Last Updated : 25 Dec, 2018 05:13 PM

 

Published : 25 Dec 2018 05:13 PM
Last Updated : 25 Dec 2018 05:13 PM

நாளை பாக்ஸிங்டே டெஸ்ட்: அகர்வால், ஜடேஜாவுடன் களமிறங்கும் இந்திய அணி: சவால் விடுக்கும் ஆஸி.

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெல்போர்ன் பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

வெல்லும் முயற்சியுடன் மயங்க் அகர்வால், ரவிந்திர ஜடேஜாவுடன் இந்திய அணி களமிறங்குகிறது.அதேபோல, ஹேண்ட்ஸ்கம்ப்க்கு பதிலாக ஆஸ்திரேலிய அணி மிட்ஷெல் மார்ஷை களமிறக்குகிறது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் இருக்கின்றன.

இந்தச் சூழலில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்ற அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் 3-வது டெஸ்ட், பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்திய அணி சில துணிச்சலான முடிவுகளை இந்த போட்டியில் எடுத்துள்ளது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய தொடக்க ஜோடி கே.எல்.ராகுல், முரளி விஜய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ரவிந்திரஜடேஜா, மயங்க் அக்ரவால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த் 2 டெஸ்ட் போட்டியில் ராகுல் 48 ரன்களும், விஜய் 49 ரன்களும் சேர்த்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த ஜோடி 95 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது வெட்கக்கேடு, அதில் அதிகபட்சமே 20 ரன்கள்வரை நிலைத்து நின்றுள்ளனர்.

ஆதலால், இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க்அகர்வால், விஹாரி அல்லது மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப ரவிந்திர ஜடேஜா கொண்டுவரப்பட்டுள்ளார். இவரின் வருகை பந்துவீச்சையும், பேட்டிங்கையும் ஓரளவுக்கு சமப்படுத்தும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகவே இருந்தது. பும்ரா, முகமது ஷிமி, இசாந்த் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவால்விடுக்கும் வகையில் பந்துவீசுகின்றனர். பேட்டிங்கில் மட்டுமே பலவீனமாக இருந்த நிலையில், அதை நிரப்ப ஜடேஜா, மயங்க் அகர்வால் வந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இந்தக் கூட்டணி எவ்வாறு விளையாடும் என்பது களத்தில்தான் தெரியும்.

விராட் கோலி இன்றைய நேர்காணலில் கூறுகையில்கூட, பந்துவீச்சாளர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். பேட்ஸ்மேன்கள்தான் கூட்டுழைப்பை அதிகப்படுத்த வேண்டும். யாரையும் தனிப்பட்டு சொல்லவில்லை, ஆனால், சிறப்பாக பேட் செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார். ஆதலால், பேட்டிங்கில் வீரர்கள் நிலைத்து ஆடுவது அவசியமாகும்.

ரோஹித் சர்மா ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினாலும் நம்பிக்கை ஏற்படுத்தவில்லை, புஜாரா, ரஹானே, விஹாரி நிலைத்து பேட் செய்வது அவசியம். ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் அவசரப்பட்டு அடித்து ஆட்டமிழந்து விடுகிறார். பொறுமையுடன் களத்தில் நின்று விளையாடுவது அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும், டெஸ்ட் போட்டிகளில் பொறுமை மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை கையில் ஏற்பட்டிருந்த காயம் குணமாகி ஆரோன் பிஞ்ச் அணிக்குத் திரும்பியுள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய கேட்ச் பிடித்த ஹேண்ட்ஸ் கம்ப் நீக்கப்பட்டு, மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். விராட் கோலிக்கு பிடித்த கேட்ச்சால் ஹேண்ட்ஸ் கம்ப் நீக்கப்படவில்லை, கடந்த 4 இன்னிங்ஸில் மொத்தம் 34 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது நீக்கத்துக்கு முக்கியக்காரணமாகும்.

பந்துவீச்சில் நாதன் லயன், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இந்திய அணிக்குச் சவால் விடுக்கும் வகையில் பந்துவீசி வருகின்றனர். அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் நாதன் லயன் பந்துவீச்சில் தொடர்ந்து ஆட்டமிழப்பது ஆய்வுக்குரியதாகும். ஆதலால் லயன் பந்துவீச்சை எதிர்கொள்ளும் வகையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தயாராகி இருப்பார்கள் என்று நம்பலாம்.

'பிட்ச்' எப்படி?

மெல்போர்ன் ஆடுகளம் மோசமாக இருக்கிறது என்று ஐசிசி கடந்த ஆண்டு சான்று அளித்தது கடும் விவாதப்பொருளானது. ஆதலால், ஆடுதகளத்தை நன்கு பராமரித்துள்ளனர். முதலில் பந்துவீசும் அணியை உற்சாகப்படுத்தும் அளவுக்கு, அதாவது விரைவாக விக்கெட் விழும்வகையில் புற்கள் நிறைந்தவாறு ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நேரம் செல்ல செல்ல பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் நாளைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த மெல்போர்ன் ஆடுகளத்தில் கடந்த 5 போட்டிகளில் இந்திய அணி, தோல்வி, அதன்பின் தொடர்ந்து 3 வெற்றி, ஒரு தோல்வி என்ற கணக்கில் உள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணி வெற்றி இரு தோல்விகள், டிரா, ஒரு தோல்வி எனப் பாதகமான வரலாற்றுடன் இருக்கிறது.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), அஜின்கயே ரஹானே, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சட்டீஸ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷ்ப் பந்த், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா

ஆஸி. அணி விவரம்

ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்ஷெல் மார்ஷ், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x