Published : 27 Dec 2018 01:45 PM
Last Updated : 27 Dec 2018 01:45 PM
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது.
புஜாரா, கோலி, ரோஹித் சர்மா அரை சதம் அடித்தது முதல் இன்னிங்ஸில் முத்தாய்ப்பாக அமைந்தது. ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய 215 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இன்று 228 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் ரன் சேர்க்கும் வேகம் இன்னும் அதிகரித்து இருந்தால் 500 ரன்களை எட்டியிருக்கும். முதல் நாள் ஆட்டத்திலும், இன்றைய ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய வேகத்திலும் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களுக்கு 8 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் ஹாரிஸ் 5 ரன்களுடனும், ஆரோன் பிஞ்ச் 3 ரன்களுடனும் உள்ளனர்.
மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி ஏராளமான பீல்டிங்குகளை கோட்டை விட்டனர். ரோஹித் சர்மா, ரஹானேவின் கேட்சுகளை நழுவவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மெல்போர்னில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது.
புஜாரா 68 ரன்களுடனும், கோலி 47 ரன்களுடனும் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரத்திலேயே விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 48-வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
முதல் நாள் ஆட்டத்தைப் போலவே புஜாராவும், கோலியும் நிதானமாகவே ரன்களைச் சேர்த்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தினர். பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த லயன் சுழற்பந்துவீச்சை புஜாரா எளிதாக விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டியில் லயன் பந்துவீச்சு எடுபடாமல் போனது.
சிறப்பாக பேட் செய்த புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 17-வது சதத்தை 280 பந்துகளில் நிறைவு செய்தார். வி.வி.எஸ். லக்ஷ்மனின் 17 சாதனையையும் அவர் சமன் செய்தார். கங்குலியின் 16 டெஸ்ட் சதங்கள் சாதனையையும் முறியடித்தார் புஜாரா.
சதத்தை நோக்கி கோலி முன்னேறினார். ஆனால், ஸ்டார்க் வீசிய ஓவரில் தேர்டு மேன் திசையில் நின்றிருந்த பிஞ்சிடம் கேட்ச் கொடுத்துக் கோலி 82 ரன்களில் வெளியேறினார். இவர் கணக்கில் 9 பவுண்டரிகள் அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 170 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு ரஹானே களமிறங்கி, புஜாராவுடன் இணைந்தார். சிறிதுநேரமே நீடித்த புஜாரா ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் ஓவரில் க்ளீன் போல்டாகி புஜாரா 319 பந்துகளில் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 10 பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட சதமாகும்.
5-வது விக்கெட்டுக்கு ரஹானே, ரோஹித் சர்மா இருவரும் நிதானமாக பேட் செய்தனர். மெல்போர்ன் டெஸ்ட்டில் சதம் அடிப்பேன் என்று உறுதிபூண்டதால், ரஹானேவின் ஆட்டம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லயன் சுழலில் எல்பிடபிள்யு முறையில் ரஹானே 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்த ரிஷப் பந்த், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். ரோஹித் சர்மா அரை சதம் அடிக்கும் முன்பே ஆட்டமிழந்து இருக்கக்கூடும். ஆனால், அவர் அடித்த பந்தை லயன் கேட்சை நழுவவிட்டால், அந்த வாய்ப்பை ரோஹித் சர்மா பயன்படுத்திக்கொண்டார்.
அவ்வப்போது பவுண்டரி அடித்து விளையாடிய ரோஹித் சர்மா 97 பந்துகளில் அரை சதம் அடித்தார். ரிஷப் பந்த் 39 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டார்க் பந்துவீச்சில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 6-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் வெளியேறினார்.
169.4 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்திருந்தபோது, டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT