் நிதானமாக பேட் செய்து வருவதைப் பார்த்து வெறுப்படைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் 19-வது ஓவரில் கம்மின்ஸ் ஒரு பவுன்ஸர் வீசினார். அது விஹாரியின் ஹெல்மெட்டில்பட்டு எகிறியது. அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்சிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேறினார் விஹாரி. முதல்விக்கெட்டுக்கு இருவரும் 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 5 இன்னிங்ஸில் தொடக்க ஜோடி சேர்த்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஆண்டுகளுக்குப்பின்

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின் தொடக்க ஜோடி அதிகமான பந்துகளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளையாடியபோது சந்தித்தது இதுதான் முதல்முறையாகும். கடைசியாக சென்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக், கம்பீர் தொடக்க ஜோடி 29.3 ஓவர்கள் நின்று பேட் செய்தனர்.

அதன்பின் 8 ஆண்டுகளுக்குப் பின் வெளிநாடுகளில் இன்றுதான் 18.5 ஓவர்கள் நின்று இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், விஹாரி ஜோடி நின்று பேட் செய்துள்ளனர்.

அடுத்து புஜாரா களமிறங்கி, அகர்வாலுடன் சேர்ந்தார். இருவரும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றார்போல் நிதானமாக விளையாடினார்கள். மயங்க் அகர்வாலை இத்தனை நாட்களா இந்திய அணி பயன்படுத்திக்கொள்ளாமல் வீணடித்துவிட்டது என்பதை அவரின் பேட்டிங் திறமையால் உணர்த்திவிட்டார்.

அனுபவம் மிக்க பேட்ஸ்மேன் போல் கால்களை நகர்த்தியும், பிரன்ட்புட் ஷாட்களையும், பேக்புட் ஷாட்களையும் ஆடி பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டார். அதிலும் லயன் பந்துவீச்சை மிகவும் அனாசயமாக எதிர்கொண்டார்.

லயன்பந்துவீச்சை இறங்கிவந்து ஆடுவதால், மயங்க் அகர்வாலுக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் லயன் திணறினார். இதனால், உணவுஇடைவேளை வரை 6 ஓவர்கள் வரை கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டனர்.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்களுக்குசேர்த்திருந்தது. உணவு இடைவேளே முடிந்து வந்தவுடன் லயன் பந்துவீசினார். அந்த ஓவரில் மிட்ஆப் திசையிலும், கவர் டிரைவிலும் இரு பவுண்டரிகளை அடித்து மயங்க் அகர்வால் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.

தற்போது 40 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 86 ரன்களுடன் இந்திய அணி உள்ளது. மயங்க் அகர்வால் 53 ரன்களுடனும், புஜாரா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x